தீனுல் இஸ்லாம் கிழக்கு, மேற்கென்ற வேறுபாடின்றி உலகின் அனைத்துப் பகுதிகளையும் தனது ஆளுகைக்குட்படுத்தும் என்ற சுபசோபனங்களை தாங்கிய பல ஹதீத்களை நாம் காண்கிறோம். கிலாஃபத்தின் மீள் வருகை பற்றிய முன்னறிப்புக்களும் அதற்குள் அடங்கும். இந்த சுபசோபனங்களையும், முன்னறிப்புக்களையும் கேள்விப்படுகின்ற சிலருக்கு இந்தச் செய்திகள் உத்வேகத்தை வழங்குவதற்கு பதிலாக ஆற்றாமையையும் வளர்த்து விடுகின்றன. விதி விட்ட வழியில் அனைத்தும் நடந்தேறும்; நாம் ஓரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என அவர்கள் சாய்ந்திருக்கின்றனர். அதனால் கிலாஃபத்தின் மீள்வருகைக்கோ அல்லது இஸ்லாத்தின் வெற்றிக்கோ எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாது வாக்களிக்கப்பட்ட அந்த வெற்றி வரும் வரையில் காத்திருக்கின்றனர்.
இந்தச் சிந்தனையின் தவறை நாம் உணர வேண்டும். அதனை உணர்வதாக இருந்தால் அகீதாவுக்கும், ஷரீஆவுக்கும், அல்லாஹ்(சுபு)வின் வாக்குறுதிகளுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை துல்லியமாகப் புரிவது இன்றியமையாததாகும். அகீதா என்பது ஒரு மனிதனது நம்பிக்கை சார்ந்த, அனைத்தினதும் அடிப்படை சார்ந்த விடயமாகும். எந்தவோரு மனிதனும் தன்னுள் எழுகின்ற அடிப்படையான கேள்விகளுக்கான பதிலையே அகீதா வரையறுக்கிறது. வாழ்வின் நோக்கம் என்ன? இந்த பிரபஞ்சத்திற்கு மனிதன் எவ்வாறு வந்தான்? மரணத்தின் பின்னால் அவனுக்கு என்ன நடக்கும்? இந்த வாழ்வுக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? அதாவது இந்த வாழ்வுக்கும் மரணத்தின் பின்னான நிலைக்கும் இடையே ஏதேனும் தொடர்பிருக்கிறதா? இவை போன்ற அடிப்படையான கேள்விகளுக்கான விடையே ஒரு மனிதனின் அடிப்படைக்கொள்கையாக அல்லது ஒரு முஸ்லிமின் அகீதாவாக உருப்பெறுகிறது. இந்தக் கேள்விகள் அனைத்தினதும் இறுதி இலக்கு இந்த வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்வதாகும். அந்தவகையில் ஒரு முஸ்லிம் தன்னை, ஏக இறைவனான அல்லாஹ்(சுபு), அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்வதற்காக, இந்த உலகில் படைத்துள்ளான் என்பதாகவும், தனது செயல்கள் ஒவ்வொன்றிற்கும் மறுமையில் தான் அவனிடம் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் உறுதியாக நம்புகிறான். இந்த உலகில் தான் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டல்களை அந்த ஏக இறைவன் எவ்வித குறையும் இல்லாது தனது தூதர்களினூடாக அனுப்பி வைத்துள்ளான் எனவும் அவன் உறுதியாக ஏற்றுக்கொள்கின்றான்.
