செய்தி:
நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய படங்களை பாடசாலை மாணவர்களுக்கு காட்டியது சரியா? தவறா? என்ற விவாதம் தற்போது இங்கிலாந்தில் சூடு பிடித்துள்ளது. வடக்கு இங்கிலாந்திலுள்ள அரச உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய படங்களை மாணவர்களுக்கு காட்டியால் எழுந்த சர்ச்சைக்கு பின் அவர் அந்த பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பேட்லி இலக்கண பள்ளியில் காட்டப்பட்டுள்ள படம் பிரெஞ்சு நையாண்டி இதழான சார்லி ஹெப்டோவினால் முதலில் வெளியிடப்பட்ட அதே கேலிச்சித்திரங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆசிரியர் கேலிச்சித்திரங்களைக் காட்டிய பின்னர், சுமார் இரண்டு டஜன் எதிர்ப்பாளர்கள் பள்ளிக்கு வெளியே கூடி வியாழக்கிழமை இந்த நடவடிக்கையை கண்டித்தனர்.
பெரியதொரு முஸ்லீம் சமூகம் வாழ்கின்ற மேற்கு யார்க்ஷயரில் உள்ள இந்தப் பாடசாலை அச்செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளது.
“சமீபத்திய மதக்கல்விப் பாடத்தில் முற்றிலும் பொருத்தமற்ற படத்தைப் பயன்படுத்தியதற்காக எமது பாடசாலை சந்தேகத்திற்கு இடமின்றி மன்னிப்பு கோருகிறது” என்று பhடசாலையின் தலைமை ஆசிரியர் கேரி கிபில் தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் காட்டப்பட்ட வகுப்பு சென்ற திங்களன்று நடந்ததாக கூறப்படுகிறது.
அல் ஜஸீரா: 26/03/2021
கருத்து:
வடக்கு இங்கிலாந்திலுள்ள அரச உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய படங்களை மாணவர்களுக்கு காட்டியால் எழுந்த சர்ச்சைக்கு பின் அவர் அந்த பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் மீதான கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டியபோது அது குறித்து உங்கள் பெற்றோர்களிடம் புகார் செய்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை; பிரித்தானிய விழுமியம் எனக்கு அதற்கு அனுமதி தந்துள்ளது என்றும் அவர் வீம்பாகத் தெரிவித்துள்ளார்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரான வெறுப்பு நிறைந்த கேலிச் சித்திரங்களால் முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமே புண்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள்; பொதுவான முஸ்லிம்கள் அல்ல என்ற போலிப் பிரச்சாரத்தையும் பிரித்தானியாவின் பிரதான ஊடகங்கள் பிரச்சாரம் செய்யத் தவறவில்லை.
முஸ்லீம்-விரோத “வெறுப்பு-பேச்சு-வாடகைக்கு” உண்டு என்று சொல்லக்கூடிய ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் கருத்துக்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம் அவர்கள் பிரித்தானிய முஸ்லிம்களை அவமதிக்கவும் தவறவில்லை. அவர்களின் இந்த செயற்பாடுகள் உருவாகியிருக்கும் சகிப்புத்தன்மையற்ற சூழலுக்கு மென்மேலும் தீமூட்டும் வேலையாக அமைந்துள்ளது அல்லாமல் அவர்களின் தீவிரவாத மதச்சார்பற்ற நிலைப்பாட்டை சரி என நிறுவுவதற்கு ஒருபோதும் உதவவில்லை.
