முஸ்லிம்களை குறிவைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
முஸ்லிம்களை நேரடியாகக் குறிவைத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் – Prevention of Terrorism Act (PTA) கீழ் கடந்த 12/03/2021 முதல் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய விதி முறைகள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதியுச்ச அதிகாரங்களை வழங்குகின்றன. அவை வெறுப்பு அடிப்படையிலான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறைப்படுத்தி வைத்திருக்க வகை செய்கின்றன. மேலும் வன்முறை அல்லது மத, இன அடிப்படையில் சமூகங்களுக்கிடையில் விரோதப் போக்குகளை உருவாக்குவதாக சந்தேகிக்கப்படுபவர்கள் ‘மறு ஒருங்கிணைப்பு மையங்கள் – Re-integration centres’ என அழைக்கப்படும் மூளைச்சலவை முகாம்களில் 24 மாதங்கள் தடுத்து வைக்க அவை அனுமதிக்கின்றன.
‘இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பேன்’ என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, அண்மையில் வெளிவந்த அரசிதழ் – Gazette அறிவிப்பில் ‘வன்முறையான தீவிரவாத மதச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் இருந்து விலக்குதல் – Deradicalisation from holding violent extremist religious ideology’ என்ற ஓர் நடைமுறையை அறிவித்திருக்கிறார். இத்தகைய புதிய நடைமுறைகள் அவர் அழைக்கின்ற இஸ்லாமிய தீவிரவாதத்தை மாத்திரம் குறிவைப்பது மட்டுமல்லாமல், எந்தவொரு இஸ்லாமிய இயக்கத்தையும், அல்லது முழுச் சமூகத்தையும் குறிவைப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளின் வருகையின் பின்னணியில் இருந்துதான் உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கைதையும், கொழும்பின் முன்னாள் ஆளுநர் ஆஷாத் சாலி போன்றோர்களின் கைதையும், இனிமேலும் நாம் காண இருக்கின்ற பல கைதுகளையும் நாம் பார்க்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்று ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்த நிகழ்ச்சி நிரலை நேரடியாக முஸ்லிம் உம்மத்தை சிந்தனா ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் குறிவைத்த தாக்குதல் என்று நாம் எவ்வாறு புரிந்து கொண்டோமோ, அதற்கு எவ்வித குறைவும் இல்லாது இலங்கையில் கொண்டு வரப்படுகின்ற இந்த புதிய விதிமுறைகள் நேரடியாக முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து நீண்ட கால நிகழ்ச்சி நிரல் ஒன்றை அரங்கேற்றுவதற்காக கொண்டு வரப்படுகின்றன என்பதை, நாம் ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற நீடித்த நிகழ்ச்சிநிரலுக்கு இஸ்லாத்தை நவீன உலகுக்கும், மனிதகுலத்துக்கும் நிரந்தர அச்சுறுத்தலாக சித்தரிக்க வேண்டிய தேவை தவிர்க்கப்பட முடியாதது. காரணம் என்வென்றால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாகரீகம் தனது மேலாண்மைக்காக நடைமுறைப்படுத்தும் தராண்மைவாத(லிபரல்), சடவாத(செக்கியூலர்) முதலாளித்துவ உலக ஒழங்கிற்கு மாற்றீடாக, சவால் விடக்கூடிய ஒரேயொரு உலகளாவிய நாகரீகம் இஸ்லாமிய நாகரீகம் மாத்திரமே. அரசியல் விஞ்ஞானி, பேராசிரியர் ஃபிரான்சிஸ் ஃபுகயாமா, சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து லிபரல் உலகின் வெற்றியை, ‘வரலாற்றின் முடிவு – The End of History’ என்று வர்ணிக்க முற்பட்ட போது, அது தவறு என்று அடுத்து வந்த தசாப்த்தங்களில் அவருக்கும், உலகுக்கும் உணர்த்தியது இஸ்லாமிய நாகரீகமும், அதன் சித்தாந்தமும்தான். எனவே நாகரீகங்களுக்கு இடையிலான இந்த மோதலை எதிர்கொள்வதற்கும், அந்த மோதல்களின் ஊடாக தமது உலக மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் முஸ்லிம்களை எதிர் தரப்பாகவும், அவர்களை உலகின் எதிர்மறை சக்தியாகவும் சிந்தரிக்கும் தேவை மேற்குலகுக்கு தேவைப்பட்டது. அதன் விளைவுதான் அடிப்படைவாதம் – தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ற பதப்பிரயோகங்கள் உலக அரங்குக்குள் தீவிரமாக பரப்புரை செய்யப்பட்டன. எனவே தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்றால் அது பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிரான குறிப்பாக இஸ்லாத்தை சிந்தாந்தமாக கடைப்பிடிக்க விரும்பும் முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தமாகவே பார்க்கப்பட வேண்டும்.
