ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மே 1 ஆக நியமிக்கப்பட்டிருந்தது. இக்காலக்கெடு மீறப்படும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் முகமாக தலிபான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, நிறுத்தப்பட்ட சமாதான முன்னெடுப்புகளைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பிரதிபளிப்பாக தலிபான் பேச்சுவார்த்தையாளர்கள், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் மூத்த பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் வியாழக்கிழமை மாஸ்கோவில் சந்தித்தனர். இதன் மறுநாள் வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மே 1 காலக்கெடு மீறப்படுவதற்கான தங்கள் அதிருப்தியையும் எச்சரிக்கையையும் தலிபான்கள் வெளியிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தலிபானுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பைடன் புதன்கிழமை நடைபெற்ற ஏபிசி தொலைகாட்சியுடனான நேர்காணலில், “மே 1 காலக்கெடு நடக்கக்கூடும், ஆனால் அது கடினமானது” என்றும், “காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் அது நீண்ட காலம் நீடிக்கப்படும்” என்றும் கூறினார்.
தலிபான் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் சுஹைல் ஷாஹீன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “அவர்கள் செல்ல வேண்டும், மே 1 க்கு அப்பால் தங்கியிருப்பது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும், அந்த மீறல் எங்கள் தரப்பிலிருந்து இருக்காது, ஆனால் அந்த மீறலுக்கு எதிர்வினை இருக்கும். இது நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம், இவர்கள் வெளியேரியவுடன், ஆப்கானிஸ்தானுக்கான நிரந்தர அமைதியான தீர்வு குறித்து நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். நிரந்தர மற்றும் விரிவான யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்காக ஆப்கானிஸ்தானுக்கான அரசியல் பாதை வரைபடத்தை எட்டுவதன் மூலம் கொண்டு வர முடியும்” என்று கூறினார்.
வியாழக்கிழமை அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பாக்கிஸ்தான் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் “இஸ்லாமிய எமிரேட் மறுசீரமைப்பை ஆதரிக்கவில்லை“ என்று கூறியது.
ஆனால் வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தலிபான் அரசியல் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் கூறுகையில், ”ஆப்கானியர்கள் தான் தங்கள் ஆட்சி முறையை முடிவு செய்வார்கள் மேலும் அது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருக்க வேண்டும். அறிவிப்பில் கூறப்பட்டுள்ளவை, எல்லா கொள்கைகளுக்கும் எதிரானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை“ என்று கூறினார்.
இஸ்லாமிய அரசாங்கத்திற்கான தங்களின் கோரிக்கையில் தலிபான்கள் உறுதியாக இருப்பதாக ஷாஹீன் கூறினார். ஆனால் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் எப்படி இருக்கும் என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை.
தேர்தல்களை தலிபான்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்று ஷாஹீன் கூறவில்லை, ஆனால் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அரசாங்கம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தின் வரையறைக்கு பொருந்தாது என்று அவர் வலியுறுத்தினார்.