விரைவான தாக்குதலில் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய சில வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் புதிய பொறுப்பாளர் அரசாங்கத்தின் தலைவராக முகமது ஹசன் அகுந்தை (குழுவின் மறைந்த நிறுவனர் முல்லா ஒமரின் நெருங்கிய உதவியாளர்) நியமித்துள்ளார்கள்.
அவரின் அரசாங்கம் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுடன் ‘பரஸ்பர மரியாதை’ அடிப்படையில் நட்பு ரீதியிலான இராஜதந்திர உறவுகளை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
“இஸ்லாமிய எமிரேட் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நல்ல இராஜதந்திர, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்க விரும்புகிறது” என்று தலிபான்களின் மூத்த அதிகாரியும், கலாச்சாரக் குழு உறுப்பினருமான பிலால் கரிமி வொய்ஸ் ஓஃப் அமெரிக்காவுக்கு தெறிவித்துள்ளார்.(வொய்ஸ் ஓஃப் அமெரிக்கா – அமெரிக்காவின் குரல்)
வரலாறு நெடுகிலும் நடைமுறையில் இருந்து வந்த சர்வதேச பாரம்பரியத்தின்படி (International Tradition) ஒரு அரசின் சட்டபூர்வமான தன்மை(Letigimacy), அதன் அதிகாரம் மற்றும் சிந்தனை பலத்திலும், அதன் அரசியல், பொருளாதார, இராணுவ, கலாச்சார ஆற்றலிலுமே நிலைகொண்டிருந்தது. எனினும் சமீபத்திய அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட விகாரமான வளர்ச்சியின் விளைவு அந்நிலையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. சர்வதேச சட்டம்(International law) என்ற ஒன்று நரித்தனமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு அரசின் சட்டபூர்வத்தன்மை சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளின் தீர்மானங்களுக்குள் அகப்பட்டது.
உத்மானிய கிலாஃபாவின் இறுதிக் காலத்தில், கிலாஃபாவின் வெற்றிகளுக்கு எதிராக ஒன்று திரண்ட கிறிஸ்தவ உலகு ஏற்கனவே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த சர்வதேச பாரம்பரியத்தை, படிப்படியாக தமக்கு சாதகமான சர்வதேச சட்டமாக மாற்றியது. அந்த சர்வதேச சட்டத்தின் அரவணைப்பில் தற்போதைய அமெரிக்க தலைமையிலான சர்வதேச ஒழுங்கு(International order) உருவானது.
சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்த சர்வதேச ஒழுங்கில், அந்த சட்டங்கள் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள்(International organizations) ஊடாக மாநாடுகள், தீர்மானங்கள், பிரகடனங்கள், கொள்கைகள் எனும் ஏமாற்றும் செயல்முறையின் மூலம் வல்லாதிக்க சக்திகளால் இயற்றப்படுகின்றன. எனினும் இந்த சர்வதேச சட்டங்கள் இத்தகைய சர்வதேச அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றுள்ள பலவீனமான நாடுகளின் மீதே அமூல்படுத்தப்படுகின்றன. இந்த சட்டங்களை இயற்றிய வல்லாதிக்க சக்திகள் மீது அவற்றை பிரயோகிக்கும் எந்த அதிகாரமும் எவருக்கும் இல்லை.
இந்த யதார்த்தத்தின்படி, தோன்றுகின்ற எந்தவொரு அரசுக்குமான சர்வதேச அங்கீகாரம் அமெரிக்காவாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாலும் வழிநடாத்தப்படும் சர்வதேச ஒழுங்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே வழங்கப்படும்.
எனவே, ‘இஸ்லாமிய அரசு’ என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கம், நபி (ஸல்) அவர்களினதும், அவர்களின் கலிஃபாக்களினதும் மாதிரியை பின்பற்ற நினைக்கும் ஒரு அரசாங்கம் ‘மதச்சார்பின்மை – Secularism’ ஐயும், மேற்கத்திய பகுத்தறிவுடைமையும் (Western rationality) அடிப்படையாகக் கொண்ட சர்வதேச சட்டத்துடன் இணங்கி, ஏனைய நாடுகளுடன் “பரஸ்பர மரியாதை” இன் அடிப்படையில் உறவை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது அல்லவா?