தீவிரவாதப் பட்டத்துடன் வாழும் காலம்
விடுதலைப்புலிகளின் அழித்தோழிப்புக்கு பின்னர் இன்று இலங்கையில் ‘தீவிரவாதம்’ மற்றும் ‘பயங்கரவாதம்’ என்ற பதங்களின் பரப்புரையும், அவற்றின் மீது நிலைகொண்டுள்ள சட்ட ஏற்பாடுகளும் நேரடியாக முஸ்லிம்களை, குறிப்பாக இஸ்லாத்தை தமது முக்கிய அடையாளமாக பேண விரும்புகின்ற முஸ்லிம்களை – அவர்களின் இயக்கங்களை, நிறுவனங்களை குறிவைத்து இயங்குபவை என்பதில் எமக்கு சந்தேகம் இருக்கக் கூடாது. இந்த புரிதலின் ஊடாகவே ‘வன்முறையான தீவிரவாத மதச் சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதில் இருந்து விலக்குதல்’ என்ற கோட்டபய ராஜபக்ஷவின் செயற்திட்டத்தை நாம் அணுக வேண்டும். அதன்படி இஸ்லாத்தை ஓர் சம்பூரண வாழ்க்கை நெறியாகவும் – Complete Way of life, ஓர் உலகளாவிய சித்தாந்தமாவும் – Global Ideology, பொது வாழ்க்கைக்கும் தீர்வுகளை முன்வைக்கக்கூடிய ஓர் சிந்தனையாகவும் எவரெல்லாம் சிந்திக்கின்றார்களோ, செயற்படுகின்றார்களோ, பிரச்சாரம் செய்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் இலக்கு வைக்கும் வீரியமும். விதானமும் இந்த சட்ட நடைமுறைகளுக்குள் இருக்கின்றன. அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இஸ்லாம் ஓர் சம்பூரண வாழ்க்கைத் திட்டம், இஸ்லாமிய ஷரீஆ கோட்பாடுகள், உலகளாவிய உம்மத், இஸ்லாமிய சமூக மாற்றம் பற்றிய சிந்தனைகள் என பலவற்றை தனது அழைப்புப்பணியில் குறைந்தது ஏதோவொரு காலப்பகுதியிலாவது பிரதான உள்ளடக்கங்களாக இணைத்து இயங்கிய ஓர் முக்கிய பிரச்சாரகரான உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதை பாதுகாப்புப்பிரிவு நியாயப்படுத்தலாம். மேலும் “நாட்டுச் சட்டம் நாட்டுக்கு, ஷரீஆச் சட்டம்தான் எங்களுக்கு” என்றும், “அல்லாஹ்வும், நபிகளும் சொன்னதுதான் எங்களுக்கு சட்டம்” என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் வீராப்பாகப் பேசிய ஆசாத் சாலியின் கருத்தையும் அவர்கள் மதத்தீவிரவாதமாக வாதாடலாம்.