இந்த அகீதா மாத்திரம்தான் ஒரு மனிதனின் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என்றாலும்கூட, இந்த அகீதா மாத்திரம் அவனது செயல்களை வழிப்படுத்த போதுமானது அல்ல. அவனது செயல்களுக்கான வழிகாட்டுதல்களை அஹ்காம் அஷ்ஷரீஆ என்ற வடிவில் அல்லாஹ்(சுபு) வேறாக அருளியுள்ளான். எனவே வணக்க வழிபாடுகள் தொடக்கம் இஸ்லாமிய சமூகப், பொருளாதார, ஆட்சி ஒழுங்கு வரைக்கும் வெறுமனவே அகீதாவை ஏற்றுக்கொண்டவுடன் வழிகாட்டல் கிடைத்து விடாது. மாறாக அவற்றிற்கு அஹ்காம் அஷ்ஷரீஆவின் துணை தேவை. இன்னும் இலகுவாக இந்தக் கருத்தை விளக்குவதாக இருந்தால் ஓர் முஸ்லிம் அல்லாஹ்(சுபு)தான் அர்ராஷிக் (வாழ்வாதாரங்கள் அனைத்தையும் வழங்குபவன்) என ஏற்றுக் கொள்கிறான். எனவே அவன்தான் மனிதர்கள், மிருகங்கள் உட்பட பிரபஞ்சத்தின் அனைத்தையும் போஷித்துப் பராமரிக்கிறான் என நம்புகிறான். இருந்தாலும் கூட அந்த ஷிர்க் தனது வீடுதேடி வரும் என்ற நம்பிக்கையுடன் அதற்காக எவ்வித முயற்சியிலும் ஈடுபடாது அவன் காத்திருக்க முடியாது. மாற்றமாக அந்த ரிஷ்க்கை அடைவதற்காக அல்லாஹ்(சுபு) விதித்திருக்கின்ற கட்டளையை அவன் அமூல்ப்படுத்த வேண்டும். “பூமியெங்கும் பரவிச் சென்று அல்லாஹ்(சுபு) அருளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்” (அல்ஜும்ஆ:10) என்ற ஷரீஆ விதியை அவன் பின்பற்ற வேண்டும்.
அதேபோல அல்லாஹ்(சுபு) மாத்திரம்தான் வெற்றியையும், உதவியையும் அளிப்பவன் என்பதாக அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் அந்த வெற்றியை அடைந்து கொள்வதற்கு அதற்கான ஹுக்ம் ஷரீய்யை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
“… அவர்களுக்காக உங்களால் முடிந்த அனைத்து பலத்தையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.” (அன்ஃபால்:60) என்ற ஷரீஆ விதிக்கிணங்க தமது சக்திகளையும், படைபலத்தையும் பலப்படுத்த வேண்டும்.
எனவே செயல்கள் அனைத்தும் அஹ்காம் ஷரீஆவின் வழிகாட்டலிருந்து பெறப்பட வேண்டும் என்ற புரிதலை எம்முள் ஏற்படுத்துவது கட்டாயமாகும். அல்லாஹ்(சுபு)தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றான் என்ற எமது ஈமானோ அல்லது தவக்குலோ(பொறுப்புச் சாட்டுதலோ) அல்லாஹ்(சுபு) விதித்திருக்கின்ற ஹுக்ம்களை பின்பற்றுவதிலிருந்து எம்மை பராக்காக்கி விடக்கூடாது. பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் இடம்பெற்ற மிகப்பிரபல்யமான ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மனிதர் தனது ஒட்டகத்தை கட்டி வைக்காது விட்டுவிட்டு “நான் அல்லாஹ் மீது தவக்குல் வைக்கிறேன்” எனக்கூறிய போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “அதனைக் கட்டுங்கள், பின்னர் அல்லாஹ் மீது தவக்குல் வையுங்கள்” என்று வழிகாட்டியது நாம் மேலே சொன்ன கருத்தை திருத்தமாக முன்வைக்கிறது.
