இதுவொரு நிகழ்ச்சி நிரல் – இஸ்லாத்துக்கு எதிரான யுத்தம் என்பது இன்றைய உலகின் யதார்த்தம் அதனை அரசியல் விழிப்புணர்வுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த யுத்தத்துக்கு இரு முக்கிய முகங்கள் உள்ளன. ஒன்று நேரடியான பௌதீக யுத்தம். இரண்டாவது சிந்தனா ரீதியான கலாசார யுத்தம். இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பாலும் எதிர்கொள்வது இரண்டாவது வகை.
இந்த சிந்தனா ரீதியான கலாசார யுத்தத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கைகள், விழுமியங்கள், செயற்பாடுகள் அனைத்தும் குறிவைக்கப்படுகின்றன. சரியோ, பிழையே அவற்றில் குறைகாண்பதும், முரண்பாடுகளை வலிந்து உருவாக்குவதும் அந்த யுத்தத்தை தொடர்வதற்கு அத்தியவசியமாகும்.
அமெரிக்கா சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்பு தனது பூகோள மேலாதிக்கத்தை தொடர்வதற்காக ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற மாய எதிரியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதே போன்று இலங்கையின் அரசியற் தலைமைகள் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்பு தமது பேரினவாத மேலாதிக்கத்தை தொடர்வதற்காக முஸ்லிம் சமூகத்தை தமது பொது எதிரியாக சந்திக்கு இழுத்தனர். இந்த வீண் சண்டைக்கு நாம் தயாரோ தயாரில்லையோ அவர்கள் எம்மை ஒதுங்கி இருக்க விடமாட்டார்கள்.
காதிநீதிமன்றத்தை இல்லாதொழித்து பின்னர் சட்டத்தையும் ஒழிப்பார்கள்
இதுவொரு உலகளாவிய பொறிமுறை. இன்றைய உலக ஒழுங்குக்கும், லிபரல் விழுமியங்களுக்கும், முற்றுமுழுதாக அடிபணியும் வரை இஸ்லாத்தின் பொதுவாழ்வு தொடர்பான விடயங்களில் நாம் தனித்துவம் பேணுவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு எதிரான முழுமையான போராட்டத்தை தொடர்வார்கள். சர்வதேசச் சட்டங்களும் அதனை பிறர் மீது திணிக்கின்ற நிறுவனங்களும், அழுத்தக்குழுக்களும், செயற்பாட்டாளர்களும் இவ்விடயத்தில் களைத்துப் போக மாட்டார்கள். மேற்குலகிலும், பல முஸ்லிம் நாடுகளிலும் பிரயோகிக்கப்பட்ட இத்தகைய அழுத்தங்கள் தற்போது எமக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படுகின்றன. எடுத்தவுடன் அனைத்தையும் ஒரு மதச் சமூகத்திடமிருந்து பறித்து விடுவது இலகுவான காரியமல்ல என்பதால் நிதானமாக ஒவ்வொன்றாக பிடிங்கி எடுப்பார்கள். இந்த அனைத்திலும் குற்றவாளிக்கூண்டில் நாமும், நமது மார்க்கமும் நிறுத்தப்படுவதை தவிர்க்க முடியாது. இந்த உண்மை புரியும்வரை எமக்கு எதிரான சூழ்ச்சிகளை சரியாக எதிர்கொள்ள முடியாது.
இந்தக் கட்டுரையில் காதி நீதிமன்ற ஒழிப்பு மற்றும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்த முயற்சியின் அரசிற் பின்புலம் பற்றி விரிவாக ஆராய்வது நோக்கமல்ல என்பதால் அது பற்றி இத்துடன் முடித்துக் கொள்கிறோம். அதுகுறித்து நாம் ஏற்கனவே பிரசுரித்த விரிவான கட்டுரைகளின் முகவரிகளை கீழே தருகிறோம். ஆர்வமுள்ளோர் அவற்றை வாசியுங்கள்.
https://darulaman.net/2021/01/25/quazi-courts-and-one-country-one-law-searching-for-answers/
https://darulaman.net/2019/09/01/the-mmda-affair-is-a-political-drama/
https://darulaman.net/2016/11/12/mmda-reform-western-attempt-to-convert-muslims-to-secularism/
இனி இந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிக்குள் நுழைவோம். அதாவது காதி நீதிமன்றங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவது எமக்கு சதகமானதா? பாதகமானதா? என்பது பற்றியும், இரண்டாவது MMDA சட்டக்கோவையில் கொண்டுவரப்படும் முக்கிய திருத்தங்கள் இஸ்லாத்தின் பார்வையில் எத்தகையது என்பது பற்றியும் சுருக்கமாக ஆராய்வோம்.
