1. இஸ்லாம் வரையறை செய்கின்ற முஸ்லிம் பெண்கள் பொதுத்தளத்தில் அணிகின்ற ஆடை இன்று சர்வதேச வாதப்பொருளாகவும், பல நாடுகளில் இடைக்கிடையே சர்ச்சையைக் கிளப்புகின்ற ஒரு விடயமாகவும் மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் பேராசிரியர் சாமுவேல் ஹன்டிங்டன் தனது “நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்” என்ற நூலில் சுட்டிக் காட்டுவதைப்போன்று இன்று உலகில் காணப்படும் இரண்டு பிரதான நாகரீகங்களான மேற்குலக சடவாத நாகரீகத்துக்கும், இஸ்லாமிய நாகரீகத்துக்கும் இடையிலான மோதலின் வெளிப்பாடாகும். (சண்முகா மகளிர் கல்லூரியில் ஹபாயாத் தடை தொடர்பாக எமது இணையத்தில் 2018 இல் பிரசுரமான விரிவான கட்டுரையை இந்த லிங்கில் வாசிக்கலாம். https://darulaman.net/2018/03/07/trinco-shanmuga-hindu-colleges-stand-against-habaya-is-another-manifestation-of-the-war-of-thought-on-islam/)
2. இடைக்கால ஐரோப்பாவில் தோன்றி இன்று உலகெங்கும் பரவி உலக நடைமுறையாக மாறியிருக்கும் லிபரல், மத ஒதுக்கல் கொள்கை மக்களின் தனிப்பட்ட வாழ்வு தவிர்ந்து அவர்களின் பொதுவாழ்வில் மார்க்க நம்பிக்கைகள் உள்நுழைவதை கொள்கை அளவிலும், நடைமுறையிலும் தவிர்க்க அனைத்து பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றது.
3. முஸ்லிம்கள் கடைபிடிக்கும் இஸ்லாமிய மார்க்கம் ஓர் சம்பூரண வாழ்க்கைத் திட்டம் ஆகையால் அது தனிநபர் மற்றும் சமூக வாழ்வு தொடர்பாகவும், அரசியல், சமூகவியல், பொருளாதாரம் என வாழ்வில் அனைத்து பரிமாணங்கள் தொடர்பாகவும் வேறுபட்ட நோக்குடனும், சட்டதிட்டங்களுடனும் செயற்படும் தன்மை கொண்டது. இதன் விளைவுகளில் ஒன்றுதான் முஸ்லிம் பெண்கள் தமது பொதுவாழ்வில் அணிகின்ற ஆடை ஏனையவர்களைப்போல் இல்லாமல் இஸ்லாமிய வரையறையைக் கொண்டு வெளிப்படும்போது அதனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பலர் முயற்சிக்கின்றனர்.
4. முஸ்லிம் பெண்களின் ஆடை மதச்சார்பற்ற சடவாத வாழ்வில் மதத்தின் தலையீடாக சித்தரிக்கப்படுகிறது என்பதால் அந்த ஆடை மீது கொண்ட காழ்ப்புணர்வாக அது வெளிப்படுத்தப்பட்டாலும், உண்மையில் இஸ்லாமிய நாகரீகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வில் இருந்தே அது உருவாகின்றது.
5. இந்நிலை, சர்வதேசத்தில் செல்வாக்குப்பெற்ற போக்காக இருப்பதால் எமது நாடுகளிலும் அதனை தமது மதிப்பீடாகக் கொண்டு சிறுபான்மை சமூகம் ஒன்றுக்கு எதிராக, தமக்கு இருக்கின்ற காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் உத்தியாக முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு எதிரான பிரச்சாரமும், நடவடிக்கைகளும் இலகுவாக கையில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசாங்க மகளிர் கல்லூரியில் ஆறு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்காக பல வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்காது தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் நடந்ததும் இதன் பின்னணி கொண்டே நோக்கப்பட வேண்டும்.
6. இலங்கையில் கலாசார மற்றும் மத வேறுபாடுகள் பாரிய பிரச்சனைக்குரிய ஒரு விடயமாக பல காலங்களாக இருந்ததில்லை. மொழி, அதிகாரம் மற்றும் வளப்பங்கீடு தொடர்பான விடயங்களிலேயே அதிகளவான முரண்பாடுகள் குறிப்பாக சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்டன. ஆனால் தனித்துவமான மத, கலாசார அடையாளப் பாவணைளில் சகிப்புத்தன்மை இருந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்றும் அந்நிலை பரவலாக நிலவுகிறது.
