“தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்.” (அர்-ரஃஅத் 13:11)
முஸ்லிம் உம்மாவை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக கிலாஃபாவின் மீள்நிர்மானம் நோக்கிய கூட்டு முயற்சியில் (Collective Work) தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத பலர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த இந்த திருக்குர்ஆன் வசனத்தை பயன்படுத்துவதுண்டு. அவர்களின் தர்க்கத்தின் படி, முதலில் ஒரு முஸ்லிம் தன்னை சீர்திருத்திக்கொள்வதில் (Individual Reform or Changing oneself), அதாவது ஒருவர் தனக்குள் இருப்பதை தூய்மைப்படுத்தி பூர்த்தி செய்து கொள்வதில் கரிசனை காட்ட வேண்டும், அதன் பின்னர் மட்டுமே அவர் சமூகத்தின் தீமைகளை பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு தனிநபர்களும் தனக்கு உள்ளே இருப்பதை முதலில் மாற்றும் வரை ஒரு சமூகத்தின் நிலைமையை அல்லாஹ்(சுபு) மாற்ற மாட்டான் என்று விளக்கம் கொள்கின்றனர்.
எமது இறையச்சத்தையும், குணநலன்களையும் மேன்மைப்படுத்துவதும், தஸ்கியத் அன்-நஃப்ஸ் எனப்படும் எமது உள்ளத்தை தூய்மைப்படுத்துவதும் முக்கிய செயல்களாக நாம் கருதினாலும் கூட மேலே குறிப்பட்ட தரப்பினரின் இந்த குர்ஆன் வசனத்திற்கான தவறான விளக்கத்தை தெளிவுபடுத்துவது அதிமுக்கியமானதாகும்.
அர்-ரஃஅத் அத்தியாயத்தின் 11ஆம் வசனத்திற்கான பின்வரும் தஃப்ஸீர் அழைப்புப்பணியின் கூட்டுப்பண்பை விளக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்படுகிறது. மேலும் இவ்வசனத்தில் அல்லாஹ்(சுபு) பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொற்களையும் தனித்தனியாக பிரித்து வகைப்படுத்தி அதன் உண்மை அர்த்தத்தை தெளிவுபடுத்துகிறது. அதே நேரத்தில் இவ்வசனத்துக்கு வழங்கப்படும் சுயநலச் சிந்தனையால் (Individualism) பாதிக்கபட்ட மேற்கத்திய மதச்சார்பற்ற (Western Secular) விளக்கத்தை இந்த விரிவுரை தவிடுபொடியாக்குகிறது.
இந்த இறைவசனத்தின் அடிப்படை இயல்பு:
இந்த இறைவசனம் ‘இக்பாரியா‘ எனப்படும் ‘தகவல்’ ஐ தெரிவிக்கின்ற வகையைச் சார்ந்தது. அல்லாஹ்(சுபு) எப்போது ஒரு சமூகத்தின் நிலைமையை மாற்றுவான் என்பது பற்றிய பொதுவான அடிப்படையை ஒரு தகவலாக மாத்திரம் இது தெரிவிக்கின்றது. ஆனால் அதற்காக, இந்த வசனம் ஓர் சமூகம் மறுமலர்ச்சி பெறுவதற்கான விரிவான வழிமுறையை வழங்குகிறது என்று யாரும் கருதி விடலாகாது. இதற்கு முன்பிருந்த எந்தவொரு அறிஞரும் அந்த நோக்கத்துடன் இந்த வசனத்தை பயன்படுத்தியது கிடையாது. இமாம் அல்-குர்துபி தனது தஃப்ஸீரான ‘அல்-ஜாமியு லி அஹ்காம் உல்-குர்ஆன்’ என்ற தலைப்பில் “ ‘அக்பர அல்லாஹு’ – அல்லாஹ் அறிவிக்கிறான்” என்ற ஒரு கருத்தில் மட்டுமே இவ்வசனத்தை அணுகியிருப்பது அதற்கு ஒரு உதாரணமாகும். எனவே இது ஒரு தகவல் சொல்லும் வசனம் மட்டுமே. (அக்பர என்ற வினைச்சொல்லிருந்துதான் இக்பாரிய்யா என்ற அடைமொழி உருவானது) இது மாற்றம் தொடர்பான அல்லாஹ்வின் விதி குறித்து தெரிவிக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
மாற்றம் யாரில் ஏற்படுகிறது (மஃப்ஊலுல் ஃபிஅல்)?
