ஆட்சியாளர்களுடன் போர் செய்வதும், இராணுவ போராட்டமுமே இஸ்லாத்தை மீண்டும் உலக அரங்கிற்கு கொண்டுவரும்; பூமியில் நிலைநாட்டும் என்ற கருத்து உம்மத்தில் ஒரு சாராரிடையே குறிப்பாக இளைஞர்களிடையே ஆழமாக பதிந்துள்ளது. இந்தக் கருத்து கீழே குறிப்பிடப்படும் நபிமொழியை ஒத்த நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டது. இமாம் முஸ்லிம் உட்பட பல சிறந்த அறிவிப்புக்கள் மூலமாக கீழ்வரும் ஹதீத் அறிவிக்கப்பட்டுள்ளது. நபி(ஸல்) சொன்னார்கள்;
“அல்லாஹ்விடமிருந்து(இஸ்லாத்திடமிருந்து) மிகத்தெளிவான ஆதாரத்தைக் காட்டக்கூடிய வெளிப்படையான குஃப்ரை(இஸ்லாம் அல்லாத ஒன்றை), (அவர்களிடம்) நீங்கள் கண்டாலேயொழிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சவால் விடுக்காதீர்கள்.” இப்னு கதீர் தனது தஃப்ஸீரிலே, கலீஃபா குஃப்ர் தீர்ப்பை நோக்கித் திரும்புவாரேயானால் மீண்டும் இஸ்லாத்தையும், ஷரீயத்தையும் அவர் அமூல்படுத்தும் வரையில் அவர் போராடப்பட வேண்டியவராவார் என விளக்கமளிக்கின்றார்.
இப்னு ஹஜர் தனது ஃபத்ஹ் அல் பாரியில் அவர்(கலீஃபா) காஃபிராகி விடுவாரேயானால், அல்லது ஷரீஆவை மாற்றி விடுவாரேயானால் அவர் போராடப்பட வேண்டியவர்; அவர் அகற்றப்பட வேண்டியவர் எனக்குறிப்பிடுகிறார். இதே கருத்து நைல் அல் அவ்தாரிலே வருகிறது. அதனை இமாம் அஷ்ஷவ்கானியும் ஆதரிக்கிறார். அதாவது ஒரு ஆட்சியாளர் ஷரீஆ அல்லாததைக் கொண்டு ஆட்சி செய்தால் அவர் அதிலிருந்து மீட்சி பெற்று பாவமன்னிப்புக்கோரும் வரையில் அல்லது அவர் பதவியிலிருந்து முற்றாக நீக்கப்படும் வரையில் போராடப்பட வேண்டும். இந்த விதி கலீஃபா இஸ்லாமிய சட்டத்தைத் தவிர்த்து இஸ்லாம் அல்லாத சட்டங்களின் பக்கம் சாய்ந்தால் மாத்திரமே பிரயோகிக்கப்படலாம். மாறாக இந்த விதி கலீஃபா இஸ்லாத்தைக் கொண்டு மாத்திரம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் கொடுங்கோலராக மாறிவிடும்போதோ அல்லது அவர் தனிப்பட்ட ரீதியில் (சொந்த பலகீனங்களின் காரணமாக) மோசமானவராக மாறி பாவங்களில் ஈடுபடுகின்றபோதோ பிரயோகிக்கப்பட முடியாது. அத்தகைய ஒரு சூழலில் அவருக்கு கட்டுப்படுவதும், அவர் பின்னால் நின்று தொழுகையில் ஈடுபடுவதும், ஜிஹாதில் கலந்து கொள்வதும் கடமையாகும். ஆனால் அவரை நேர்வழியின்பாலும், தர்மத்தின்பாலும் திருப்புவதற்காக ஆயுதம் ஏந்திப்போராடாது ஏனைய அனைத்து சாத்வீக வழிகளிலும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட ஹதீத் இன்றைய கால கட்டத்தைப் பற்றி பேச வரவில்லை. அது கிலாஃபா ஆட்சி முறை அமூலில் இருக்கின்ற கால கட்டத்தில் கலீஃபாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுவது, கிளர்ச்சியில் ஈடுபடுவது என்பன குறித்தே பேசுகிறது. இது இஸ்லாமிய சட்டக் கோவையில் ‘ஹுரூஜ் மின் அல் கலீஃபா’ அதாவது ‘கலீஃபாவின் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தல்’ என்ற பகுதியைச் சேர்ந்ததாகும்.