முஸ்லிம்களின் பார்வையில் இஸ்லாம் வெறும் மதமாக நோக்கப்படாது, ஓர் சம்பூரமான வாழ்க்கை நெறியாக அல்லது ஓர் தனித்துவமான சித்தாந்தமாக நோக்கப்படுவது அவர்களின் பார்வையில் மதத் தீவிரவாதமாக தற்போது வரையறுக்கப்பட்டு விட்டது. எனவே இஸ்லாத்தை ஓர் முழுமையான சித்தாந்தமாகக் கடைப்பிடிக்க முனைவதை, பிரச்சாரம் செய்வதை அவர்கள் மதத்தீவிரவாதமாக சித்தரித்தால் அதனை முகம்கொடுப்பது எவ்வாறு என்ற கேள்விதான் இந்த தசாப்த்தத்தில் நாம் எதிர்கொள்ளப் போகின்ற மிகப்பெரிய சவாலாகும்.
எம்மீதான சதிவலைகள்
நாட்டின் அதிகாரத்தை இலக்கு வைத்து இயங்கிய சக்திகள் முஸ்லிம் இளைஞர்களை தமது பாசறைக்குள் உள்வாங்கி, சில வருடங்களாக பதனிட்டு வளர்த்து, உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலை நடத்தி முடித்தனர். பின்னர் அவர்களை மாத்திரமல்லாது முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக பறை சாட்டியது தொடக்கம், ஒன்றன் பின் ஒன்றாக தௌஹீத் ஜமாத்துக்கள், ஸலஃபி அமைப்புக்கள், இஹ்வானிய பாரம்பரியத்தில் இயங்கும் நிறுவனங்கள், ஜமாத்தே இஸ்லாமி வரைக்கும் கையை விரித்ததுடன் நின்றுவிடாமல், மார்க்கத்தின் ஆன்மீக அம்சங்களில் மாத்திரம் அதீத கவனம் குவித்து இயங்கும் தப்லீக் ஜமாத்திரனர்கள் வரைக்கும், இன்னும் சொல்லப்போனால் ஜம்மியத்துல் உலமா சபை வரைக்கும் தீவிரவாதத்திற்கு துணைபோனோராகச் சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் இஸ்லாம் நிறுவனமயப்பட்ட ஒழுங்கில் இஸ்லாமிய சிந்தாந்தம் தழுவிய நிலையில் எவ்வகையில் இயங்கினாலும், அவற்றை அச்சுறுத்தலாகப் பார்க்கும் நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். தீவிர தற்காப்புணர்வாக எழுந்த சிங்கள பௌத்த தேசியவாத எழுச்சியும், பேரினவாத மயக்கமும், உலகளாவிய இஸ்லாமிய எதிர்ப்பு சதிக்கு ஒத்துழைத்து இலாபமீட்டும் மோகமும், ஒருசேர சங்கமித்த அரசியல் நிகழ்ச்சி நிரல் அவர்களை இயக்குகிறது.
