1) உசூலுல் ஃபிக்ஹ் பற்றிய கல்வியானது ஒரு முஜ்தஹித் அஹ்காம் ஷரீஆக்களை வஹியிலிருந்து தேர்ந்தெடுக்கும்; அல்லது பிரித்தெடுக்கும் நோக்கத்திற்காக அவற்றை பிழையாக செய்து விடக்கூடாது என்ற அக்கறையில் பின்பற்றுகின்ற வழிமுறை (மன்ஹஜ்) பற்றிய கல்வியாகும். எனவே அவர் பயன்படுத்துகின்ற அடிப்படைகள்(உசூல்கள்) அல்லாஹ்(சுபு)வின் வஹியிலிருந்து, அதாவது ஷரீஆ மூலாதாரங்களிலிருந்து நிர்ணயிக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும். அந்த உசூல்கள், அவர் மூலாதாரங்களிலிருந்து சட்டங்களை வகுக்கின்ற பணிக்கு உதவியாக, வஹியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த கட்டுப்பாடுகளாக தொழிற்படுகின்றன.
அதேநேரத்தில் கவாஇத் அல் பிக்ஹிய்யாஹ், அதாவது பிக்ஹ் அடிப்படைகளைப் பொருத்தமட்டில் – அவை ஒரே தன்மையை அல்லது கருத்தை தமக்குள் பகிர்ந்து கொள்ளும் பல பகுதியளவான பிக்ஹ்க்களை(சட்டங்களை) ஒன்று சேர்க்கின்ற அடிப்படைகளாகும். எனவே கவாஇத் அல் பிக்ஹிய்யாக்கள் பிக்ஹின் பரப்புடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. உசூலுல் பிக்ஹின் பரப்புக்குள் அவை உள்ளடங்க மாட்டாது.
2) உசூலுல் பிக்ஹை சேர்ந்த காயிதா (அடிப்படை) என்பது ‘ஆம்மஹ்’ – அதாவது ‘பொதுவானது’ என்ற பிரிவைச் சேர்ந்தது. அந்தக் காயிதா பல்வேறுபட்ட ஆதாரங்களின் மீதும், சட்டங்களின் மீதும் பயன்படுத்தப்படலாம். அந்த ஆதார மூலங்கள் அல்குர்ஆனாக, ஸுன்ஆவாக, இஜ்மாவாகவோ இருக்கலாம் அல்லது அந்தச் சட்டங்கள் இபாதத்துடனோ, கொடுக்கல் வாங்களுடனோ (முஆமலாத்) அல்லது உகூபாத்துடனோ தொடர்புடையதாக இருக்கலாம்.
அதனைப் புரிந்து கொள்ள பின்வரும் உசூலி காயிதாவையும், அது ஆதாரங்களில் பிரயோகிக்கப்படுவதையும் நோக்குங்கள்…
உசூலி காயிதா:
مَا لَا يَتِمُّ الوَاجِب إِلَّا بِهِ فَهُوَ وَاجِب
“ஒன்றை நிறைவேற்றாதவிடத்து ஒரு வாஜிப் பூர்த்தியாகாதிருக்குமானால் அந்த ஒன்றும் வாஜிபாகும்”
ஆதாரம்: (பகறா:187)
ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
“பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்…”(அல் பகரா:187)
மேலே குறிப்பிடப்பட்ட காயிதா நோன்பு தொடர்பான மேற்படி குர்ஆன் ஆயத்தில் பயன்படுத்தப்பட்டால், நோன்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அதன் ஒரு பகுதி இரவுப்பொழுதுக்குள் நுழைந்திருப்பது வாஜிபாகும் என்ற ஹுக்மை இந்த காயிதா பெற்றெடுக்கிறது என்பதை அவதானிக்கலாம்.
ஏனெனில் நோன்பு என்ற கடமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அதற்கு முழு பகல் பொழுதும் நோன்பு நோற்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பகல் பொழுது முழுமையாக முற்றுப்பெற்றுவிட்டது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். பகல் பொழுது முற்றுப்பெற்றுவிட்டது என்பதை நாம் நிச்சயமாக உறுதிப்படுத்த, அது இராப்பொழுதுக்குள் சிறிதளவேனும் நுழைந்திருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும். இதனால் அந்த நுழைவு கடமையாகி விடுகிறது. அது மிகச்சொற்பமான நேரமாக இருந்தாலும் சரி.
இதன்படி அந்த(சொற்பப்பகுதி) இராப்பொழுதையும் சேர்த்து நோன்பு நோற்பது வாஜிபாகும். ஏனெனில் சூரியன் மறையும் வரையில் பகல்பொழுது முழுதும்; நோன்பு நோற்பது என்பது, அந்த இராப்பொழுதையும் சேர்த்து நோன்பு நோற்காத நிலையில் பூர்த்தியாகாது.