அதாவது இத்தகைய போராட்டம் எப்போது அனுமதிக்கப்படும் என்றால் இதுவரை குலஃபாக்கள் எம்மீது இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சி செய்து, அவர்களில் ஒருவர் இடை நடுவே இஸ்லாத்திலிருந்து விலகிச் செல்ல நினைக்கிறார் அல்லது ஒரு விடயத்தில்தானும் இஸ்லாம் அல்லாத ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறார் என்ற நிலை தோன்றும்போது நாம் அவருக்கு எதிராக ஜிஹாத் செய்வது வாஜிபாகிவிடும். எனினும் அத்தகைய ஒரு நிலையையல்ல நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். மாறாக முற்று முழுதான குஃப்ரிய வாழ்வொழுங்குதான் (Kufr Systems) முஸ்லிம் உம்மத்தின் மீது ஒரு நூற்றாண்டாக தொடர்ந்தேர்ச்சையாக அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த 100 வருடங்களில் ஒரு ஆட்சியாளர் கூட ஷரீஆவைக் கொண்டு எம்மை ஆழவில்லை. ஒருவர் கூட கிலாஃபத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கலீ.பாக இருக்கவில்லை. அவர்களின் ஆட்சி ஒழுங்கெல்லாம் மன்னராட்சி அல்லது ஒரு சில ஜனநாயக பண்புகளைக் கொண்ட அல்லது சர்வாதிகார பண்புகளைக் கொண்ட மதச்சார்பற்ற முதலாளித்துவ ஆட்சிகளாகவே இருந்து வருகின்றன. எனவே எமது யதார்த்தம் இஸ்லாமிய அரசிலே தோன்றிய ஒரு மோசமான கலீஃபாவை நீக்குவதுடன் தொடர்புபட்டதல்ல. மாறாக ஆட்சியாளர் உட்பட ஒட்டுமொத்த குஃப்ர் ஆட்சி முறைமையையே வேரடி மண்ணோடு பிடுங்கியெடுத்து அதில் தாருள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதுடன் தொடர்புடையது. எனவே இன்று தாருள் இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்கு ஆட்சியாளர்களைக் கொலை செய்வதன் ஊடாகவோ அல்லது அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதன் ஊடாகவோ முயற்சிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை தவறாக புரிந்து கொண்டதன் விளைவாகும்.
நீண்ட இஸ்லாமிய வரலாற்றில் இன்றைய உம்மத்தின் நிலையுடன் அச்சொட்டாக பொருந்திப்போகின்ற சந்தர்ப்பம் ஒரேயொரு இடத்தில் மாத்திரம்தான் நிகழ்கிறது. அது முஹம்மத்(ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் இணைந்து தாருள் குஃப்ராக இருந்த அரேபிய தீபகற்பத்தில் முதன்முதலாக தாருள் இஸ்லாத்தை நிலைநாட்டிய சந்தர்ப்பமாகும். தாருள் இஸ்லாத்தை நிறுவுவதற்காக நபி(ஸல்) மேற்கொண்ட இந்தப் போராட்டத்தின் இயல்பை உற்று நோக்கினால் அது இராணுவ ரீதியானதல்ல; மாறாக அரசியல் ரீதியானது என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அவர்களின் போராட்டத்தின் யதார்த்தத்தை ஹம்ஸா(ரழி) குறித்து வந்திருக்கும் பின்வரும் சிறிய நபிமொழியிலேயே முஹம்மத்(ஸல்) சுருக்கமாகச் சொல்லி விடுகிறார்கள்,
“உயிர் தியாகிகளின் தலைவர் ஹம்ஸாவாகும். மற்றும் கொடுங்கோல் மன்னரொருவரின் முன்னிலையில் நின்று அவரை நன்மையைக் கொண்டு ஏவி(இஸ்லாத்தை அமூல்படுத்துமாறு ஏவி) தீமையிலிருந்து (இஸ்லாம் அல்லாத அனைத்துலிருந்தும்) தடுத்து அதற்காக கொல்லப்பட்டவருமாகும்.” (அபுதாவூத்)
மேலும் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மாத்திரம்தான் முற்றுமுழுதான குஃப்ரிய முறைமை காணப்பட்டு அது முற்றுமுழுதாக இஸ்லாமிய முறைமையாக மாற்றப்பட்ட சந்தர்ப்பம் நிகழ்ந்தது. எனவே நபி(ஸல்) அவர்கள் தாருள் குஃப்ரிலிருந்து தாருள் இஸ்லாத்தை முதன்முதலில் எவ்வாறு நிறுவினார்களோ அந்த உஸ்வதுன் ஹஸனாவை(மிகச்சிறந்த முன்மாதிரியை)த்தான் நாம் பின்பற்ற வேண்டும். இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை ஆட்சியாளரை மாற்றுவதல்ல.; மாறாக முற்றுமுழுதான முறைமையையும் மாற்றுவதாகும் என்ற காரணத்தினால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கலீஃபாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதுடன் தொடர்புடைய நபிமொழியை அடிப்படையாக வைத்து ஆட்சியாளர்களுக்கு எதிராக போரில் குதிப்பதோ, அவர்களை கொலை செய்ய நினைப்பதோ கிலாஃபத்தை மீள நிலைநாட்டுகின்ற வழிமுறையாகாது. அது உம்மத்தை மென்மேலும் சிக்கலுக்குள் ஆழ்த்திவிடும்.