அல்லாஹ்(சுபு)விடம் இருந்துதான் வெற்றி கிட்டும் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை இருந்தாலும் கூட, அவன்(சுபு)தான் தனது தூய விசுவாசிகளுக்கு அதிகாரத்தை பரிசாக வழங்குவான் என அசைக்க முடியாது நம்பினாலும் கூட, அல்லாஹ்(சுபு) அதற்காக கடமையாக்கியிருக்கும் விடயங்களை புரக்கணித்து விட முடியாது. மாறாக அவை அனைத்தையும் நாம் செய்தாக வேண்டும். ஒன்றுமே செய்யாது அமர்ந்து கொண்டு அல்லாஹ்(சுபு)வின் உதவி வரும், வரும் என்று காத்திருப்பது மிகப் பிழையான புரிதலாகும். அதற்காக நாம் எண்ணிடலங்கா துஆக்களை கேட்டாலும் சரியே. எனவே ஸஹாபாக்கள் குரைஷித் தலைவர்களுக்கு எதிராகவும், அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும் எவ்வித சமரசமுமற்று முன்னெடுத்த போராட்டம் போன்றதொரு போராட்டம் இன்றும் தேவைப்படுகிறது. தீனுல் இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக அத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பது பர்த்தான கடமையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தை இந்த மண்ணில் நிலைநாட்டுவதற்காக எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததன் பின்னால் மாத்திரமே மறுமையில் அல்லாஹ்(சுபு)வின் முன்னிலையில் குற்றமற்றவர்களாக எழுந்து நிற்க முடியும். அதனைத்தான் ஷரீஆ எம்மிடம் எதிர்பார்க்கின்றது; விதியாக்குகின்றது.
நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஏராளமான ஹதீத்களை நபி(ஸல்) அறிவித்துள்ளார்கள். அல்லாஹ்(சுபு)வும் தனது திருமறையிலே முஃமின்களுக்கு வழங்க இருக்கின்ற நிச்சயமான வெற்றி பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றான். எனினும் அதே திருமறையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையை பின்பற்றுவதை முஸ்லிம்கள் மீது கடமையாக்கியிருக்கிறது. இது எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தயார்படுத்துதல் தொடர்பான ஷரீஆ விதிகளை முழுமையான நடைமுறைப்படுத்தி போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டார்களோ அதனை ஒத்தது. அந்த ஆயத்தங்கள் அனைத்தையும் அல்லாஹ்(சுபு)வின் வெற்றி பற்றிய வாக்குறுதிகளை நேரடியாக பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் செய்தார்கள். ஸஹாபாக்களும் இந்த தீன் நிச்சயமாக மேலோங்கும் என்பதை உறுதியாக நம்பியிருந்தாலும் அவர்கள் அதற்காக உட்கார்ந்து காத்திருக்கவில்லை. மாறாக அவர்கள் தமது கடமைகளை முறையாகச் செய்தார்கள். இறுதியில் அல்லாஹ்(சுபு) வாக்களித்த அந்த வெற்றி வந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் வெற்றியுடன் தொடர்புடைய ஹ}க்ம் ஷரீய்க்களை ஒன்றுவிடாமல் பின்பற்றினார்கள்,
எனவே இன்று நாம் கிலாஃபத்தை மீள நிலைநாட்ட வேண்டுமென்றால் அதற்காக அல்லாஹ்(சுபு) விதித்திருக்கின்ற பணிகள் அனைத்தையும் செய்யவேண்டும். மாறாக அல்லாஹ்(சுபு)வின் நஸ்ர் வானத்திலிருந்து தானாக இறங்கும் என்று காத்திருக்க முடியாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்(சுபு) விதித்த அதிமுக்கிய கடமைகளில் ஒன்றை கைவிட்ட குற்றத்திற்காக மறுமையில் அவனது கோபத்தை சம்பாதிப்பதற்கே வழி வகுக்கும். மேலும் கிலாஃபத்தை மீள நிலைநாட்டுவது என்ற ‘பர்த்’ வெறுமனவே ஒரு சாதாரண ‘பர்த்’ கிடையாது. மாறாக அதற்காக முஹம்மத்(ஸல்) தனது இன்னுயிரியையும் கொடுக்க ஆயத்தமாக இருந்தார்கள். ஸஹாபாக்கள் தமது வாழ்க்கை முழுவதையும் அதற்காக அர்ப்பணித்தார்கள். எனவே முஹம்மத்(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் எத்தகைய முக்கியத்துவத்தை இந்த உயர்ந்த கடமைக்காக கொடுத்தார்களோ, அத்தகைய முக்கியத்துவத்தை நாமும் கொடுத்து, அதற்கான ஷரீஆ வழிமுறையைப் பின்பற்ற முயற்சித்தாலே ஒழிய எம்மீதான பொறுப்பு நீங்க மாட்டாது.