காதி நீதிமன்ற ஒழிப்பு – பேரினவாத முஸ்லிம் வெறுப்பு சூழல் வலுப்பெற்றுள்ள ஓர் காலகட்டத்திலும், தீவிர லிபரல் திணிப்பு உலக சூழலிலும் ஷரீஆ அடிப்படையிலான தனியார் சட்ட பிரயோகத்தை பொது நீதிமன்றங்களின் கையாள்கைக்குள் கொண்டு வருவது பேச்சளவில் சிறப்பாகத் தெரிந்தாலும், நடைமுறையில் மிகச் சிக்கலுக்குரியது என்பதை பலரும் உணர காலம் எடுக்கலாம். எமது சமூகத்தின் மீதான சிந்தனை யுத்தத்தின் பிரயோகப் புள்ளியாக பொது நீதிமன்றங்களும் மாறும் என்பது தவிர்க்கப்பட முடியாதது. மேலும் ஷரீஆவின் நிலைப்பாட்டின் அடிப்படையில் அமைந்த திருமண மற்றும் விவாகரத்து விடயங்களை பொது நீதிமன்றில், முஸ்லிம்கள் மாத்திரம் கையாளாத ஓர் சூழ்நிலைக்குள் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வை எட்ட எத்தணிப்பது முரண்பாடுகளை அதிகரிக்குமேயன்றி தீர்வுகளைப் பெற்றுத்தராது என்பது வெள்ளிடை மழை. எனவே இன்றிருக்கின்ற காதி நீதிமன்ற முறைமையும், கட்டமைப்பும் சீர்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு அவை எமது சமூகத்தின் கைகளினால் பிரத்தியேகமாக கையாளப்படுவதே பொறுத்தமானதாகும் என்பது எமது கருத்தாகும்.
MMDA சட்டக்கோவையில் கொண்டுவரப்படும் முக்கிய திருத்தங்கள்
மேலுள்ள உப தலைப்புக்குள் நுழைவதற்கு முன்னர் சில அடிப்படை நிலைப்பாடுகளை நாம் ஏற்றாக வேண்டும்.
- இஸ்லாம் என்பது பௌத்தம், இந்து, கிருஸ்தவம் போன்று மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுடன் கட்டுண்ட வெறும் சமயம் கிடையாது. அது ஓர் மனிதனின் வாழ்வின் அனைத்து பகுதிகளையும் கையாளும் ஓர் வாழ்க்கை நெறியும், சித்தாந்தமும் ஆகும். ஆகவே அது அரசியல், சமூக, பொருளாதார அனைத்து விடயங்களிலும் தனக்கே உரிய பிரத்தியேக வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது.
- சட்டம் என்று வருகின்றபோது சட்டத்தின் மூலம் யார்? சட்டம் இயற்றும் அதிகாரம் அடிப்படையில் யாரிடம் இருக்கின்றது என்ற கேள்விக்கு ஓர் முஸ்லிம் சரியாக பதில் அளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பொருத்தவரையில் அல்லாஹ்வின் அடிமைகளான மனித சமூகத்துக்கு சட்டங்களை வழங்கும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது. அல்லாஹ்வின் சட்டங்களை புரிந்து அதனை அமூல்படுத்தி வாழ்வதுதான் மனிதனின் கடமை. அந்தவகையில் ஓர் முஸ்லிம் எங்கு வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் சட்டங்களை முற்றுமுழுதாக பின்பற்றுவதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும்.
- இலங்கை இஸ்லாமியச் சட்டம் அமூலில் இல்லாத ஒரு நாடு என்ற அடிப்படையில் எமது பொதுவாழ்வில் இஸ்லாமியச் சட்டங்களையும் பின்பற்ற முடியாத ஓர் நிலை தொடர்ந்தாலும், ஒரு சில தனிப்பட்ட விடயங்களிலாவது எமது ஷரீஆவின் நிலைப்பாடுகளை பேணும் வாய்ப்பு எம்மிடம் காணப்படும்போது அதனை உதாசீனம் செய்வதற்கு மார்க்கத்தின் பார்வையின் எவருக்கும் அனுமதி கிடையாது.
