பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் இராணுவ தலைமைகள் கடந்த மாதம் எதிர்பாராத கூட்டு போர்நிறுத்த அறிவிப்பு ஒன்றை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் மிகவும் பலமிக்க இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவித் பாஜ்வா இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் “கடந்த காலத்தை புதைத்து விட்டு“ ஒத்துழைப்பை நோக்கி செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு “உகந்த சூழலை“ உருவாக்குவதற்கு இந்தியா மீது சுமை இருப்பதாக வலியுறுத்திய பஜ்வா, பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவிற்கும் பாரிய பங்கு உண்டு என்று கூறினார்.
கடந்த வியாழக்கிழமை தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அறிஞர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பாகிஸ்தானின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பஜ்வா உரையாற்றும் போது “கடந்த காலத்தை புதைத்து விட்டு முன்னேற வேண்டிய தருணம் இது என்று நாங்கள் உணர்கிறோம். ஆனால் நமது அண்டை நாடான (இந்தியா) ஒரு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்; குறிப்பாக இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில். இரண்டு தெற்காசிய அணுசக்தி போட்டியாளர்களிடையே தீர்க்கப்படாத மோதல்கள் இந்த பிராந்தியத்தை வறுமை மற்றும் வளர்ச்சியடையாத சமூகத்தை நோக்கி இட்டுச் செல்கிறது” என்று உரையாற்றினார்.
மேலும் “இந்தியா–பாகிஸ்தான் மோதல்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொருளாதார திறனுக்கு என்றென்றும் முட்டுக்கட்டையாகவே இருக்கும். காஷ்மீர் பிரச்சினையை அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்க்காமல், துணைக் கண்ட சமரசத்தின் செயல்முறைகளை மேற்கொண்டால், அது எப்போதுமே தடம் புரல்வதற்கான வாய்புகள் அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்“ என்று பஜ்வா கூறினார்.
ஜனாதிபதி ஜோ பைடனின் புதிய நிர்வாகத்தில் பாகிஸ்தானுக்கு “நம்பிக்கை” இருப்பதாகவும், இந்த நிர்வாகத்தால் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவ முடியும் பஜ்வா கூறினார்.
உடனடியாக இந்த நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்கா, இரு நாடுகளும் “முன்னேற்றத்தை வளர்த்துக் கொள்ள” முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்துள்ளது.
கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, “இந்தியா அமைதிக்காக ஒரு அடி முன்வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடிகளை முன்வைக்கும்” என்று கூறினார்.
குறிப்பு:
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை இந்து அரசின் கீழ் அடக்கம் செய்வதற்கான அரசியல் ரீதியாக ஊக்கமளித்த, அமெரிக்க திட்டத்தின் மீதான தனது முழு உறுதிப்பாட்டை அறிவிப்பதில், ஜெனரல் பஜ்வா இதைவிட வெளிப்படையாக கருத்துக்கூற முடியுமா? இந்த பிராந்தியத்தின் வாழும் முஸ்லிம்களை தலைமுறை தலைமுறையாக அடிமைப்படுத்தி தனக்கு சேவகம் செய்யும் பிராந்திய வல்லரசாக இந்தியாவை வளர்த்தெடுக்கும் வாஷிங்டனின் கனவை நிஜமாக்கும் கேவலத்தை இம்ரான்-பாஜ்வா அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்ட வரலாற்றுத் துரோகமே ஜெனரல் பாஜ்வாவின் வாயால் கக்கப்பட்டுள்ளது.