சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இயல்பாக்க ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளைத் தரும் என்று சவூதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் வியாழக்கிழமை நடைபெற்ற சி.என்.என் தொலைகாட்சியுடனான நேர்காணலில் கூறினார்.
“இவ் ஒப்பந்தம் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பாதுகாப்பு கண்ணோட்டத்திலும் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் 1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் ஒர் பாலஸ்தீனிய அரசு வழங்கப்பட்டால் மட்டுமே இது சாத்திப்படும்“ என்று கூறினார்.
சவூதி அரேபியா இதற்கு முன்னரும், பாலஸ்தீனியர்களுக்கு இறையாண்மையை வழங்கும் ஒர் திட்டம் முன்மொழியப்பட்டாலே இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கும் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
“நாங்கள் செய்ய வேண்டியது ஒரு சமாதான ஒப்பந்தம், அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்றால், பாலஸ்தீனியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பாலஸ்தீனிய அரசுக்கு கண்ணியத்தையும், செயல்படக்கூடிய வகையிலான இறையாண்மையையும் வழங்கும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும்” என்று இளவரசர் பைசல் கடந்த ஆண்டு டிசம்பரில் கூறியிருந்தார்.
மேலும் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவது சவுதி அரேபியாவின் கண்ணோட்டத்திற்கான Saudi Arabia’s vision ஒர் பகுதியாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்றும் கூறியிருந்தார்.
அரபு அமைதி முயற்சியின் ஒர் பிரதிபலிப்பாக, பாலஸ்தீனிய–இஸ்ரேலிய மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு–மாநில தீர்வு 2002 இல் சவுதி அரேபியாவால் முன்மொழியப்பட்டது.
இந்த முயற்சி அரபு லீக்கால் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டாலும் ஒருபோதும் இஸ்ரேல் இதற்கு செவிசாய்கவில்லை. மாறாக இஸ்ரேல் மேற்குக் கரையில் தனது ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்ற விரிவாக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.