இனிமேல் நாம் விரும்புகின்ற இஸ்லாத்தை இலங்கையில் பின்பற்றுவது பாரிய எதிர் நீச்சலாகத்தான் இருக்கப்போகின்றது. எம்மையும், எமது இஸ்லாமிய நிறுவனங்களையும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக 21ஆம் நூற்றாண்டுக்கும், இலங்கை கலாசாரத்துக்கும் பொருத்தமான இஸ்லாம் என்ற ஒன்றை எம்முன்னால் தேர்வாக வைப்பார்கள். இஸ்லாத்தை வெறும் கிரிகைகள் மற்றும் கலாசாரமாக பின்பற்றிய நிலையில் சிங்கள சமூகத்துடன் இரண்டரக்கலந்து, கரைந்து வாழும் அல்லது வாழ விரும்பும் முஸ்லிம் தரப்பை எமக்கான முன்மாதிரியாக முன்வைப்பார்கள். அடிப்படையில் இன்றைய மதச்சார்பற்ற தாராண்மைவாத உலகக் கண்ணோட்டத்துடனும், சிங்கள பௌத்த தேசியவாதத்தையும், கலாசாரத்தையும் அனுசரிக்கும் அணுகுமுறையுடனும் உருவாக்கப்படும் ஓர் இஸ்லாத்தை அரச அனுசரனையுடன் எம்முன்னால் சமர்ப்பிப்பார்கள். யாரெல்லாம் அவர்கள் நிர்ணயித்த இஸ்லாத்தை ஏற்று அவர்களுடன் இணைந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பும், வரவேற்றும் வழங்கப்படும். யாரெல்லாம் அதனை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்கள் காலத்துக்கும், நாட்டின் கலாசாரத்துக்கும் ஒவ்வாதவர்கள் என்ற குற்றச்சாட்டை சுமக்க நேரிடும். எவர்களெல்லாம் தூய இஸ்லாத்தை பின்பற்றுவதற்காக இந்த அழுத்தங்களை எதிர்த்து நிற்கிறார்களோ அவர்கள் தீவிரவாதிகளாகவும், எதிர்கால பயங்கரவாத அச்சுறுத்தல்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள்.
இவ்வாறு ஏற்கனவே சிந்தனைப்பள்ளிகளாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து நின்ற முஸ்லிம்களின் நிலையைத் தாண்டி மேற்குலக லிபரல் செக்யூலரிச அளவுகோலுக்கு இணங்க முஸ்லிம்களை வகைப்படுத்தவும், பிரிக்கவும் தேவையான முயற்சிகள் தற்போது இலங்கையில் நிகழ்ந்து வருகின்றன. அதற்காக இலங்கை புதிதாக ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ராண்ட் கோப்பரேஷன் – Rand Coorperation, ஹென்ரி ஜெக்ஷன் சொசைடி – Henry Jackson Society போன்ற நிறுவனங்கள் அந்தப்பணியை இவர்களுக்காக பல வருடங்களுக்கு முன்னரே செய்து முடித்து விட்டன. அதனை தரவிறக்கம் செய்து இலங்கைச் சூழலுக்கேட்ப அமூல்படுத்துவது மாத்திரம்தான் பாக்கி. உண்மையில் சொல்லப்போனால் இலங்கை அவற்றை பயன்படுத்த ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.
உதாரணமாக ‘வஹாபிஸம்’ , வஹாபிகள் என்ற அடையாளப்படுத்தலின் ஊடாக அவர்கள் மேற்கொண்டுவரும் கைங்கரியத்தைக் கவனியுங்கள். வஹாபிஸம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் முழு இயக்கங்களையும், சமூகத்தின் பெரியதொரு பகுதியினரையும் உள்ளடக்கி விட்டு வஹாபிஸத்தையும் வரையறுக்காமல், அதற்கும் – இவர்கள் குற்றம் சாட்டும் தரப்புக்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பையும் வரையறுக்காமல் விட்டுவிட்டு, அனைவரையும் தீவிரவாதத்துக்கு தூபமிடுபவர்களாகவும், நாட்டை ஆக்கிரமிக்க இயங்குபவர்களாகவும் காட்ட நினைக்கின்றார்கள். இந்த யுக்தி ஆளும் தரப்புகளுக்கு வசதியாகப் போய்விட்டது; யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமென்றாலும் கட்டுப்படுத்தலாம்; கைது செய்யலாம்; சிறையில் அடைத்து எவ்வளவு காலத்துக்கும் தடுத்து வைக்கலாம்; அவர்களுக்கு தேவைப்படுவது ஒரேயொரு மொட்டை வார்த்தை – ‘வஹாபிஸம்’!
வஹாபிஸத்தின் பின்னணி என்ன?