7. ஆனால் நாகரீகங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் ஓர் கூரான உலகளாவிய இஸ்லாமோஃபோபியாவின் பரவலும், தமது அரசியல் இலக்குகளுக்காக காலத்துக்கு காலம் புதிய எதிரியை உருவாக்குவதும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தியல் சூழல் உருவாக அடித்தளமாக அமைந்துள்ளன.
8. குறிப்பாக சண்முகா இந்து மகளிர் கல்லூரியைப் பொருத்தமட்டில் அது பெரும்பாலும் இந்து சமூகம் சார்ந்த பாடசாலை என்பதால் அங்கே இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்தியல் வளர்க்கப்படுவதற்கான பல வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் இந்திய இந்துத்துவா அரசியல் மற்றும் சமூகப்பாதிப்புக்களால் தாக்கமடையும் தன்மை கொண்ட ஓர் சமூகமாக இலங்கை தமிழ் சமூகம் இருப்பதாலும், மேற்குலக கருத்தியல்களை அது எதுவாக இருந்தாலும் உடனடியாக நம்பிவிடுகின்ற தன்மை அதற்கு அதிகம் இருப்பதாலும், இஸ்லாமிய வெறுப்புச் செயற்பாடுகளுக்கான ஓர் உந்து சக்தி கிடைத்து விடுமானால் அத்தன்மை வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களிடம் அதிகம் இருக்கின்றது.
9. எனவே சண்முகா இந்துக் கல்லூரியினால் வெளிபடுத்தப்படும் இந்த கருத்தியல் முகம் தமிழ் சமூகத்தின் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும் அது இஸ்லாத்துக்கும், அதன் நாகரீகத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இலங்கையில் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் உருவாகிவரும் சிந்தனைத் தாக்கத்தின் வளர்ச்சியையும், அதன் வீரியத்தையும் காட்டுகிறது. குறிப்பாக ஒரே மொழியைப் பகிர்ந்தும், வட கிழக்கில் முஸ்லிம்களுடன் நெருக்கமாக வாழ்ந்தும் வரும் தமிழ் சமூகத்துக்கு மத்தியிலும் அது பரவியிருப்பது ஆபத்தானது என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும்.
10. இத்தருணத்தில் சட்ட ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் சரியான பக்கத்தில் நின்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுந்து நின்ற பாதிக்கப்பட்ட பாத்திமா பஹ்மிதா என்ற ஆசிரியையினதும், அவரது கணவர் உட்பட குடும்பத்தாருக்கும் முஸ்லிம் சமூகம் உட்பட நீதியின் பக்கம் நிற்கும் அனைத்து மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்.
11. தனிப்பட்ட வைராக்கியத்துக்காவோ, தீய பிரிவினைவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவோ தமது நிர்வாகத்திலுள்ள கல்வி நிறுவனங்களை பயன்படுத்தும் ஆசிரியர் சமூகம் வெட்கித் தலைகுணிய வேண்டும். சக ஆசிரியை ஒருவருக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தியத்திற்காக அதற்கு காரணமான நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
12. இந்த இடத்தில் முஸ்லிம் மார்க்க மற்றும் சமூகத்தலைமைகளுக்கு சில முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. அவை,
அ) இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி தமிழ் பேசும் சமூகங்களுக்கு மத்தியில் இனக் குரோதங்களுக்கு தூபமிடும் தீய சக்திகளையும், அவர்களின் நிகழ்ச்சி நிரல்களையும், அதன் பின்னாலுள்ள கருத்தியல்களையும் ஆராய்ந்தறிந்து அதனை மக்கள் மன்றத்தில் முன்வைக்க வேண்டும்.
ஆ) முஸ்லிம் சமூகம் ஏற்றிருக்கும் இஸ்லாமிய சித்தாந்தத்தின் காரணமாக அவர்கள் ஏன் ஏனையவர்களிடமிருந்து சில விடயங்களில் வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை பிற சமூகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும்.
இ) உலகளாவிய ரீதியில் குறிப்பாக முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்து நடாத்தப்படும் சிந்தனைப் போராட்டத்தில் இலங்கை மக்களும் எவ்வாறு பலிக்கடாவாக்கப்படலாம் என்ற உண்மையை எல்லோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
ஈ) மேலும் முஸ்லிம்களை நோக்கி, இவ்வாறான சவால்கள் வருகின்றபோது அவற்றை எவ்வாறு இஸ்லாமிய சித்தாந்தத்தையும், சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றை இஸ்லாமிய பிரச்சாரப்பணிக்கு உகந்த தருணங்களாக எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பதையும் வழிகாட்ட வேண்டும்.