இந்த கேள்விக்கான பதில் “முடியும்” என்றால், அவர்கள் பின்வரும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். ஓர் இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை – (Foreign Policy), இஸ்லாத்தின் அழைப்பை ‘தஃவா மற்றும் ஜிஹாத்’ இன் மூலம் உலகிற்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கவில்லையா? ‘தஃவா மற்றும் ஜிஹாத்’ ஐ அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை நபி(ஸல்) மற்றும் அவர்களின் கலிஃபாக்களின் காலத்தில் நிறுவப்பட்டதா? இல்லையா? எம் கண் முன்னே விரிந்திருக்கும் இஸ்லாமிய உம்மத்தின் பரந்த நிலம் முஜாஹிதீன்கள் மற்றும் உம்மாவின் வெற்றியாளர்களின் இரத்தத்தால் தார்-உல்-இஸ்லாமாக மாறவில்லையா? வரலாறு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அரசுகளின் வெளியுறவுக் கொள்கை காரணமாக அல்லவா நாமும், நம் முன்னோர்களும் முஸ்லீம்களானோம்?
எனவே, எழுந்துவரும் ஆப்கானிய இஸ்லாமிய எமிரேட்டின் தலைவர்கள் இஸ்லாமிய அரசு, வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ‘இஸ்லாத்தை’ மட்டுமே செயல்படுத்த கடமைப்பட்டுள்ளது என்பதையும், அந்த இஸ்லாத்தை அதன் வெளியுறவுக் கொள்கை(தஃவா மற்றும் ஜிஹாத்)யின் மூலம் உம்மத்தின் பிரதிநிதியாக நின்று உலகம் முழுதும் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் தவறாது புரிந்து கொள்ள வேண்டும்.
பகுதி அளவில் மாத்திரம் இஸ்லாத்தை அமூல்படுத்த முயல்வதும், சர்வதேச சட்டம் போன்ற மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்லாத்தின் தூதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதை கைவிடுவதும் இஸ்லாமிய அரசு என்ற வாதத்தின் சட்டபூர்வத்தன்மையை கடுமையாக பாதிக்கும். அது இஸ்லாமிய அரசு என்ற நிலையிலிருந்து இறங்கி, இஸ்லாம் அல்லாத அரசு என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும். அந்த இழிநிலை தொடர்பாக முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அது குறித்து அல்லாஹ்(சுபு) மிகத் தெளிவாக எச்சரிக்கிறான்.
وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ
“இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக! அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.” (அல்-மாயிதா: 49)
தற்போது ஆப்கான் இஸ்லாமிய எமிரேட் தனக்கான சர்வதேச சட்டபூர்வத் தன்மையை பெருகின்ற தீவிர போராட்டத்தில் இருக்கின்றது. அந்த சர்வதேச அங்கீகாரத்தை வழக்கும் விடயத்தில் மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா சில முக்கிய சந்தேகங்களுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது. அவைதான் உண்மையில் தலிபான்கள் முஸ்லிம்களின் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாத்தை நிலைநாட்ட தீர்மானித்து விடுவார்களா?, அவர்கள் சர்வதேச சட்டத்தையும், ஒழுங்கையும் மீறி உலகளாவிய முஸ்லிம் உம்மாஹ்வை தாருள் இஸ்லாத்தின் அரவணைப்புக்குள் அடைக்களம் புகுமாறு அழைப்பு விடுக்கின்ற ஓர் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றப் போகிறார்களா? என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களிடம் மிகுதியாக காணப்படுகின்றது.
இன்னுமொரு பக்கத்தில் ஆப்கான் இஸ்லாமிய எமிரேட் சீன-ரஸ்ய சட்டபூர்வ வலையில் (legitimacy set by China and Russia) விழுந்து விடுவார்களோ என்ற கவலையும், தலிபான்கள் அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் திணிக்க நேர்ந்தால் மேற்கத்திய உலகம் ஒரு வலுவான அகதிகள் குடியேற்றச் சிக்கலை சந்திக்க நேரிடும் என்ற குழப்பமும் அவர்களிடம் தெரிகிறது.