விவாதத்தில் உள்ள வினைச்சொல் (ஃபிஅல்) ‘மாற்றம்’ என்பதாகும். அந்த மாற்றத்தை செய்பவன் (ஃபாயில்) அல்லாஹ்(சுபு) ஆவான். அதன்படி (அல்-மாஃபூல்) வினைச்சொல்லின் செயற்படுபொருள் என்ன? அதாவது, அல்லாஹ் ‘யாரை’ மாற்றப்போகிறான்? என்பதை ஆராய்வது முக்கியமாகும்.
அது பற்றி இந்த வசனத்தில் அல்லாஹ்(சுபு) குறிப்பிடும்போது ‘… மாஃபி கவ்மின்…’ என்று அதனை வரையறுக்கின்றான்; அதாவது, ‘எந்தவொரு சமூகத்திலும் உள்ளதை’ என்று குறிப்பிடுகின்றான். எனவே இந்த மாற்றம் ‘கவ்ம்’ என்ற ஒன்றில் ஏற்படும் என்பது தெளிவாகிறது. எவ்வாறானால் ‘கவ்ம்’ என்ற இந்த வார்த்தையின் பொருள் என்ன?, அதன் மீது நிகழும் மாற்றத்தின் தன்மை என்ன என்பது பற்றி நோக்க வேண்டும் அல்லவா?
‘… மாஃபி கவ்மின்…’ என்ற வார்த்தையின் ஆரம்பத்தில் வருகின்ற ‘மா’ என்பது ‘ஆம்’ (மா அல்-உமூம்) ஆக வந்துள்ளது. அதாவது ‘மா’ எந்த வரையறையும் இன்றி பொதுவாக வந்துள்ளது. எனவே ‘மாற்றம்’ கவ்மிலுள்ள அனைத்தின் மீது வரும் என்று இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.
மேலும், கவ்ம் என்ற சொல் முத்லக் (கட்டுப்பாடற்ற) வடிவத்தில் வந்துள்ளது, எனவே இது காஃபிர் கவ்ம்களுக்கும் பொருந்தும். ஆகவே, “எந்த கவ்மிலும் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான்” என்பதே இதன் பொருளாக அமையும்.
மேலும் இந்த திருமறை வசனத்தில் கவ்ம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது சமூகத்தில் நிகழும் கூட்டான மாற்றத்தை குறிப்பிடுகிறதேயொழிய தனிப்பட்ட மாற்றம் பற்றி அது குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவ்ம் என்ற சொல் அரபு மொழியில், சமூகம் அல்லது ஷாஅப் (மக்கள்) என்று பொருள் கொள்ளப்படும். அது உம்மாஹ் என்ற பொருளையும் குறிக்கும். கவ்ம் என்பது ஒருபோதும் தனிநபர் ஒருவரையோ அல்லது தனிநபர்களின் தொகுப்பையோ குறிக்க மாட்டாது. மாறாக ஃபர்த் அல்லது ஷாக்ஸ் என்பனவே முறையே ஒரு தனிநபரையோ, ஒரு மனிதரையோ குறிக்கும் சொற்களாகும். அந்த சொற்களின் பன்மைகள்தான் அஃப்ராத் அல்லது ஷாக்ஷியாத் என்பனவாகும். அதாவது தனிநபர்களின் அல்லது மனிதர்களின் தொகுப்பைக் இவை குறிக்கின்றன. இதன்படி தனிப்பட்ட சீர்திருத்தத்தின் பாதையை குறிப்பதற்கு இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படலாம்.
எனினும், இந்த சொற்களில் எதனையும் இந்த வசனத்தில் அல்லாஹ்(சுபு) பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக ‘தேசம்’ அல்லது ‘உம்மாஹ்’ என்ற பொருள் தரும் ‘கவ்ம்’ என்ற சொல்லையே எவ்வித கட்டுப்பாடுமின்றி பொதுப்படையாகப் பயன்படுத்தியுள்ளான். தேசம் என்ற சொல் ஓர் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை உள்ளடங்கினாலும் கூட, அந்த மக்கள் கூட்டம் ஒரு பொதுவான அடையாளத்தால் பிணைக்கப்பட்டுள்ளமையும், பொதுவான ஒன்றிணைக்கும் சக்தி அதற்கு இருப்பதுவே அதன் முக்கிய அம்சமாகும். அதனால்தான் அரபு மொழியில் இனத்தால் ஒன்றுபட்ட ஒரு தேசத்தை விவரிக்க ‘கவ்ம்’ என்ற சொல்லும், தேசியவாதத்தைக் குறிக்க ‘கவ்மியாஹ்’ என்ற சொல்லும் உபயோகிக்கப்படுகின்றன.