சுருங்கக் கூறின் வஹாபிஸம் என்பது இஸ்லாமிய தலைமையாகத் திகழ்ந்த கிலாஃபத்தை துண்டாடவும், முஸ்லிம்களைக் கூறுபோடவும் பிரித்தானியாவினால் பதின்னெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் இன்றைய சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் முஹம்மத் இப்னு சவூத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இயக்கத்தின் கோட்பாடாகும். அறிந்தோ, அறியாமலோ இந்த மிகப்பெரிய சதிக்கு இஸ்லாமிய பின்புலமாக இருந்த முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) என்ற மார்க்க அறிஞரின் பெயரினால் அந்த இயக்கம் அறியப்பட்டது என்பதே வரலாறு. எனவே முஸ்லிம்கள் வஹாபிஸத்தையோ, அதன் தோற்றுவாயான சவூதி போன்ற தலைமையையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தமிழ் பேசும் முஸ்லிம் உலகில் வஹ்ஹாபி அல்லது வஹாபிஸம் என்ற வார்த்தைகள் புரியப்பட்ட விதம் முஸ்லிம் உலகில் அல்லது உலகில் ஏனைய பகுதிகள் பலவற்றில் புரியப்பட்ட விதத்திலிருந்து சற்று வேறுபட்டதால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் முஸ்லிம்களில் பலருக்கு சில மயக்கங்கள் இருக்கின்றன.
சூபித்துவ முகாம்களில் சமாதிகளிடம் பிரார்த்தித்தல், ஷேய்க்மார்களை அளவுக்கு மீறி வழிபடுதல், மார்க்கத்தின் பெயரில் ‘பித்ஆ’ எனும் புதினங்களை புகுத்துதல் போன்ற அனாச்சாரங்களை எதிர்க்க நினைத்தவர்கள் முஹம்மத் பின் வஹ்ஹாப் (ரஹ்) வின் கருத்துகளால் கவரப்பட்டனர். அதனை ஏகத்துவப் பிரச்சாரத்துக்கும், மார்க்கத்தின் பெயரால் நுழைந்த புதினங்களாகக் அவர்கள் கருதியவைகளைக் களையவும் பயன்படுத்தினர். இவ்வாறு சவூதியின் தலைமையிலான வளைகுடா நாடுகளினது பாரியளவிலான நிதி அனுசரணையுடன் உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்ட வஹாபி அறிஞர்களின் கருத்துக்கள் இலங்கையிலும் வேறூன்றின. மேற்குலக கைப்பாவைகளான வளைகுடா நாடுகளின் மன்னராட்சிகளை விமர்சிப்பதை தவிர்த்து அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஓர் இஸ்லாமிய சிந்தனையைப் பரப்புவதில் இவர்களின் வகிபாகம் அளப்பெரியது.
உண்மையில் வஹாபிச சிந்தனையை கோட்பாட்டளவில் சரியாக உள்ளீர்த்து பின்பற்றுபவர்களால் இன்றிருக்கின்ற கொடுங்கோல் அரண்மனைகளுக்கோ, அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ உலக ஒழுங்குக்கோ, இன்னும் சொல்லப்போனால் இலங்கைக்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றே கூறி விடலாம். ஆனால் வஹாபிச சிந்தனைப்பள்ளியால் ஆழப்படும் நாடுகளில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, மார்க்கப் போதனைகளை உள்வாங்கிக்கொண்ட அறிஞர்களில் சிலரும், இளைஞர்களில் சிலரும் மன்னராட்சிகளின் அட்டூழியங்களையும், முஸ்லிம் உலகில் மேற்கால் இடம்பெறும் அநீதிகளுக்கு துணைபோகும் நயவஞ்சகத்தனத்தையும் எதிர்த்து நின்றபோது, மேற்கும், அவர்களின் வஹாபிச கங்கானிகளும் – தான் வளர்த்த கடாவே தன் மார்பில் எட்டி உதைப்பதாக உசார் அடைந்தனர். ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஜிஹாத், தாருள் குஃப்ர், தாருள் இஸ்லாம். கிலாஃபா போன்ற இலக்குகளை நோக்கி அவர்கள் பயணித்த போது அவர்களை சில சமயங்களில் தமது எதிரிகளை அழிப்பதற்கு உபயோகிப்பதிலும், பல சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளாக்கித் தண்டிப்பதிலும் ஆட்சிபீடங்கள் தவறவில்லை. இந்த பின்னணிலேயே வஹாபிச, ஸலபிச ஜிஹாதிய சிந்தனைப்பள்ளி நவீன காலத்தில் வேகமாக வளர்ந்தது.
அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களின் அடிப்படைக் கோட்பாட்டை ஏற்கனவே தமது அகீதாவாக ஏற்றிருந்த பலர் வஹாபிச, ஸலபிச ஜிஹாதிய சிந்தனைப்பள்ளியைச் சேராதவர்களாக இருந்தாலும் கூட அவர்களை இலகுவாக தீவிரவாதிகளாகச் சித்தரிக்கக்கூடிய சந்தர்ப்பம் அதிகம். ஒரே ஊற்றை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அது எதிரிகளுக்கு வாய்ப்பாக மாறி இருக்கின்றது. அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களின் சிந்தனைகளில் இருந்த சரியான நிலைப்பாடுகளுக்கு ஒத்த நிலைப்பாடுகளைக் கொண்டு சூபித்துவ சிந்தனைப் பிரள்வுகளையும், அனாச்சாரங்களையும் விமர்சித்த இயக்கங்களையும் பொத்தம்பொதுவாக வஹாபிகள் என்று அழைத்து விடுகின்ற ஒர் நிலையும் நீண்டகாலமாக இருந்து வருகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் மேற்சொன்ன விடயங்களை கருத்தில் கொண்ட நிலையில் இன்றுள்ள இலங்கையின் நிலவரத்துக்கு வருவோம்…
முஸ்லிம்களின் ஸ்தாபனங்கள் குறி வைக்கப்படுதல்
ஜமாதே இஸ்லாமியின் ஸ்தாபகர் செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) முன்வைத்த இஸ்லாமிய அரசு பற்றிய சிந்தனைகள், ‘ஹாக்கிமிய்யா’ எனும் ‘சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்(சுபு)க்கு மாத்திரமே’ என்ற கோட்பாடுகள் பற்றி ஆரம்ப சதாப்பதங்களில் இலங்கை ஜமாதே இஸ்லாமி அதிகளவில் பேசி வந்தாலும், குறைந்தது கடந்த இரு சதாப்தங்களாக அவை பற்றிய பேச்சுக்களுக்கு அவர்கள் மிக அரிதாகவே முன்னுரிமை கொடுத்தனர். நவீன இஸ்லாமிய சிந்தனைகள் என்ற பெயரில் வந்த புதிய சிந்தனைகளால் ஏற்பட்ட தாக்கமும், இலங்கையின் களநிலையும் அதற்கு பிரதான காரணங்களாக அமைந்தன. அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னாவினால் ஸ்தாபிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமூனின் கருத்தியலும் ஏறத்தாழ ஜமாத்தே இஸ்லாமி சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவை அல்ல என்பதால் அதன் பின்னணி கொண்டு இயங்கும் சில அமைப்புகளினதும், அறிஞர்களினதும் நிலையும் அதற்கு ஒப்பானதே. இலங்கை தப்லீக் ஜமாத்தை பொருத்தவரையில் அதிக விளக்கங்கள் எதுவும் தேவையில்லை என்று கூறும் அளவுக்கு அவர்கள் ஆன்மீக மேம்பாட்டையும், தொழுகை போன்ற கிரிகைகளையும், ஒழுக்க மாண்புகளையும் போதிப்பதில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தும் அமைப்பு என்பதை யாவரும் அறிவர்.