மேற்கத்திய மதச்சார்பற்ற சமூகங்களில் வாழ்கின்ற சாதாரண மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தானதாகி வருகிறது. மதச்சார்பற்ற முதலாளித்துவ சித்தாந்தம் அதன் மோசடி நிறைந்த தன்மையால் ஏற்படுத்திய பல நெருக்கடிகளுக்கு உகந்த தீர்வுகளை வழங்க அது தவறிவிட்டது. கொலைக் கலாசார வன்முறை, இனரீதியான துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் பிற வெறுப்பு சார்ந்த குற்றங்கள் அன்றாட நடைமுறைகளாகிவிட்ட நிலை தவறான மதச்சார்பற்ற கொள்கை மற்றும் அதன் பிரிவினைவாத விழுமியங்களுக்கான அத்தாட்சிகளாகும். அரசாங்கமும், கார்ப்பரேட் ஊடகங்களும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட புலம்பெயர்ந்தோரையும், வெளிநாட்டினரையும் இழிவுபடுத்தும் செய்திகளால் இந்நிலை அதிகம் தூபமிட்டு வளர்க்கப்படுபவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் முழங்குகின்ற இஸ்லாமிய நம்பிக்கையில் அனைத்து முஸ்லிம்களும் வைத்திருக்கும் விசுவாசம் மதச்சார்பின்மைவாதிகளை மிகவும் கோபப்படுத்துகிறது. அந்த ஆற்றாமையை தீர்த்துக்கொள்வதற்கு அவர்களால் அவமதிப்பு மற்றும் வெறுப்பு நிறைந்த ஆத்திரத்துடன் மட்டுமே பதிலளிக்க முடிகிறது. முஸ்லிம்கள் தமது அடிப்படைக் கொள்கையில் கொண்டுள்ள நம்பிக்கை, சொந்த மதச்சார்பற்ற சித்தாந்தத்தில் இவர்களுக்கு இருப்பதில்லை. அந்த தோற்றுப்போன சிந்தாந்தத்தின் தவறுகளை ஒப்புக் கொண்டு, ஒரு சிறந்த மாற்றீட்டைத் தேடுவதற்குப் பதிலாக, மக்களை ஒன்றிணைக்கும் அதன் திறனைப் பற்றியும் அல்லது முதலாளித்துவ பேராசை மனிதகுலத்திற்குத் தடையாக இருப்பதை விட அதிகளவில் உதவியே வருகிறது என்றும் அவர்கள் நகைச்சுவையான கூற்றுக்களைக் கூறி வருகிறார்கள். பாடசாலைகளில் போதிக்கப்டும் மதக்கல்வியும் இந்த போலித்தனத்தை மாணவர்களிடம் நாசூக்காக விதைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
இஸ்லாத்தின் இறுதித்தூதரான நபி (ஸல்) அவர்களை அவமதிப்பது என்பது முதலாளித்துவத்தின் தோல்வியை மறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே தவிர வேறில்லை. ஏனெனில் இன்று முஸ்லிம்கள்தான் உலகுக்கான மாற்றீட்டை வழங்கக்கூடிய நிலையில் உள்ளார்கள். எனவே முஸ்லிம்கள் மீது வெறுக்கத்தக்க துஷ்பிரயோகங்களை அள்ளி வீசுவதை விட, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கொண்டு வந்த இஸ்லாத்தின் செய்தியை தீவிரமாக கருத்தில் கொள்வது மிகவும் விவேகமானதாக இருக்கும். மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் மட்டுமே தீர்வைக் கொண்டுள்ளது. அதனால்தான் மோசடியும், வெறுப்பும் நிறைந்த மதச்சார்பற்றவாதிகள் அதை கடுமையாக எதிர்க்கின்றனர் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் மாத்திரமே மனிதகுலத்தின் கடைசி எதிர்பார்ப்பு. இஸ்லாமிய நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு ஏற்புடையதாகவும், மனித இயல்புடன் உடன்படுவதாகவும் இருக்கிறது. எனவே மதச்சார்பற்ற குரோதிகள் பாடசாலைகளிலோ, ஊடகங்களிலோ, திங் டேங்களிலோ, சமூகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ எம்மை நோக்கிப் பாய்ந்து வந்தால் அதனை தகுந்த முறையில் எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் பின்வாங்கக்கூடாது. எமது மார்க்கத்தை எள்ளி நகையாடி அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கையை ஊக்குவிக்கும் எவருடைய நல்ல பெயரையும் கெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மதச்சார்பற்ற பரப்புரைகளுக்கு நாம் முழு வீச்சாக சவால் விட வேண்டும். இறுதியில் விசுவாதிகளே வெற்றி பெறுவார்கள்…