- இறுதியாக, காதி நீதிமன்றங்களை இல்லாது செய்ய நினைப்பதோ, முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிப்பதோ மார்க்கத்தை இன்னும் சரியாக பின்பற்றுவதற்கும், அதன் தீர்வுகளை எமது சமூகம் முழுமையாக அனுபவிப்பதற்கும் உண்டான எத்தனங்களாக இருக்க வேண்டும். மாறாக, நடைமுறை லௌகீக இலாப நஷ்டங்களை மையப்படுத்தியதாக அவை இருக்கக் கூடாது.
எம்எம்டிஏ சட்டத்திருத்தத்தைப் பொருத்தவரையில் நான்கு முக்கிய மாற்றங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. அவை குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு குறித்து இனிமேல் மிகச்சுருக்கமாக ஆராய்வோம்.
பால்ய திருமணம்
UNFPA (United Nation Population Fund) என்று அழைக்கப்படும் ஐ.நா அமைப்பு பெண் பிள்ளைகளின் மனித உரிமைகளை பாதுகாக்கப் போகிறோம் என்ற பெயரில் உலகெங்கும் குறிப்பாக வளர்முக நாடுகளில் தமது தாராண்மைவாக விழுமியங்களை (Liberal Values) திணிக்கின்ற ஓர் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. அந்த செயற்பாட்டின் ஓர் பகுதிதான் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், பால் சமத்துவம் மற்றும் இளைஞர்கள் தொடர்பான புதிய கொள்கைகளையும், சட்டங்களையும் இயற்றுவதற்கு அரசாங்கங்களுக்கு நேரடியாகவும், தமது சிவில் சமூக பங்காளிகளின் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகிக்கும் செயற்பாடாகும். 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகள் திருமண பந்தத்துக்குள் நுழைவதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் இந்த லிபரல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாகும். இன்று MMDA சீர்திருத்ததில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கான குறைந்த வயதெல்லையை 18ஆக உயர்த்தும் கோரிக்கை இங்கிருந்தே வருகின்றது. இலங்கைக்கு GSP+ வரிச்சலுகையை வழங்குவதற்கான முன்நிபந்தனைகளில் ஒன்றாக சில வருடங்களுக்கு முன்னர் இந்தக் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை எமக்கு ஞாபகமிருக்கலாம்.
சிறுவர்கள் என்றால் யார்? திருமணம் என்றால் என்ன? பெண் உரிமை என்றால் என்ன? என்பதற்கெல்லாம் தாம் ஏற்றுள்ள உலகப் பார்வையை (World View) அடிப்படையாகக் கொண்டு சில முடிவுகளுக்கு வந்துவிட்டு அவற்றை பிறர் மீது திணிக்கின்ற செயற்பாடாகவே இவை காணப்படுகின்றன. இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பொருத்தவரையில் இவை தொடர்பான எமது பார்வை முற்றிலும் வேறானது என்ற காரணத்தினால் அவற்றை நாம் அணுகுகின்ற முறைகளும் வேறுபாடானதாகவே அமையும். குறிப்பாகச் சொல்வதானால் இஸ்லாம் 18 வயதுக்கு குறைந்தவர்களை சிறுவர்கள் என்று கருதவில்லை. மணப்பெண்ணுக்கு குறைந்த வயதெல்லையாக ஒரு குறித்த வயதை அது நிபந்தனை ஆக்கவில்லை. மாறாக இஸ்லாம் பருவமடைந்த ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கான அனுமதியை வழங்குகிறது. இங்கே ஆச்சரியமானது எதுவென்றால் இதில் எது சரி, எது பிழை என்ற விவாதத்துக்கு அப்பால் ஒரு குறித்த சடவாத லிபரல் உலகப்பார்வைதான் முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தை பிறர் மீது திணிப்பதை எவ்வாறு சுதந்திரம் (Freedom) பற்றி வாய் கிழியப்பேசுகின்ற ஓர் நாகரீகம் செய்கிறது என்பதே. மேலும் இவ்விடயத்தில் சரியான தீர்ப்பு எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. அல்லாஹ்வின் தீர்ப்பை விட விஞ்சியதா மனித மூளையின் முடிவுகள்? ஆனால் தற்போது துரதிஷ்டவசமாக 18 வயது என்ற நிர்ணயத்தை ஏறத்தாழ அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எம்மீதான சிந்தனை யுத்தத்தில் லிபரல் உலகு வெற்றி பெற்று இருகின்றது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
பலதாரமணத்தை இல்லாதொழித்தல்
இஸ்லாம் பலதாரமணத்தில் ஈடுபட நினைக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் தனது வழிகாட்டலை மிகத் தெளிவாக முன்வைக்கிறது.
“அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்., அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.” (நிஸா 4 : 3)
அல்லாஹ்வின் இந்த வழிகாட்டல் பலருக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. எனினும் அல்லாஹ்வின் வழிகாட்டலை துஷ்பிரயோகம் செய்யும் சிலரும் எம்மில் இருப்பார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
“உங்களில் சிறந்தவர் தங்கள் மனைவிகளுக்கு சிறந்தவர்களாவார். நான் எனது மனைவிகளுக்கு சிறந்தவனாவேன்.”
என்ற நபிமொழியை பின்பற்றுவதற்கு சிலர் தவறி விடுகின்றனர். அவர்களால் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் செயற்பட முடிவதில்லை. ஆனால் அத்தகைய சிலரின் தவறுக்காக அல்லாஹ் அனுமதித்த ஓர் விடயத்தை எல்லோருக்கும் தடைசெய்வது மார்க்க ரீதியில் மிகப்பெரிய குற்றமாகும். அதனைச் செய்வதற்கு எந்த முஸ்லிமுக்கும் அனுமதி கிடையாது. எனினும் இங்குள்ள பிரச்சனை அதுவல்ல. இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும், முஸ்லிம்களின் வாழ்வியல் முறை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்ற மேற்குலக நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியே இந்த பலதாரமண ஒழிப்புக் கோரிக்கை. விபச்சாரமும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் உறவுகளும், ஆபாசப்படங்களும், கற்பழிப்புக்களும், கருவழிப்புக்களும் பெருகிய ஓர் உலக ஒழுங்கில், ஆயிரம் ஆயிரம் குடும்பங்களும், அபலைப்பெண்களும் அல்லல்படுவதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள் இஸ்லாத்தின் பலதாரமணத்தை எதிர்ப்பதற்கான காரணம் வேறு எதுவாக இருக்க முடியும்?
எனவே பலதாரமண ஒழிப்பு இஸ்லாத்துக்கு முரணானது மாத்திரமல்லாது அது ஒரு சிறந்த தீர்வை எம்மிடமிருந்து அகற்றுகின்ற செயலாகும். எனவே அதனை சட்டவிரோதமாக்குவதற்கு நாம் ஆதரவு தெரிவிக்கக்கூடாது. மாற்றமாக பலதாரமணத்தை துஷ்பிரயோகம் செய்யும் சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், நபர்களையும் கையாள்வதற்கான ஏற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும்.
பெண்களை நீதிபதிகளாக நியமித்தல்
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் காதிப் பொறுப்புக்கு பெண்களையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடங்கும். இது வரவேற்கத்தக்க ஓர் நிலைப்பாடாகும். ஆனால் மார்க்கத்தில் அதற்கு இருக்கின்ற அனுமதி பற்றிய அறிவில்லாமல் அனாவசியமான ஓர் தலைப்பாக அது விவாதிக்கப்பட்டு வருவதே விசனத்துக்குரியது. இங்கும் மேற்கின் பெண் சமத்துவ சிந்தனையின் மதிப்பீடே எம்மீது திணிக்கப்பட முயற்சிக்கப்பட்டாலும், அந்த இழுக்கிற்கு எந்த அவசியமும் இல்லாமல் நீதிபதிகளாக பெண்களும் இருக்கலாம் என்ற வழிகாட்டலை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே வழங்கி விட்டது. அதனை எமது கலாசார நாயகர்கள் புரிந்துகொள்வதில்தான் தாமதம் நிலவுகிறது. இந்த விடயத்தைப் புரிந்து கொள்ள பின்வரும் இஸ்லாமிய சட்டக்கலை அடிப்படைகள் பற்றிய தெளிவு அவசியமாகும்.
