கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவில் மூன்று வெவ்வேறு ஸ்பாக்களில் (spas) நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் இறந்தவர்களில் ஆறு பெண்கள், ஆசிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூன்று தாக்குதல்களையும் 21 வயதுடைய வெள்ளைகார இளைஞர் ஒருவர் நடத்தியிருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய சமூகங்கள் வாழும் பகுதிககளில் கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நியூயார்க் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அறிவிக்கும் நிலைக்கு இந்த சம்பவம் நிர்ப்பந்தித்துள்ளது.
ஜோர்ஜியாவின் தலைநகரான அட்லாண்டாவின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் யங் ஆசியன் மசாஜில் (Young’s Asian Massage) 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரு ஆசிய வம்சாவளியை சேர்ந்த பெண்களும், வெள்ளை இனத்தை சேர்ந்த ஒர் ஆணும், ஒர் பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாளத்திற்கு பின்னர் கோல்ட் ஸ்பாவில் (Gold Massage Spa) கொள்ளை நடப்பதாக வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து, அங்கு விரைந்த போலிசார், மூன்று ஆசிய பெண்கள் கொல்லப்பட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தனர். மேலும் இன்னுமொரு ஆசிய பெண் அரோமா திரபி ஸ்பாவில் (Aroma Therapy spa) கொல்லப்பட்டுள்ளார் என்று செரோகி பிராந்திய ஷெரிப் துறையின் கேப்டன் ஜே பேக்கர் அட்லான்டா பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
சி.எஸ்.யு சான் பெர்னார்டினோவின் வெறுப்பு மற்றும் தீவிரவாத ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 16 பெரிய அமெரிக்க நகரங்களில் ஆசிய இனத்தவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸை “சீனா வைரஸ்” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த போக்குக்கு பங்களிப்பு செய்திருப்பதாக சிவில் உரிமைகள் குழுக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பு:
வளர்ச்சிக்கும், வாய்ப்புக்குமான தேசம் – Land of opportunities என்று தன்னை போலியாக சித்தரித்த அமெரிக்காவின் இன்றைய நிஜங்களே இவை. மக்களை நிறத்தால், இனத்தால், வர்க்கத்தால் பிரித்து, ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்து, ஒரு வீதமான முதலாளி முதலைகளுக்கு மக்களை இரையாக்கும் முறைமையில் இச்சம்பவங்களும் மூலதனங்களே. வெள்ளை நிற வெறியர்களின் உற்பத்தி, வெள்ளைத்தோலின் விளைவல்ல; அது தீவிர வலதுசாரி இனவாத மேலாதிக்கச் சிந்தனையினதும், அதன் கட்டமைப்பினதும் விளைவு. அமெரிக்கா தோற்றுவித்த சமூகக் கட்டமைப்பிலிருந்து அவ்வியல்பை வேறு பிரிக்க முடியாது. பன்மைத்துவ சமூகத்துக்கு பாதுகாப்பளிக்கும் பக்குவமும் அதற்கு கிடையாது. எனவே ஒவ்வொரு காலப்பிரிவிலும் எவரோ ஒருவர் அதற்கு பழியாவதை யாராலும் தடுக்க முடியாது. இந்நிலை என்றென்றும் உலகுக்கு தலைமை தாங்க துடிக்கும் ஓர் தேசத்தின் அடையாளம் அல்ல. ‘அமெரிக்கனவு – American Drems’ 99 சதவீதத்தினருக்கு என்றும் நிஜமாவதில்லை.