ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பு நிகழ்ந்து சரியாக 19 வருடங்கள் 9 மாதங்கள் கழித்து, அமெரிக்காவினால் நிறுவப்பட்ட பொம்மை ஆட்சி வீழ்ந்திருக்கிறது. ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான நீண்ட, கடுமையான போருக்குப் பிறகு தலிபான்கள் நாட்டையும், தலைநகர் காபூலையும் வெற்றி கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மிகக்கொடூரமான போரில் சிக்குண்ட ஓர் நாடாகும். அதன் மக்கள் அவர்களின் இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி வாழ்வதற்கும், அமைதியையும், பாதுகாப்பையும் பெறுவதற்கும் வேறு எவரைவிடவும் அவசரத் தேவை உடையவர்கள். கடந்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்க பி-52 குண்டுவீச்சு விமானங்கள் மூலமும், ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலமும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் மூர்க்கத்தனமாக இடம்பெற்று வந்தன. திருமண வைபவங்கள், பெருநாள் கொண்டாட்டங்கள், மருத்துவமனைகள், பள்ளவாசல்கள் என எந்த தினங்களையும், எந்த இடங்களையும் விட்டுவைக்காது அவர்கள் மீது குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டன. அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கும், அதன் ஆக்கிரமிப்பிற்கான அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு பெரிய அமெரிக்க உளவுக் வலையமைப்பும் அமைக்கப்பட்டது.
பெரும்பாலான முஸ்லீம் நிலங்களின் தலைவிதியைப் போலவே, ஆப்கானிஸ்தானின் துன்பத்திற்கு முதன்மையான காரணம் வெளிநாட்டு தலையீடுகள் என்று கூறினால் அதனை யாரும் மறுக்க முடியாது. 1980 களின் கொடூரமான சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, கடுமையான அமெரிக்க-இங்கிலாந்து-நேட்டோ ஆக்கிரமிப்பு ஆப்கானிய மக்களின் துன்பத்தை அதிகப்படுத்தியது. இந்தப் பிந்தைய ஆக்கிரமிப்புக்கு அண்டை முஸ்லீம் ஆட்சிகளால் எவ்வாறு முற்றுமுழுதான உதவி வழங்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் ஆப்கானிஸ்தானைத் தாக்கி அழிப்பதற்கான அமெரிக்க விமான தளங்களை தமது நாடுகளில் அனுமதித்தனர். ஆக்கிரமிப்புப் படைகளுக்கு உணவளிக்கவும், ஆடை அணிவிக்கவும், ஆயுதங்களை விநியோகிக்கவும் தங்கள் பிரதேசங்கள் வழியான விநியோக வழிகளை அவர்கள் திறந்து கொடுத்தனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள்.
لا يُلدَغُ المؤمنُ من جُحْرٍ واحد مرتين
“ஒரு விசுவாசி ஒரே புற்றில் இரு முறை கொற்றப்பட மாட்டான்.”
(புகாரி, முஸ்லிம்)
மேற்கண்ட ஹதீஸின் வெளிச்சத்தில், புதிய அரசாங்கம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியம். வெளிநாட்டு சக்திகள் மற்றும் அவர்களின் பினாமிகளின் குறுக்கீடுகள் நிலைக்கும் வரை ஒரு போதும் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையோ முன்னேற்றமோ உருவாகப்போவதில்லை. மாறாக அது பாதுகாப்பற்ற வறிய நாடாகவே நீடிக்கும்.
ஆப்கானிஸ்தானில் உண்மையான அரசியல் மாற்றம் தேவை. அதற்கு அமெரிக்க அமைப்பும்(System), அதன் அரசியல் வர்க்கம்(Political Class) மற்றும் நாடு முழுவதும் நிலை கொண்டுள்ள அதன் உள்கட்டமைப்பும்(Infrastructure) வேரோடு பிடுங்கப்படுவது அத்தியாவசியம். இத்தகைய தலைகீழான அரசியல் மாற்றம் இஸ்லாத்தின் மூலம் மட்டுமே உருவாக முடியும். அது அங்கே நீதியை நிலைநாட்டும் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரிடும் இனக்குழுக்களுக்கிடையேயான பிளவுகளை குணமாக்கும்.
இந்த முக்கிய திருப்புமுனையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம்களை நோக்கி பின்வரும் அழைப்பு முன்வைக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்தாகும்.
1. அமெரிக்கா அதன் முகவர்கள் மற்றும் உளவுத்துறை உட்கட்டமைப்புடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆப்கானியப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
2. அங்கே இஸ்லாமிய கிலாஃபா அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – அது பாதுகாப்பு, கல்வி, நலன்புரி போன்ற அடிப்படை உரிமைகளை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும்.
3. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய முஸ்லிம் பிராந்தியம் ஒரே இஸ்லாமிய கிலாஃபா அரசுக்குள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதன் விளைவாக தனது குடிமக்களை பாதுகாக்கக்கூடிய, முஸ்லிம் உம்மாஹ்வின் மற்ற பகுதிகளை தன்னுடன் ஒன்றிணைக்கக்கூடிய, வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து அதன் பிரதேசங்களை பாதுகாக்கக்கூடிய சக்திவாய்ந்த ஆளுமை உள்ள ஒரு அரசை உருவாக்க முடியும்.
இந்தத் தருணத்தில் ஆப்கானிஸ்தானில் மாத்திரமல்லாது அதன் பிராந்தியத்திலும், பரந்த முஸ்லீம் உலகிலும் முஸ்லிம்கள் கொடுத்த விலையின் மீது கட்டியெழுப்பப்படும் அத்தகைய கிலாஃபா அரசை நிறுவுவதன் மூலம் இந்த உன்னத உம்மாஹ்வுக்கு மேலும் வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் அல்லாஹ்(சுபு) வழங்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.