“ஒன்றை நிறைவேற்றாதவிடத்து ஒரு வாஜிப் பூர்த்தியாகாதிருக்குமானால் அந்த ஒன்றும் வாஜிபாகும்” என்ற அதே காயிதாவை இஸ்லாமிய அரசொன்றை அதாவது கிலாஃபத்தை நிலைநாட்டுவது பர்த்தாகும் – கடமையாகும் என்ற முடிவினை எட்டுவதற்கு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை இனி நோக்குவோம்.
களவெடுத்தவரின் கையை வெட்டுவது, விபச்சாரத்தில் ஈடுபட்டவரை கல்லால் எறிந்து கொல்வது போன்ற ஹுதூத் தண்டனைகள் உட்பட மேலும் பல ஷரீஆ சட்டங்களை நிறைவேற்றுவது முஸ்லிம்களுக்கு வாஜிபாகும் (கடமையாகும்). எனினும் இஸ்லாமிய ஷரீஆவை அமூல்படுத்துகின்ற இஸ்லாமிய அரசொன்று இல்லாதவிடத்து இந்த ஹுதூத் தண்டனைகளை நிறைவேற்ற முடியாது. எனவே மேற்குறிப்பிட்ட உசூலி காயிதாவின்படி அத்தகைய இஸ்லாமிய அரசொன்றை நிறுவுவது வாஜிபாகி விடுகின்றது.
மேலே குறிப்பிட்ட இரு உதாரணங்களும் ஒரே உசூலி காயிதா எவ்வாறு இபாதத்துடன் தொடர்புபட்ட ஒரு ஹுக்மையும், ஆட்சி முறைமையுடன் தொடர்புபட்ட ஒரு ஹுக்மையும் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறதல்லவா?
எனினும் பிக்ஹி அடிப்படைகளான அல் காயிதா அல் பிக்ஹிய்யாஹ் ஒரேவகையைச் சேர்ந்த ஒரே மாதிரியான சட்டத்தீர்ப்புகளின்போது மாத்திரமே பயன்படுத்தப்படும். உதாரணமாக “சந்தேகம் இருந்தால் ஹுதூத்(குற்றவியல் தண்டனைகள்) தவிர்க்கக்கப்பட வேண்டும்” என்ற காயிதா என்பது ஹுதூத் என்கிற குற்றவியல் தண்டனைகளின் விடயத்துடன் மாத்திரமே பயன்படுத்தப்படும். இதே காயிதா வேறொரு இடத்தில் பாவிக்கப்பட மாட்டாது.
இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தால்,
“இமாமின்(கலீஃபாவின்) கட்டளை கருத்து முரண்பாடுகளை தீர்த்துவிடும்” என்ற காயிதா (இஃதிலாஃபான) கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற சட்டங்களில் கலீஃபா எதனை தேர்வு செய்கிறார் என்ற விடயத்துடன் மாத்திரம் சம்பந்தப்பட்டது. அதாவது இந்த காயிதா கலீஃபா தேர்வு செய்வதை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என்பது பற்றி கூறும் காயிதாவாகும். இந்த காயிதா கலீஃபாவின் கவர்னர்களின்(வுலாஹ்), அல்லது நீதிபதிகளின்(ஹுதாஹ்) கட்டளைகளுக்கோ அல்லது கலீஃபா (கருத்து முரண்பாடுடைய விடயங்களில் ஒன்றை) தனது கட்டளையாக தேர்ந்தெடுக்காத விடயங்களுக்கோ பயன்படுத்தப்பட மாட்டாது.
இன்னும் சில பிக்ஹி அடிப்படைகளைக் கவனித்தாலும் இந்த நிலைப்பாடு தெளிவாக புலப்படும். “குற்றமற்ற நிலையே ஆரம்பமானது”, மற்றும் “ஆதாரத்தின்(பய்யினாஹ்) சுமை குற்றம் சாட்டுபவரைச் சார்ந்தது, சத்தியப்பிரமாணம்(யமீன்) செய்வது (குற்றத்தை மறுக்கின்ற) குற்றம் சாட்டப்பட்டவரைச் சார்ந்தது” என்ற இரண்டு பிக்ஹி அடிப்படைகளும் முரண்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு இடையே தீர்ப்பளிக்கும் கருமத்துடன் தொடர்புடையது. உதாரணமாக அந்த பிக்ஹி அடிப்படைகள் இபாதத்துடனோ அல்லது அஹ்லாக்குடனோ எத்தகைய தொடர்பும் அற்றது.
அஷ்ஷேய்ஹ் முஹம்மத் ஹுசைன் அப்துல்லாஹ் எழுதிய அல் வாதிஹ் ஃபி உசூலுல் பிக்ஹ் என்ற நூலிலிருந்து சிறு பகுதி.