மாண்புமிகு ரமதான் மீண்டும் எம்மிடம் வந்திருக்கிறது. காரிருளில் மூழ்கிக் கிடந்த உலகிற்கு ஒளிப்பிழம்பாய் அமைந்த அல்குர்ஆனை கொண்டு வந்த மாதம் ரமதான். அறிவியல் ஒளி மங்கிக்கிடந்த, ஒழுக்க மாண்புகள் தாழ்ந்த உடலியல் சுகங்களுக்காக தாரை வார்க்கப்பட்ட, மேட்டுக்குடி முதலாளிகளின் நலன்களுக்காக ஏனையோர் அடிமைகளாய் வதைக்கப்பட்ட, எத்திசையில் திரும்பினாலும் சமநிலை பிறழ்ந்த ஓர் சமூகத்துக்கு மத்தியிலேயே அல்குர்ஆனின் புரட்சித்தூதுடன் பெருமானார்(ஸல்) களத்துக்கு வருகிறார். அவர் பாய்ச்சிய அல்குர்ஆனிய ஒளி அரபுத் தீபகட்கத்தையும் தாண்டி ஆபிரிக்கா, ஆசியா என அனைத்திலும் விரிந்து ஐரோப்பாவின் கோட்டைகளின் வாசல்களையும் ஊடறுத்தது. ஒட்டுமொத்தத்தில் ரமதானை – முழுமையான மாற்றத்தின் மாதம் என்று அழைத்தால் அது மிகையாகாது. அந்த மாற்றத்தின் தூண்களாக அமைந்த சில அடிப்படைகள் தீனுல் இஸ்லாம் கொண்டுள்ளது.
1. அல்குர்ஆன் ‘இலாஹ்’ – ‘இறைவன்’ என்றால் யார் என்ற எண்ணக்கருவை மாற்றியமைத்தது
அல்குர்ஆன் முழுவாழ்வுக்குமான அடிப்படை நோக்கை துல்லியமாக வரையறுப்பதிலிருந்து தனது சமூகப்புரட்சியை ஆரம்பித்தது. இறைவன் – இலாஹ் என்றால் யார்? என்ற எண்ணக்கருவுக்கு வழங்கப்பட்டிருந்த தவறான பார்வையை அது தலைகீழாக மாற்றியது. வருடத்தின் ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு இறைவனை வழிப்பட்ட சமூகத்தில் அல்லாஹ்(சுபு) மாத்திரமே வணக்கத்துக்குரிய இறைவன் – இலாஹ், அவனைத்தவிர எவரும், எதுவும் அந்த ஸ்தானத்துக்கு அறுகதை அற்றவை என்ற அத்திவாரத்தை, தான் கொண்டு வர நினைத்த மாற்றத்தின் அடிப்படையாக முன்வைத்தது. அது கஃபாவைச் சுற்றியிருந்த சிலைகளுக்கு மாத்திரமல்ல, தம்மை இலாஹ்வாக நினைத்து மக்காவில் சுற்றிக் கொண்டிருந்தவர்களையும் குறிவைத்தே தனது வாதத்தை முன்வைத்தது.
நாம் அல்லாஹ்(சுபு)வை வணங்கி, ஏனைய சிலைகளையும், கடவுள்களையும் நிராகரித்து விட்டால் தாம் அல்லாஹ்வை முழுமையாக இலாஹ்வாக ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று இன்றும் கூட பலர் நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் முன்வைத்த இலாஹ் என்ற கோட்பாடு அடிப்படை நம்பிக்கையில் தொடங்கி எமது வாழ்வில் வியாபித்திருக்கின்ற அனைத்து முறைமைகளையும் ஊடரறுத்துச் செல்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை. அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத சித்தாந்தங்களையும், முறைமைகளையும், மன்னர்களினதும், நாட்டின் அதிபர்களினதும், பாராளுமன்றத்தினதும் சட்டங்களையும் எவர் தமது வாழ்வில் உள்வாங்கிக் கொள்கின்றார்களோ அவர்கள் இலாஹ்க்களாக அவர்களையும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே உண்மை.
اَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ ؕ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَيْهِ وَكِيْلًا ۙ
தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? (அல்-புர்கான் 25:43)
இன்னும் சொல்லப்போனால் இன்றைய உலகின் இலாஹ் என்பது தனிமனிதரின் மனோவிச்சை என்று ஓர் வார்த்தையில் சொல்லி விடலாம். மத ஒதுக்கல் சிந்தனை அல்லது மதச்சார்பின்மை (Secularism) அல்லாஹ்(சுபு)வை அவரவர் தனிப்பட்ட ஆன்மீகக் கிரிகைக்கும், பிரார்த்தனைக்கும் மாத்திரம் சுருக்கிக்கொண்டு, வாழ்வின் பெரும் பகுதியை வழிநடாத்தும் அரசியல், சமூக, பொருளாதார முறைமைகளை மனிதனின் சுய விருப்பின் பிரகாரம் வகுத்து வாழப்பணிக்கிறது. இதனால் இஸ்லாமிய அகீதாவும், மத ஒதுக்கல் சிந்தனையும் ஒருவரின் வாழ்வில் முற்றிலும் வெவ்வேறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இஸ்லாமிய அகீதா சிந்தனைக்கு ஏற்படுடையதாகவும், உள்ளத்துக்கு திருப்தியானதாகவும் இருப்பதால் அது சாந்தமான ஆளுமையையும், சமூகத்தையும் தோற்றுவிக்கிறது. மறுபக்கத்தில் மதச்சார்பின்மை நிரந்தர விரக்தியும்;, மானசீகமான பாதிப்புக்களும் கொண்ட ஆளுமையையும், சமூகத்தையும் தோற்றுவிக்கிறது.
2. அல்குர்ஆன் மனித வாழ்வின் நோக்கத்தை திட்டவட்டமாக வரையறுத்தது
முழு மனித சமூகத்துக்குமான வழிகாட்டியாக வந்த அல்குர்ஆன் மனித வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கிறது.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(சூரா அல்-தாரியாத் 51:56)
வரலாற்றில் தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இணக்கமான சிறந்ததோர் சமூகத்தைக் (Harmonious Society) கட்டியெழுப்புதற்கு முயன்றுள்ளனர். எனினும் அவர்களால் அந்த முயற்சியில் வெற்றியடைய முடியவில்லை. அவர்கள் அனைவரும் உருவாக்க நினைத்த சமூகம் பொருளையும், பலத்தையும், தராதரத்தையும், சுய திருப்த்தியையும் நோக்காகக் கொண்டதாக இருந்ததே அதற்கு காரணமாகும். லௌகீக இலக்குகளை அடிப்படை நோக்காகக் கொண்ட முனைப்புக்கள் குழப்பகரமான ஓர் உலகையை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள முடியுமா? பலகீனமும், வரையறையும் கொண்ட மனிதனால் எவ்வாறு வாழ்வுக்கான நோக்கை வரையறுக்க முடியும்? அந்த முயற்சி முழுமையான தோல்வியிலேயே முடிவடையும் என்பதை நேர்மையாகச் சிந்திக்கும் எவராலும் உணர முடியும். சர்வ வல்லமையுடைய பிரபஞ்சத்தின் கர்த்தா அல்லாஹ்(சுபு) மாத்திரமே மனித வாழ்வின் நோக்கத்தை வரையறுக்க முடியும். அல்லாஹ்(சுபு) வணங்கி அடிபணிதல் என்ற சுற்றுப்பாதையில் மனிதனும், மனித சமூகமும் நிலையாகப் பயணிக்கும் பொழுது தனிமனிதனும், சமூகமும் இணக்கமான இயங்கக்கூடிய ஓர் சமூகம் தோற்றுவிக்கப்படுகிறது. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்(சுபு)வை வழிபடுவதே ஏற்றுக்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியான வாழ்க்கையின் ஒரே நோக்கம் என இஸ்லாம் கூறுவதற்கான காரணம் இதுவேயாகும்.
3. அல் குர்ஆன் அனைத்துக்கும் மிக விரிவான தீர்வுகளை முன்வைக்கிறது
ஒழுக்கங்கள் முதல் நீதித்துறை வரை அல்-குர்ஆன் விரிவான தீர்வுகளை முன்வைக்கிறது. உண்மையில் புகழுக்குரிய அல்-குர்ஆன் குறிப்பிடாது விட்டுச்சென்ற வழிகாட்டல் எதுவுமே கிடையாது.
وَنَزَّلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ تِبْيَانًا لِّـكُلِّ شَىْءٍ وَّ هُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ
மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (சூரா அன்-நஹ்ல் 16: 89)
அல்லாஹ்விடமிருந்து வந்த விரிவான தீர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக செயல்படுகின்றன. அல்லாஹ்விடமிருந்து வரும் தீர்வுகளின் இரண்டு அடிப்படை குணங்களைக் காண்கின்றோம்: முதலாவதாக, மனிதனின் மிகவும் சிக்கலான பிரச்சனைகளை அது கையாளும் திறன் இரண்டாவது, அது வழங்குகின்ற பல்வேறு தீர்வுகளுக்கு இடையில் அது பேணுகின்ற இணக்கம்.