ஸுன்ஆ என்பது நபி ஸல் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பதாக நாம் அறிந்துள்ளோம். ஆனால் அந்த சொல், செயல், அங்கீகாரத்தை புரிந்துகொள்கின்ற சில அடிப்படைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான், நபி ஸல் அவர்களின் செயலைப் பொருத்தவரையில் அவர்கள் ஒரு செயலைச் செய்யவில்லை என்பதற்காக அந்த செயல் முஸ்லிம்களுக்கு நேரடியாக தடைசெய்யப்பட்ட ஒரு செயலாக மாறிவிடுவதில்லை. அந்த செயலை தடைசெய்வதற்கான ஆதாரமாக அது கொள்ளப்படுவதில்லை. மாறாக அந்த செயல் தடைசெய்யப்பட்டது என்ற காரணத்தினால்தான் நபி ஸல் அவர்கள் அதனை செய்யவில்லை என்ற ஒரு ஆதாரமோ அல்லது ஒரு குறியீடோ (qareenah) அதற்கு சான்றாக வந்திருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தனக்கு பின் ஆட்சிப்பொறுப்புக்கான ஓர் வாரிசை அதாவது கலீஃபாவை தனது மரணத்துக்கு முன் நியமித்திருக்கவில்லை. ஆனால் நபித்தோழர்கள் யாரும் நபி (ஸல்) அவ்வாறு செய்யவில்லை என்ற விடயத்தை அச்செயலுக்கான தடையாகக் கருதவில்லை. மாறாக அவர்கள் அபுபக்ர் (ரழி) தனது மரணத்தை அண்மித்துக் கொண்டிருக்கையில் அவர்களிடம் சென்று அடுத்த கலீஃபாவை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்யவில்லை என்பதனால் அது தடைசெய்யப்பட்ட ஒன்றாக நேரடியாக மாறிவிடாது என்ற அடிப்படையை நபித்தோழர்கள் அறிந்திருந்தார்கள்.
புகாரியில் தொகுக்கப்பட்டுள்ள அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஓர் நபிமொழி பின்வருமாறு கூறுகிறது. “உமர் (ரழி) அவர்களிடம் உங்களைத் தொடர்ந்து வரக்கூடிய ஓர் கலீஃபாவை நியமிக்க முடியுமா? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் நான் எனது வாரிசான கலீஃபாவை நியமித்தால் அச்செயல் எனக்கு முன்னர் என்னை விட சிறந்த ஒருவராலும் செய்யப்பட்டது. அவர்தான் அபுபக்ர்… நான் எவரையும் நியமிக்காது விட்டால்… என்னை விட சிறந்த ஒருவரும் எவரையும் நியமிக்கவில்லை. அவர்தான் இறைத்தூதர் (ஸல்) என்றார்கள்.”
எனவே ஒரு செயலை இறைத்தூதர் (ஸல்) செய்யவில்லை என்பதால் அது தடைசெய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்படாது. மாறாக அச்செயலை தடைசெய்ய ஒரு ஆதாரமோ அல்லது ஒரு குறியீடோ அவசியமாகும்.