எனவே இன்று இலங்கைக்குள் இயங்குகின்ற பெரிய இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் அவர்களின் ஸ்தாபகத் தலைவர்களின் நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் கூட தற்போது அவை அனைத்தும் இலங்கைக்குள் தீவிரவாதத்தையோ, பிரிவினையையோ வளர்க்கின்ற இயக்கங்கள் என்றோ, பாரிய புரட்சிகர அரசியல் இலக்குகள் கொண்ட இயக்கங்கள் என்றோ வாதாடுவது உண்மைக்கு புறம்பானது. எனவே அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இவர்களை குறிவைக்க வேண்டிய ஓர் தேவை நிச்சயமாக இருப்பதாகத் தெரியவில்லை. ஜிஹாத், ஷரீஆ, கிலாஃபா போன்ற இஸ்லாத்தின் முக்கிய பகுதிகளை முன்னிறுத்தியும், ஹாக்கிமிய்யாவின் அடிப்படையில் ஜனநாயகத்தை எதிர்த்தல் போன்ற மேற்குலக கோட்பாடுகளையும், ஒழுங்குகளையும் கடுமையாக எதிர்த்தும் இயங்க நினைக்கின்ற அமைப்புகளே இன்று உலகில் பிரதானமாக குறிவைக்கப்படுகின்றன. ஆனால் அதே குற்றச்சாட்டுக்களை இலங்கையில் முன்வைக்கும் அளவுக்கு இலங்கைக்குள் அவ்விதமான இயக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. ஆனால் நாட்டில் இல்லாத ஒரு பிரச்சனையை இருப்பதாகச் சித்தரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்புக்கள் இருக்கின்றன. அதற்காக இஸ்லாமிய இயக்கங்களின் சில ஆரம்ப கால நிலைப்பாடுகளையும், அவர்கள் மீது ஏனைய நாடுகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் சுட்டிக்காட்டி இஸ்லாமிய இயக்கங்களை ஒடுக்குவதற்கான முனைப்பை அரசு ஆரம்பித்திருக்கிறது.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம் தௌஹீத் ஜமாத் பின்னணி கொண்டவர் என்பதால் இலங்கையில் வஹ்ஹாபிஸ பீதியைத் தூண்டுவதுதான் பொறுத்தமானது என்பதை உணர்ந்திருக்கும் அதிகாரிகள், அனைவர் மீதும் வஹாபி பட்டத்தை சூட்டிவிட்டால் தமது பணி இலகுவாகிவிடும் எனக் கருதினார்கள். அதன் விளைவுதான் இன்று அனைவருக்கும் சூட்டப்படும் வஹாபிப் பட்டங்கள்.
இவை வெறும் ஆரம்பம் மாத்திரம்தான். இன்னும் பல புனைவுகளையும், குறியீடுகளையும் அவர்கள் முஸ்லிம்கள் மீதும், அவர்களின் நிறுவனங்கள் மீதும் சுமத்துவார்கள். வகை வகையாக எம்மை பிரித்தாளுவார்கள். சம்பிரதாய முஸ்லிம்கள், சூஃபி முஸ்லிம்கள், வஹாபி முஸ்லிம்கள், ஸலஃபி முஸ்லிம்கள், மிதவாத முஸ்லிம்கள், அடிப்படைவாத முஸ்லிம்கள், தீவிரவாத முஸ்லிம்கள், பயங்கரவாத முஸ்லிம்கள் என புதிய வகைப்படுத்தலை இன்னும் ஆழமாகச் செய்வார்கள். அதேபோல சூஃபி இஸ்லாம், வஹாபி இஸ்லாம், இஹ்வானி இஸ்லாம், மிதவாத இஸ்லாம், அரசியல் இஸ்லாம், ஜிஹாதி இஸ்லாம் என பல இஸ்லாம்களையும் அறிமுகப்படுத்தி இவற்றுள் நீங்கள் எந்த வகை என்று எம்மை நோக்கி வினா எழுப்புவார்கள். தரீக்காக்களாகவும், ஜமாத்களாகவும் கருத்து முரண்பாடுகளால் பிளவுபட்டுக் கிடந்த முஸ்லிம்களை அதை விட ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இஸ்லாத்திலிருந்து விலகி மத ஒதுக்கல் கொள்கைக்கும். தராண்மைவாதத்துக்கும், ஏற்ப இஸ்லாத்தை தகவமைத்துக் கொள்ளும் நிலைக்கு எம்மை ஆட்படுத்துவார்கள். அதற்கு உடன்படும் அளவுக்கேட்ப எம்மை புதிய தராதரங்களைக் கொண்டு வகைப்படுத்தி உலக வல்லரசுகளின் உதவியுடன் அடிமைப்படுத்துவார்கள்.