மறு பக்கத்தில் ‘முற்போக்கான மற்றும் முன்னேறிய உலகம்’ என்று அழைக்கப்படும் இன்றைய உலகில், மனிதன் முன்வைக்கும் தீர்வுகளுக்கு இடையில் நிலையான மோதலைக் கண்டு வருகின்றோம். சுகாதார தீர்;வுகள் பொருளாதார தீர்வுகளுடனும், அரசியல் நடவடிக்கைகள் தனிப்பட்டவர்களுக்கு எதிராகவும், நீதித்துறை தனிநபர் சுதந்திரங்களுக்கு எதிராகவும் நிரந்தர முரண்பாட்டில் உள்ளன. இந்த நிலையான மோதலானது ஒரு பொருத்தமற்ற முறைமைக்கும், அமைதியற்ற சமூகத்திற்கும் வழிவகுத்தது. அதேசமயம் இஸ்லாத்தின் விரிவான தீர்வுகள் ஒவ்வொரு பிரச்சினையையும் சமூக, பொருளாதார அல்லது அரசியல் பிரச்சினை என நோக்காமல் அவற்றை மானிடப் பிரச்சினையாக எதிர்கொண்டு தீர்க்க முற்படுகின்றன. இந்த தனிச்சிறப்பால் வேறுபட்ட ஒவ்வொரு தீர்வுகளும் ஒன்றை இன்னொன்று வலுச்சேர்த்து இணக்கமான ஓர் சமூகத்தை தோற்றுவிக்க உதவுகின்றது.
4. அல்குர்ஆனை தீனை நிலைநாட்டுவது குறித்தும் வழிமுறையை வகுத்துள்ளது
அல்லாஹ்(சுபு)வை நெருங்குவதற்காக நாம் நோன்பு நோற்பதற்கான விதிகளை அவனே எமக்கு வகுத்துத் தந்துள்ளான். நாம் விரும்பிய பிரகாரம் நோன்பின் விதிகளை எமக்கென வகுத்துக் கொள்ள முடியாது. எப்போது நோன்பை ஆரம்பிப்பது, எப்போது முடிப்பது, எவை நோன்பை முறிக்கும், எவை நோன்பை பூரணப்படுத்தும் என்பன போன்ற அனைத்தையும் அவன் மிகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளான். அதற்கு ஒப்பாகவே தீனுல் இஸ்லாத்தின் ஏனைய சட்டங்களும் மிகத்துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே எந்தவொரு செயலில் ஈடுபடும்பொழுதும் அதன் முடிவிலும், விளைவிலும் மாத்திரம் நாம் கவனம் செலுத்துவதில்லை. மாறாக அவற்றை மேற்கொள்ளும் விதம் பற்றிய அல்குர்ஆனினதும், அஸ்ஸ}ன்ஆவினதும் வழிகாட்டலை நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாத்தை இந்த உலகில் நிலைநாட்டும் பணியும் இதற்கு ஒப்பானதே.
فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا
எனவே, அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக் உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். (சூரா-மாயிதா 5:48)
நவீன உலகில் நாம் அவசரத் தீர்வுகளிலும், உடனடி விளைவுகளிலும் அதிக அக்கறை காட்ட முனைகிறோம். ஆனால் இந்த மனோநிலை நபிவழிக்கு முற்றிலும் முரண்பட்ட ஒன்றாகும். இஸ்லாத்திற்காக பணி செய்யும் முறையும், இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியும் ஏனைய இபாதத்களைப்போலவே வஹியின் ஒளியில் அருளப்பட்டுள்ளன. எனவே இலக்குகளை மாத்திரமல்லாமல் அதனை அடையும் பாதையையும் நாம் நபிவழியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
அல்குர்ஆனின் முதல் வசனங்கள் இந்த உலகுக்கு வந்தபோதிருந்த அஞ்ஞான நிலையை ஒத்த ஓர் இருண்ட உலகிலேயே நாமும் வாழ்ந்து வருகிறோம். அதனை பிரகாசமான நிலைக்கு மாற்றும் சக்தி அந்த அல் குர்ஆனுக்கு மாத்திரமே உள்ளது. அல்குர்ஆனின் ஒளியில் இஸ்லாத்தை நிலைநாட்டும் முயற்சியில் நாம் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளாது விட்டால் அல்குர்ஆனினதும். அது வந்துதிந்த மாதத்தினதும் முழமையான பலலை நாமோ எமது சந்ததியோ அனுபவிக்க இயலாது. இந்த ரமதான் அத்தகைய மாற்றத்துக்கான ஆழ்ந்த சிந்தனையிலும், தெளிந்த பணியிலும் எம்மை ஈடுபடுத்தும் உத்வேகத்தை வழங்கட்டுமாக!