இன்னுமொரு விடயத்தைக் கவனித்தால், அரபு மொழியில் கவ்ம் என்ற பதம் குறிப்பாக இனக்குழுக்களையோ அல்லது கருத்தியல் சார்ந்த சமுகங்களையோ மாத்திரம் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. மாற்றமாக அது எத்தகையதொரு சமூகத்தையோ அல்லது தேசத்தையோ குறிப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படலாம். இந்த திருமறை வசனத்திலும் அது பொதுப்படையாகவே இடம்பெற்றுள்ளதை நாம் காண்கிறோம். எனவே அந்த வார்த்தை இனக்குழுக்களைக் குறிக்கலாம் அல்லது முஸ்லிம் சமூகம், கம்யூனிச சமூகம் போன்ற கருத்தியல் சார்ந்த சமூகங்களைக் குறிக்கலாம். ஆக மொத்தத்தில் “தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்.”(அர்ரஃஅத் 13:11) என்ற வசனம் ஒரு சமூகத்தின் அல்லது தேசத்தின் கூட்டான மாற்றம் பற்றியே குறிப்பிடுகிறது. மாறாக தனிநபர்கள் ஒவ்வொருவரினதும் தனித்தனியான மாற்றம் பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறு பொருள் கொள்வது ஒரு பிரள்வான விளக்கமாகும். ‘கவ்ம்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘அஃப்ராத்’ அல்லது ‘ஷாக்ஷியாத்’ என்ற சொற்களை அல்லாஹ்(சுபு) பயன்படுத்தியிருந்தால் நாம் அவ்வாறு பொருள் கொள்ள முடியும். ஆனால் ‘கவ்ம்’ என்ற சொல்லை அல்லாஹ்(சுபு) பயன்படுத்தியிருப்பதால் ஒரு சமூகத்தின் கூட்டு மாற்றம் பற்றியே அவன் எமக்கு விபரிக்கிறான் என்றே நாம் பொருள் வேண்டும்.
அல்லாஹ்(சுபு) குறிப்பிடும் மாற்றம் நிகழ ‘கவ்ம்’ இல் என்ன இடம்பெற வேண்டும்?
அது பற்றி அல்லாஹ்(சுபு) குறிப்பிடும்போது ‘ஹத்தா யுஹையிரு’ அதாவது ‘அவர்கள் அனைவரும் மாறும் வரையிலும்’ என்ற ஓர் நிபந்தனை பற்றி குறிப்பிடுகின்றான். இவ்வசனம் ஹத்தா – (வரையிலும்) என்ற நிபந்தனை விதி (சீகத்துஷ் ஷர்த்) உடன் வந்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் மாறாத வரையிலும் அல்லாஹ்(சுபு) மாற்ற மாட்டான் என்ற பொருளை இவ்வசனம் கொண்டுள்ளது. அதன்படி ‘கவ்ம்’ கூட்டாக இணைந்து தன்னை மாற்றிக் கொள்ளாத வரையிலும் அல்லாஹ்(சுபு) அவர்களின் நிலைமையை மாற்ற மாட்டான். எனவே மாற்றத்திற்கான அடிப்படை நிபந்தனை என்னவென்றால், அதற்கு தேவையான நடவடிக்கை கவ்மிலிருந்து நிகழ வேண்டும் – அதாவது, மாற்றத்தை அல்லாஹ்(சுபு) ஏற்படுத்துவான் என்று எதுவும் செய்யாது காத்திருக்க முடியாது.