மொத்தத்தில் இன்றைய ஆட்சியாளர்கள், இஸ்லாமிய பிரச்சார இயக்கங்களையும், கட்டமைப்புக்களையும், குடை அமைப்புக்களையும் தடை செய்து அல்லது மலினப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை கட்டமைப்பற்ற, அனைத்துக்கும் அவர்களின் தயவில் வாழ்கின்ற ஓர் நிலைக்கு தள்ளுவதை இலக்காகக் கொண்டு தீவிரமாக இயங்குகிறார்கள். இது முடிவில் சரணாகதி நிலைக்கு முஸ்லிம்களை கொண்டு வந்து நிறுத்தும் திட்டம். முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையை தமது பாதுகாப்பாகவும், முன்னேற்றமாகவும் ஏமாந்து ஏற்றுக்கொள்ளும் சிங்கள பெரும்பான்மையினரை வளர்த்தெடுத்து தமது சுரண்டல் மேலாதிக்கத்தை வெளிநாட்டு எஜமானர்களுடன் இணைந்து நிறுவுவதற்கு அது இனிமேல் சிறப்பாகப் பாவிக்கப்படும்.
எமது நிலைப்பாடு!
எனவே இந்த பாரிய சதிக்குள் முஸ்லிம்கள் அகப்பட்டு விடக்கூடாது. எம்மீது எத்தனை பட்டங்களை சுமத்த நினைத்தாலும், எம்மை எத்தனை வகையாகப் பிரிக்க நினைத்தாலும், எமது இஸ்லாத்தை விதம்விதமாக எம்முன் நிறுவ நினைத்தாலும் நாம் அனைவரும் ஓர் உம்மத் – எமது மார்க்கம் நபி(ஸல்) வழங்கிய தீனுல் இஸ்லாம் மாத்திரம்தான் என்பதில் நாம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் கடந்துவரும் இந்தக்காலப்பகுதிதான் எமது உண்மையான ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் புடம்போடுகின்ற காலம். ஒருவர் ஒருவருக்காக துணை நின்று இந்த அந்தகார யுகத்தை நாம் ஒன்றாகக் கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், ஆசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், யூனுஸ் தப்ரீஸ், அஹ்னஃப் ஜெசீம் போன்ற அனைவருக்காகவும் நாம் வேறுபாடுகளைத் கடந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் எமது உம்மத்தின் அங்கங்கள் என்று நோக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எமக்கு இழைக்கப்டும் அநீதி என்று நாம் உணர்வு பெற வேண்டும்.
கண் முன்னால் எமது சமூகத்துக்கு எதிராக அநீதிகள் இடம்பெறுகின்ற போது எமது உறவுகளை அநியாயக் காரர்களின் கைகளில் தாரைவார்த்து விட்டு சொந்த சோளிகளைப் கவனிப்பதை நாம் சாணக்கியமாக நினைக்கக்கூடாது. எமக்கென்றும் ஓர் தேதி காத்திருக்கின்றது; இங்கில்லாவிட்டாலும், நாளை மறுமையில் நாம் அடைக்கப் படுவோம். அல்லாஹ்(சுபு) எம் அனைவரையும் பாதுகாப்பானாக!