இந்த விதிதான் நபி (ஸல்) அவர்கள் பெண்களை நீதிபதிகளாக நியமிக்கவில்லை என்ற காரியத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும். நபி (ஸல்) பெண்களை நீதிபதிகளாக நியமிக்கவில்லை என்பதனால் அது தடைசெய்யப்பட்ட ஒன்று என்றாகிவிடாது. மாறாக அவ்வாறான தடைக்குச் சான்றாக ஓர் ஆதாரமோ அல்லது குறியீடோ அதற்கு அவசியமாகும். ஆனால் அவ்வாறான ஆதாரமோ அல்லது குறியீடோ வஹியில் காணப்படவில்லை என்பதால் பெண்கள் நீதிபதிகளாக பணியாற்றுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
காதி மதாழிம் என்று அழைக்கப்படுகின்ற ஆட்சியாளருக்கும் அவரால் ஆளப்படுகின்றவர்களுக்கும் இடையில் தோன்றுகின்ற பிணக்கை கவனிக்கக்கூடிய விசேட நீதிபதிப் பதவிக்கு பெண்கள் நியமிக்கப்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதற்கு காரணம் இந்த விடயத்தில் ஆட்சியும், ஆட்சியாளரும் சம்பந்தப்படுவதால், இஸ்லாம் ஆட்சி விடயத்தில் பெண்களுக்கு தடைவிதித்திருப்பதால் அந்தப் பதவியைப் பெண்கள் வகிக்க முடியாது. எனவே அது தவிர்ந்த பொது நீதிபதிகளாகவும், ஹிஸ்பா எனப்படுகின்ற பொது இடங்கள், சந்தை, வர்த்தக நடவடிக்கைகளுடன் பெரும்பாலும் தொடர்புடைய நீதிபதிகளாகவும் பெண்கள் நியமிக்கப்படுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. எனவே புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற சட்டத்திருத்தத்தில் பெண்களும் நீதிபதிகளாக செயற்படுவதற்கான அனுமதியை வழங்குவததுதான் இஸ்லாத்தின் அடிப்படையில் சரியானதாகும். இது பால்ச்சமத்துவ (Gender equality) அடிப்படையிலான ஒரு நிலைப்பாடு இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியம்.
திருமண ஒப்பந்தத்தில் மணம்பெண் கையெழுத்திடல்
பெண்களும் தமது திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இந்தக் கோரிக்கையும் லிபரல் பெண் சமத்துவப்பார்வையில் தான் முன்வைக்கப்பட்டாலும் திருமணத்தின் போது மணப்பெண்ணின் சம்மதம் கட்டாயம் பெறப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் வழிகாட்டல் ஏற்கனவே அதற்கான அனுமதியை வழங்கி விட்டது. ஆனால் ஒரு பெண் தனது வலியின் (பெற்றோர் அல்லது பாதுகாவளர்) அனுமதி இல்லாமல், இன்றைய உலக ஒழங்கு அவளுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட சுதந்திரத்தை (Personal Freedom) பயன்படுத்தி தன்னிச்சையாக தனது திருமணத்தை முடிவெடுப்பதை இஸ்லாம் முற்றுமுழுதாக தடை செய்கின்றது.
நபி (ஸல்) சொன்னார்கள்;
“எந்த ஒரு பெண்ணும் தனது வலி (பாதுகாவலர்) அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டால், அவருடைய திருமணம் செல்லாது.”
பெற்றோர் அல்லது பாதுகாவளர்களின் அனுமதியின்றி திருமண ஒப்பந்தத்தில் நுழைவது ஒழுக்கக்கேட்டுக்கான வாசலை அகலத் திறக்கின்ற ஓர் விடயமாகும். இஸ்லாத்தைப் பொருத்தவரையில் திருமணம் என்பது ஓர் உன்னதமான பந்தமாகும். அல்லாஹ்வின் பெயரால் அவனது அனுமதி கொண்டு, ஓர் ஆண் ஓர் பெண்ணை அவளின் வலியின் அனுமதி பெற்று ஹலாலாக்கிக் கொள்கின்ற உயர்ந்த ஒப்பந்தம் அது. ஆணும், பெண்ணும் அல்லாஹ்வுக்கான கீழ்படிதலாக அந்த ஒப்பந்தத்துக்குள் நுழைகின்றனர். இந்நிலை எமது சமூகத்தில் தொடர வேண்டுமானால் வலியின் அனுமதியுடன் பெண்ணின் விருப்பத்தையும் தெரிவிக்கும் வண்ணம் திருமண ஒப்பந்தத்தில் வலியின் கையெழுத்தும், மணப்பெண்ணின் கையெழுத்தும் இடப்படும் முறைமை அறிமுகப்படுத்தப்படுதல் இஸ்லாத்துக்கு முரணானதாக அமையாது. எனவே அதற்கு முட்டுக்கட்டையாக நிற்க வேண்டிய அவசியம் எவருக்கும் கிடையாது.
எமக்கெதிரான சிந்தனை யுத்தம் பலமாக முடுக்கிவிடப்பட்டுள்ள இத்தகைய சிக்கலான காலப்பகுதியை பூரண ஈமானுடனும், பொறுமையுடனும் எதிர்கொள்ள அல்லாஹ் (சுபு) எமக்கு வழிகாட்டுவானாக!