ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) ஹுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, சவூதி தலைமையிலான கூட்டணி ஏமன் தலைநகர் சனாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, 12 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது.
2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகரையும் வடக்கு யேமனின் சில பகுதிகளையும் கைப்பற்றிய பின்னர் தப்பி ஓடிய ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹாடியின் அரசாங்கத்தை மீட்டெடுக்க 2015 இல் யேமனின் போரில் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தலையிட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2019 இல் யேமனில் தனது இராணுவ பிரசன்னத்தை பெருமளவில் குறைத்துள்ளபோதிலும், தனது ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் யேமன் படைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
செவ்வாய்கிழமை அதிகாலையில், ஈரான் பின்னணியிலுள்ள ஹுதி குழுவிற்கு சொந்தமான சனாவில் உள்ள கோட்டைகள் மற்றும் முகாம்களுக்கு எதிராக கூட்டணிப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியதாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, சுமார் 14 பேரைக் கொன்ற இத்தாக்குதலில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதல் அவரையும், அவரது மனைவி, அவரது 25 வயது மகன், பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்களைக் கொன்றது என்று மருத்துவ ஆதாரங்களையும், குடியிருப்பாளர் கருத்துக்களையும் மையப்படுத்தி ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் திங்கட்கிழமை தாக்குதலுக்கு உரிமை கோரும் ஹுதி குழு, நகரம் முழுவதும் கூட்டணி தாக்குதல்களால் 20 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. அத்தகவலை ஹுதியின் துணை வெளியுறவு மந்திரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘எதிர்வினையாற்றும் உரிமை’
“பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றவியல் அதிகரிப்பு” ஆகியவற்றிற்கு பதிலடி கொடுப்பதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறி உள்ளது. அபுதாபியின் விமான நிலையம் அருகே தீயை மூட்டிய ஹுதி தாக்குதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய் நிறுவனமான ADNOC இல் பணிபுரியும் இரண்டு இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் உயிரிழந்தனர்.
ஹுதிகளின் இராணுவ செய்தித் தொடர்பாளர், “முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த எமிராட்டி தளங்கள் மற்றும் நிலைகளுக்கு” எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இரண்டையும் பயன்படுத்தி எமது குழு “ஒரு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையை” மேற்கொண்டதாக திங்களன்று கூறினார்.
“தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள “முக்கியமான நிலைகளில் இருந்து விலகி இருக்க” குடிமக்களையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் அவர் வலியுறுத்தினார்.
ஏமன் கடற்கரையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொடியுடன் கூடிய கப்பலைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹுதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 11 பணியாளர்கள் இப்போது பணயக்கைதிகளாக உள்ள சுறயடிநந ஒரு “பொதுமக்கள் சரக்குக் கப்பல்” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறிய போதிலும், அக்கப்பல் ஆயுதங்களை சுமந்து சென்றதாக ஹுதிகள் கூறுகின்றனர்.
யேமனின் ஆற்றல் உற்பத்தி செய்யும் பகுதிகளான ஸப்வா மற்றும் மாரிப் பகுதிகளில் ஹுதிகளுக்கு எதிராக சமீபத்தில் போராடிய யேமன் படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்தமை குறிப்பித்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபை, யேமனின் பல ஆண்டுகால மோதலை, உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று அழைக்கிறது. அது இதுவரை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றுள்ளதுடன் பலரை பஞ்சத்தின் விளிம்பிற்குள் தள்ளி உள்ளது.
குறிப்பு:
தமது எஜமான்களை திருப்திப்படுத்துவதற்காகவும், பிராந்திய போட்டிக்காகவும், குறுங்குழுவாதத்திற்காகவும் எமது மக்கள் மீது அநியாயமாக திணிக்கப்படுகின்ற இத்தகைய கொடுமையான யுத்தங்கள் மாறி மாறி தொடர்வதற்கான சூழல் மாத்திரமே இன்று உள்ளது. இந்த அநீதிகள் தானாக ஒருநாளும் நிறுத்தப்படப்போவதில்லை. எப்போது வெளிநாட்டுத் தலையீடுகளையும், அதன் முகவர்களின் ஆட்சிகளையும் எமது பூமிகளிலிருந்து துடைத்தெறிகிறோமோ அப்போதுதான் எமது வாழ்வில் அமைதி துளிர்விடும். அதற்கு அல்லாஹ்(சுபு)வின் வாக்குறுதியில் முழுமையான நம்பிக்கை கொண்டு பாரியதொரு விலையைக் கொடுப்பதற்காக முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.