மேலும் செய்வினைச்சொல்லான ‘யுஹையிரூ’ என்பதை அல்லாஹ்(சுபு) பயன்படுத்தி உள்ளதால் மாற்றத்திற்கு தகுதி பெற ‘கவ்ம்’ ஏதாவது செய்தாக வேண்டும், அதுவல்லாமல் மாற்றத்தை அவர்கள் பெற மாட்டார்கள்.ஆகவே, அல்லாஹ்வின் மாற்றத்திற்கு அவர்கள் தகுதி பெறுவதற்காக இந்த கவ்மிலிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? ஒவ்வொருவரும் தன்னைத் தானே தனித்தனியாக மாற்றிக் கொள்ள வேண்டுமா? பின்னர் ஏனைய தனிநபர்களையும் அவ்வாறு தம்மை மாற்றிக் கொள்ளும்படி கோர வேண்டுமா? நிச்சயமாக இல்லை, மாறாக அல்லாஹ் (சுபு) கவ்முக்கு ‘யுஹையிரூ’ என்ற வினைச்சொல் மூலமாக உரையாற்றுகிறான். அதாவது ‘அவர்கள் மாறும் வரை…’ என்ற நிபந்தனையை முன்வைக்கிறான். எனவே ‘கவ்ம்’ அதாவது தேசம் அல்லது சமூகம் அல்லது உம்மாஹ் ‘யுஹையிரூ’ ஆக வேண்டும்.
இந்த சொல் பன்மை (ஜமா) – படர்க்கை (கா’யிப்) ஆண்பால் (முதக்கிர்) இல் வந்துள்ள ஓர் செய்வினைச் (ஃபிஅல்) சொல்லாகும். அத்துடன் அது நிகழ்கால (முதாரி) வடிவில் வந்துள்ளது.
இந்த வினைச்சொல் பன்மையாக இருப்பதாலும், செய்வினைச் சொல்லாக இருப்பதாலும் மாற்றம் என்ற நிலைக்கு தகுதி பெறுவதற்காக கவ்முக்குள் உள்ள அனைத்து நபர்களும் கூட்டாக இணைந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதோடு அரபு மொழியில் ஆண்பால் பன்மை என்பது குறிப்பாக வரையறுக்கப்படாத விடத்து ஆண் மற்றும் பெண் இருவரையும் உள்ளடக்கிய வினையாகவே அது கருதப்படும் என்பதால் பால் வேறுபாடு இன்றி அனைவரும் அதில் ஈடுபட வேண்டும்.
அதன்படி ‘ஆண், பெண் அனைவருமே கூட்டாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வரை…’ என்ற அர்த்தத்தையே இந்த திருமறை வசனம் குறிக்கிறது என்பது மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
எவற்றை அவர்கள்(கவ்ம்) மாற்ற வேண்டும்?
“…மா பி அன்ஃபுஸிஹும் – தங்களுக்குள் உள்ள அனைத்திலும்” என்று அல்லாஹ்(சுபு) அந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறான். இங்குள்ள ‘மா’ என்பது ‘மா அல்-உமூம்’ என்பதால் குறிப்பிட்ட இலக்கில்(கவ்மில்) உள்ள எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும். மேலும், இவ்வசனத்தில் ‘நஃப்ஸ்’ என்ற இஸ்ம் (பெயர்ச்சொல்) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தன்னைத்தானே என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது – அதாவது கவ்ம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொருளைக் குறிக்கின்றது. மாறாக ‘நஃப்ஸ்’ என்பது ஒரு நபருக்குள் இருப்பதை (ஆன்மீக ரீதியாகவோ வேறு ஏதேனும் விதத்திலோ) மாற்ற வேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கவில்லை.
அரபு மொழியில் ‘அன்ஃபுஸ்’ என்பது நஃப்ஸின் பன்மையாகும். ஆகையால், அவர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் அனைத்தையும் ஒரு தேசமாக (தனிநபர்களாக அல்ல) கூட்டாக மாற்றும் வரை, அவர்களின் நிலைமையை மாற்ற மாட்டேன் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான். மேலும் அவர்கள் ‘கவ்ம்’ என்று அழைக்கப்படுகிறார்கள்; ‘அஃப்ராத்’ என்று அழைக்கப்படவில்லை. இவ்வசனத்தில் வந்துள்ள வினைச்சொல்லும் பன்மை வடிவத்தில் வந்துள்ளதால் அது ஒவ்வொரு தனிமனிதனையும் தனியாக உரையாற்றவில்லை. மாறாக தேசத்தில் உள்ள அனைத்து தனிநபர்களையும் கூட்டாக உரையாற்றுகிறது, அவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வரை அல்லாஹ் அவர்களை(அவர்களது தேசத்தை) மாற்றமாட்டான் என்று பொருள் கொள்வதே சரியானதாகும்.
இந்த மாற்றத்தின் தன்மை என்ன?