எது எப்படியோ தலிபான்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இம்முறை தமது முன்னோடிகள் காட்டித் தந்த பாதையில் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பு குறைவானது என்பதை உணர்ந்துள்ளனர். தம்மை நோக்கி பொருளாதாரத் தடைகளும், பாரிய பொருளாதார நெருக்கடிகளும், சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுத்தலும் நிகழ்ந்து விடும் என்ற பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, அவர்கள் சர்வதேச அங்கீகாரத்தையும், சட்டபூர்வமான தன்மையையும் தேடுவதற்கு, எச்சரிக்கை உணர்வுடன் கணிசமான நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஒருபுறம், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தலிபான்களின் இஸ்லாமிய எமிரேட்டை அங்கீகரித்தால், அவர்களின் 20 வருட போரின் சட்டபூர்வத்தன்மை கேள்விக்குள்ளாகும். மறுபுறம், தலிபான்கள் தமது சர்வதேச அங்கீகாரத்தை முதன்மைப்படுத்தி தமது இஸ்லாமியப் பாதையில் மேலும் சரிவைக் காட்டினால், அவர்கள் கடுமையான உட்சர்ச்சையை எதிர்கொள்வார்கள். எனவே, இரு தரப்பினரும் கடுமையான, ஆழமான சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதே இன்றைய நிலை. இதனால், இருவரும் படிப்படியாக பிரச்சினையைத் தீர்க்க எச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால் இறுதியில் பலமிக்க மேற்கத்திய உலகம், தாலிபான்களை இன்றிருக்கும் சர்வதேச ஒழுங்கு(International Order) மற்றும் தேசிய அரசு(Nation State) முறைமைக்குள் மூழ்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடனும், நேரடியான இராணுவ படையெடுப்புக்கு(Direct Military Invasion) அவசியம் இல்லாமல், முதலாளித்துவ நாடுகளின் காலனித்துவ ஊடுருவலுக்குள்(Intelligence and Economic Incursion) கொண்டு வந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனும் செயற்பட்டு வருகின்றது.
இந்த இக்கட்டான நிலையில்
முதலில் தலிபான்களிடையே உள்ள நேர்மையான கூறுகள் இஸ்லாமிய எமிரேட் மேற்கு நாடுகளுடன் நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்டு, சரிவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக்கூடாது.
இரண்டாவது, உம்மாவிலுள்ள நேர்மையான முஸ்லீம்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள பிற இஸ்லாமிய குழுக்களின் தோல்வியுற்ற அனுபவங்களை மீண்டும் தாலிபான்களும் அனுபவிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.
முஸ்லீம்கள் அல்லாஹ்(சுபு)வின் திருப்தி பெறக் கடமைப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மற்றும் மேற்கு உலகின் அக்கிரமங்களுக்கும், துரோகங்களுக்கும் எதிராக முஸ்லிம்களை வெற்றிபெறச் செய்ய அவன் போதுமானவன் என்பதை பூரணமாக நம்ப வேண்டும்..
அல்லாஹ்(சுபு)வின் திருப்தியை விட மக்களினதும்(People), சர்வதேச சமூகத்தினதும்(International community) திருப்தியை முஸ்லிம்கள் விரும்பினால், அல்லாஹ்(சுபு) அவர்களை ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் கைகளில் விட்டுவிடுவான் என்ற எச்சரிக்கையை அவர்கள் மறந்துவிடக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்:
«مَنِ الْتَمَسَ رِضَاءَ اللَّهِ النَّاسِ كَفَاهُ اللَّهُ مُؤْنَةَ النَّاسِ ، الْتَمَسَ رِضَاءَ النَّاسِ النَّاسِ اللَّهِ وَكَلَهُ وَكَلَهُ اللَّهُ النَّاسِ النَّاسِ»
“யார் மக்களின் அதிருப்தியை பெற்று அல்லாஹ்(சுபு)வின் திருப்தியை நாடுகிறாரோ, அவருக்கு (அந்த) மக்களுக்கு எதிராக அல்லாஹ்(சுபு) போதுமானவன். எவரொருவர் மக்களின் திருப்தியை பெற்று அல்லாஹ்(சுபு)வின் அதிருப்தியை பெறுகிறாரோ, அவரை அல்லாஹ்(சுபு) (அந்த) மக்களின் கைகளிலேயே விட்டு விடுவான்.” (சுனன் அத் திர்மிதி)