நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் வெடித்த பின்னர் ஜனவரி 19 ஆம் தேதி வரை மூன்று முக்கிய நகரங்கள் மற்றும் 14 பிராந்தியங்களில் போக்குவரத்து போன்ற இயக்கத்தை கட்டுப்படுத்தும் மாநில அவசரநிலைக்கு கஜகஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாட்டை உயர்த்திய பின்னர் மங்கிஸ்டாவ் பகுதியில் ஆர்பாட்டங்கள் தொடங்கப்பட்டன.
அது சரி, விலை உயர்வால் என்ன பிரச்சனை?
கஜகஸ்தான் என்ற முஸ்லிம் நாடு உலகின் 9ஆவது பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன், எண்ணெய் வளத்தையும் கொண்ட மத்திய ஆசிய நாடாகும். உலகளாவிய எண்ணெய் இருப்புக்களில் 3 சதவீதத்தையும், மேலும் நிலக்கரி மற்றும் எரிவாயு போன்ற கனியவளத் துறைகளையும் அது கொண்டுள்ளது. எனவே எண்ணெய் விலையை கஜகஸ்தான் உயர்த்துகிறது என்றால் அதன் அர்த்தம் அங்கே எண்ணெய் பற்றாக்குறை நிலவுகிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம். அப்படியென்றால் அங்கு உற்பத்தியாகும் எண்ணெய் எல்லாம் எங்கே போகிறது? அதனை எளிமையாகச் சொன்னால், அது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் போது கிடைக்கும் இலாபத்தையும், பொது மக்களிடம் அதிக விலைக்கு விற்பதால் கிடைக்கும் இலாபத்தையும் சேர்த்து சூறையாட அரசாங்கம் முயல்கிறது. இந்நிலை பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது. ஏனெனில் மங்கிஸ்டாவில் மட்டும் 90 சதவீதமான வாகனங்கள் பியூட்டேன் மற்றும் புரொபேன் ஆகியவற்றை நம்பியுள்ளன. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், இந்த எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டில் இராணுவப் பயிற்சி பெற்றதாகவும் அரசை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
இறுதியில், நாட்டின் மிகப்பெரிய நகரமும் முன்னாள் தலைநகருமான அல்மாட்டி தீக்கிரையாக்கப்பட்டது. அல்மாட்டியின் உள்கட்டமைப்பு வசதிகள் பல சேதமடைந்தன; ஒரே இரவில் வன்முறை பரவியது மற்றும் அல்மாட்டியின் விமான நிலையம் கோபமான கும்பலால் கைப்பற்றப்பட்டது. சேதத்தை ஏற்படுத்தியவர்களை ஜனாதிபதி டோகாயேவ் “பயங்கரவாதிகள்” என்று அழைத்தார். இதுவரை டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்; 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டாயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
அல்மாட்டியில் நிலைமை கைமீறிப் போனதை அடுத்து ஜனாதிபதி டோகாயேவ் வெளி உதவியை நாடினார். அவர் நேட்டோவை ஒத்த ரஷ்ய வடிவமான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (Collective Security Treaty Organization – CSTO) பக்கம் திரும்பினார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த முன்னாள் சோவியத் நாடுகளான கஜகஸ்தான், பெலாரஸ், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி இந்த அமைப்பாகும். இந்த கூட்டணி வெளியிலிருந்து வருகின்ற பௌதீக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. CSTO இன் தலைவர், ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன், கூட்டணி “சமாதானப் படைகளை” “வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு” கஜகஸ்தானுக்கு அனுப்பும் என்று கூறினார். கஜகஸ்தானின் இராணுவ முக்கிய இடங்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க 2500 ரஷ்ய துருப்புக்கள் அனுப்பப்பட்டன. வரலாற்றில் முதல் தடவையாக CSTO செயல்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். கஜகஸ்தானுடன் நெருக்கமான உறவை பேணி வருவதாலும், அதனுடன் சுமார் 4700 மைல் (7000 கிலோமீட்டர்) எல்லையை பகிர்ந்து கொள்வதாலும் இது ரஸ்யாவுக்கு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
அல்மாட்டியில் அரசாங்க கட்டிடங்கள், தலைமையகம் மற்றும் காவல்துறையின் மாவட்ட அலுவலகங்கள் தாக்கப்பட்டபோது டஜன் கணக்கானவர்கள் அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். கலவரம் கட்டுப்பாட்டை மீறியதால், அரசு கட்டிடங்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை, வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு போலீசார் எச்சரித்தனர். கஜகஸ்தானின் செய்தி சேனலான கபார்-24, பாதுகாப்பு ஊழியர்களில் இருவர் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறியது. மருத்துவமனைகள் கூட போராட்டத்தால் சூழப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் ஒரு போர வெடித்து விட்டது… “நகரப் போராளிகளை சுத்தப்படுத்துதல்”, என்று இந்த நடவடிக்கையை காவல்துறை அழைத்தது.
இரவும் பகலும், அல்மாட்டியில் வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் சத்தங்கள் ஒலித்தன. வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் எரிக்கப்பட்டன, இதனால் அல்மாட்டி சோதனைச் சாவடிகளால் மூடப்பட்டது, மக்கள் அல்மாட்டிக்குள் வருவதற்கும் வெளியே செல்வதற்கும் குறுகிய சாலைகளை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும், கடைகள் மூடப்பட்டுள்ளதால் உணவு கொள்வனவு செய்ய முடியாமலும், இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொடர்பாடல் சிக்கலுக்கு உள்ளாகியும் உள்ளன.
குறிப்பு:
இன்று கஜகஸ்தானில் இடம்பெறுவது முஸ்லிம் உம்மத்தை பொருத்தவரையில் வியப்புக்குரியதல்ல. முஸ்லிம்களின் அரணாக இருந்த கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்ட காலத்திலிருந்து எமது வளமிக்க முஸ்லிம் நிலங்கள் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும், கபளீகரம் செய்யப்பட்டுமே வருகின்றன. அந்த ஆக்கிரமிப்பையோ, பகற்கொள்ளையையோ தட்டிக்கேட்டால் அதற்கு பதிலாக மக்கள் அவர்களின் ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டுகின்றனர். இந்த அவல நிலை தீர வேண்டுமானால் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி எம்மீது நிறுவப்பட்டு அதனைக் கொண்டு நாமும், நமது வளங்களும் பாதுகாக்கப்பட்டு, அவை நீதியாக மக்கள் நலனுக்காக பகிரப்பட வேண்டும். அரச ஒடுக்குமுறைக்கு எதிரான எமது போராட்டங்கள் கிலாஃபாவை உடனடியாகக் கோருகின்ற கோரிக்கைகளாக பரிமாற்றம் அடைய வேண்டும். அதற்கான விழிப்புணர்வை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்துவது கஜகஸ்தானுக்கு மாத்திரமல்ல முழுமையான மனிதகுலத்துக்கும் விமோசனமாக அமையும்.