இந்த திருமறை வசனத்தில் ‘கவ்ம்’ என்ற சொல்லை கட்டுப்பாடற்ற வடிவத்தில் அல்லாஹ்(சுபு) அருளியிருப்பதின் ஊடாக முஸ்லிம் சமூகம் அல்லது முஸ்லிம் அல்லாத சமூகம் என்ற வேறுபாடு இல்லாது மாற்றம் நிகழ வேண்டுமானால் அனைத்து சமூகங்களுக்கும் அல்லாஹ்(சுபு) இன் விதி பொதுவானது என்பதை எமக்கு தெளிவுபடுத்துகிறது. அது எந்தவொரு தேசத்துக்கும் அல்லது மக்கள் குழுவிற்கும் பொருந்தும் அல்லாஹ்வின் ஸுன்ஆ ஆகும். எம்மில் பலர் இந்த வசனத்தை தனிநபர் சீர்திருத்தத்திற்கான சான்றாக உபயோகித்து, முஸ்லிம்கள் முறையாக தொழ வேண்டும், நோன்பு நோற்க வேண்டும், அவை போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு பிறரைத் தூண்ட வேண்டும் – அவ்வாறு செய்வது மறுமலர்ச்சிக்கான பாதையாக அமையும் என்று வாதிடுகின்றனர். ஆனால் இந்த வசனம் முஸ்லிம்களை மாத்திரம் குறிக்கவில்லை – மாறாக முஸ்லிம் அல்லாத சமூகங்களையும் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கிடையாது – ஆனால் அவர்கள் மறுமலர்ச்சி அடைந்தும், முன்னேற்றம் அடைந்தும்(தவறான திசையாக இருந்தாலும்) இருப்பதை நாம் காண்கிறோம்.
எனவே அல்லாஹ்(சுபு) குறிப்பிட்டுள்ள மாற்றம் பற்றிய கருத்து வணக்க வழிபாடுகள், நற்பண்புகள், இறையச்சம் என்பவற்றுடனோ, அல்லது முஸ்லிமாக இருப்பது என்பதுடனோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி ‘கவ்ம்’ என்ற பதம் கட்டுப்பாடற்ற முறையில் வந்துள்ளதால் அது ‘காஃபிர்’ தேசங்களுக்கும் பொறுந்துவதுடன் அதன் நிதர்சன உதாரணங்களையும் நாம் சான்று பகர்கின்றோம். காஃபிர் தேசங்கள் எம்மை ஆட்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பதையும் நாம் கண்டுள்ளோம். குறிப்பாக மேற்குலக தேசங்கள் மதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தும், அதனை வாழ்வியல் விவகாரங்களிலிருந்து ஒதுக்கியும், அனாச்சாரங்களையும், அசிங்கங்களையும் தமது அரசியலமைப்பு உரிமைகளாகக் பிரகடனப்படுத்தியும், அல்லாஹ்(சுபு)வின் நேசர்களுக்கு எதிராக அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வந்த போதிலும் கூட அவர்கள் மறுமலர்ச்சியும், முன்னேற்றமும் கண்டுள்ளார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எனவே குறிப்பிடப்படும் மாற்றம் வெறுமனவே ஆன்மீக ரீதியானதோ, ஒழுக்க ரீதியானதோ அல்லது தனிநபர் ரீதியானதோ அல்ல. எனவே அது ஓர் தேசத்தின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்ற கருத்துக்கு வர முடியுமா?
அவ்வாறானால் இவ்வசனத்தில் என்ன மாற்றம் பற்றி குறிப்பிடப்படுகிறது?
இந்த மாற்றம் கருத்தியல் மாற்றம், ஒரு பொதுவான சித்தாந்தத்தை (முஸ்லிம்கள் அல்லது குஃபார்கள் இருவருக்கும் பொருந்தக்கூடிய) அடிப்படையாகக் கொண்டு ஒன்றுபடும்போது ஒரு தேசத்தில் ஏற்படும் மாற்றம். அந்த தேசத்தவர்கள் வாழ்க்கையை பார்க்கும் கோணத்தையும், அவர்களின் உறவுகளின் அடிப்படையையும், அவர்களை ஆளும் முறையையும் மாற்றி அமைக்கின்ற மாற்றம் ஆகும். இவ்வாறு கம்யூனிஸத்தை ஏற்று கம்யூனிஸ்டுகள் தம்மை முழுமையாக மாற்றிக்கொண்டபோது அவர்கள் முன்னேற்றம் அடைந்தனர். அல்லாஹ்(சுபு)வும் அவர்களின் நிலையை மாற்றியமைத்தான் – அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்களாக இருந்தபோதிலும் கூட. மேலும், அவர்களுக்கு முன் இருந்த ஐரோப்பியர்கள் மதச்சார்பின்மையை (Secularism) தங்கள் சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டு தம்மை மாற்றியமைத்து இணைந்த போது, அல்லாஹ்(சுபு) அவர்களின் விவகாரங்களை மாற்றியமைத்தான். அவர்கள் எங்கள் மீது மிகக் கொடுமையான ஆதிக்கம் செலுத்தினார்கள். அல்லாஹ்(சுபு)வின் சட்டமியற்றும் அதிகாரத்தில் கை வைத்தார்கள். இருந்தாலும் அல்லாஹ்(சுபு) அவர்கள் தம்மை அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டமைக்கு ஏற்ப அவர்களை மாற்றி அமைந்தான். அல்லாஹ்(சுபு) எம்மை நேசித்த போதிலும், அவர்களை முற்றாக வெறுத்த போதிலும் கூட, அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கும், எம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்தான்.
ஆனால் மறுபக்கத்தில் முஸ்லிம் உம்மாஹ் உலகத்தில் எவரிடத்திலும் இல்லாத உயர்ந்த இஸ்லாமிய சித்தாந்தத்தை தன்னிடத்தில் கொண்டுள்ளது. எனினும் அதனைக் கொண்டு தம்மை ஒன்றிணைக்கவோ அல்லது தமது வாழ்வின் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அதனூடாக விடை தேடவோ அது முயலவில்லை. இவ்வாறு முஸ்லிம் ‘உம்மாஹ்’ தனது ‘கவ்ம்’ இல் உள்ளதை முற்றாக மாற்றி அமைப்பதற்கு எத்தகைய முயற்சியும் செய்யவில்லை. உம்மத்தை ஆள்வதற்காக இறைவேதம் வழி காட்டிய ‘கிலாஃபா’ ஆட்சிமுறையை உலகில் மீண்டும் நிறுவும் பணிக்காக தன்னை அர்ப்பணிக்கவில்லை.
எனவே அல்லாஹ்(சுபு), இந்தக் கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இறைவசனத்தின் விதிக்கு ஏற்ப, முஸ்லிம் உம்மாஹ்வின் நிலையையும் மாற்றி அமைக்க மாட்டான். இந்த நிலைப்பாடு ‘மாற்றம்’ குறித்த அல்லாஹ்(சுபு)வின் நிரந்தரமான ‘ஸுன்ஆ’ ஆகும். முஸ்லிம் உம்மாஹ் என்ற இந்த ‘கவ்ம்’ தன்னைத்தான் அடிப்படையிலும், முற்று முழுதாகவும் மாற்றிக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாத வரையில் அதன் நிலையை அல்லாஹ்(சுபு)வும் மாற்றி அமைக்க மாட்டான்.
எனவே இந்த இறைவசனத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு உம்மாஹ் தனது இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு ஒட்டுமொத்தமாகத் திரும்பும்போது, அதனது உறவுகளை இஸ்லாமிய அகீதாவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளும்போது, அதனது சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் இஸ்லாமிய கருத்தியல் கட்டுப்படுத்தும்போது, அதன் நலன்களை அதன் ஆளும் அமைப்பான கிலாஃபா நிர்வகிக்கும்போது – அப்போது அல்லாஹ்(சுபு) நாம் வீழ்ந்திருக்கும் அதல பாதாளத்திலிருந்து எம்மை மீட்டு மறுமலர்ச்சியின் பாதையில் பயணிக்கச் செய்வான்.
இதுதான் “தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்.” (அர்ரஃஅத் 13:11) என்ற ‘மாற்றம்’ குறித்த திருமறை வசனம் எமக்கு கற்றுத்தரும் பாடமாகும். எனவே ‘சமூக மாற்றம்’ பற்றி பேசுகின்ற பலர் இந்த அல்குர்ஆன் வசனத்தை, ‘சமூக மாற்றம்’ தனிநபர் சீர்திருத்தத்தில்தான் தங்கியுள்ளது என்று வாதாடுவதற்கும், முற்றுமுழுதான சமூக மாற்றத்திற்கான கூட்டுப்பணியில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கும் சான்றாகப் பயன்படுத்துவது தவறானதாகும். அவர்கள் தமது புரிதலை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அல்லாஹ்(சுபு) எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!