உலக அரங்கில் 1300 வருடங்களுக்கு மேலாக தன்னை ஒரு ஜாம்பவானாக நிலைநிறுத்திய கிலாஃபத், உலக அரசியலில் இருந்து நீக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. நபி (ஸல்) அவர்கள் மதினாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவியதிலிருந்து 1924ஆம் ஆண்டு அது நீக்கப்படும் வரை, இஸ்லாத்தின் ஒளியை உலகெங்கும் பரப்பும் பணியை அது மேற்கொண்டு வந்தது.
இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு தருணங்களை மிகவும் கடினமான தருணங்களாக நான் சுட்டிக் காட்ட விருப்புகிறேன்.
ஒன்று, நபித்தோழர்கள், உலகின் தலைவர்களாக உயர்ந்த நிலையை அடையும் பொழுது அவர்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் அவர்களை விட்டுப் பிரிந்த தருணம். மற்றையது 1300 வருடங்களுக்கு மேலாக உலக அரங்கில் அல்லாஹ்வின் நிழலாகத் திகழ்ந்த கிலாஃபத், 1924ஆம் ஆண்டு நீர்மூலமாக்கப்பட்டது.
முதலாவது தருணத்தை பொருத்தவரை, அன்றைய வல்லரசுகளாக திகழ்ந்த ரோம, பைசாந்திய அரசுகளால் பாலைவன எலிகளாக துட்சமாக மதிக்கப்பட்ட அரபு சமூகம், குறுகிய காலத்துக்குள் இஸ்லாத்தின் வழிகாட்டலால் அப்பேரரசுகளையே வெற்றி கொண்ட வரலாறு முழு உலகையும் வியப்புக்குள்ளாக்கியது. இவ்வளவு பாரிய ஆளுமையை அவர்களுக்குள் வளர்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைந்த போது தாம் அனாதைகளாகி விட்டதாக ஸஹாபாக்கள் உணர்ந்தனர். படைத்த ரப்புடன் தமக்கிருந்த நேரடித் தொடர்பு நிரந்தரமாக அறுக்கப்பட்டு விட்டதாக அவர்கள் வேதனைப்பட்டனர்.
இரண்டாவது தருணமான கிலாஃபத் வீழ்த்தப்பட்ட தருணமும், முஸ்லிம்களின் வரலாற்றில் என்றென்றும் இல்லாத பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. முஸ்லிம்களின் அரணாகவும், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் நீதியின் அச்சாணியாகவும் விளங்கிய கிலாஃபத், 1924ஆம் ஆண்டு பிரித்தானியாவின் சூழ்ச்சியாலும், உஸ்மானிய இராணுவ தளபதியான முஸ்தபா கமாலின் துரோகச் செயலாலும் உலக அரங்கிலிருந்து நீக்கப்பட்டது.
கலீபாவின் ஓர் சொல்லுக்கு தொடை நடுங்கிய இஸ்லாத்தின் எதிரிகளால் கிலாஃபத் வீழ்த்தப்பட்ட பின்னால் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் சொல்லில் அடங்காது. இன்றுவரை முஸ்லிம்களின் நிலங்களை துண்டாடி, அவர்களின் வளங்களை சூரையாடி அநீதிக்கு மேல் அநீதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. உலகிற்கே களங்கரை விளக்காக திகழ்ந்த முஸ்லிம் உலகு, உலகெங்கிலும் தாண்டவமாடும் அட்டூழியங்களை எதிர்க்க முடியாததாகவும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியாததாகவும் மாறிவிட்டது.
ஆனால் இந்நிலைகளினால் ஓர் முஸ்லிம் நிலை தடுமாறுவதில்லை. எவ்வகையான இக்கட்டான சூழ்நிலைகள் நமக்கு வந்தாலும், இந்த வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையான ரகசியத்தை அல்லாஹ் (சுபு) நமக்கு சொல்லி தந்திருக்கிறான். அல்லாஹ்(சுபு) அது குறித்து குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
(وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ)
(மனிதர்களே!) உங்களில் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையவர்களுக்கு – அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரமே, இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்குப் பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய பயத்திற்குப் பிறகு அமைதியைக் கொண்டு நிச்சயமாக மாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது, என்னையே வணங்குவார்கள்; இதன் பின்னர் (உங்களில்) எவர் நிராகரிப்பவராகி விட்டாரோ நிச்சயமாக அவர்கள்தாம் (அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காத) பாவிகள் (24:55)
பூமியில் அதிகாரம் பெறுவதற்கான காரணத்தை சர்வ வல்லமை பெற்ற அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளான். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அனுமதியை கொண்டு எதிர்காலத்தை பற்றியும் இந்த உம்மத்தின் அரசியற் சூழ்நிலையின் படிநிலைகள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைஃபா இப்னு யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلاَفَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلاَفَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةٍ. ثُمَّ سَكَتَ»
அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும். அதன் பின் அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழிமுறையில் கிலாஃபா ஆட்சிமுறையாக அமையும். பிறகு அல்லாஹ் நாடும் பொழுது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு அது கடினமான மன்னராட்சி முறையாக அமையும். அல்லாஹ் எதுவரை நாடியிருக்கின்றானோ அதுவரையிலும் நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் பொழுது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்குமுறையைக் கொண்ட மன்னராட்சியாக அமையும். அல்லாஹ் எதுவரை நாடியிருக்கின்றானோ அதுவரையிலும் நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் பொழுது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழிமுறையில் கிலாஃபா ஆட்சி ஏற்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி அமைதி காத்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)
இந்த நபிமொழியை ஊடுருவிப் பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் அளித்த வாக்குறுதியில் கடைசி பாகத்தை தவிர அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் கடைசியாக கூறிய நபித்துவத்தின் அடிப்படையிலான கிலாஃபாவின் வருகை மாத்திரமே எமக்காகக் காத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அது மீண்டும் தோன்றுவதற்கான காலப்பகுதியிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முதன் முதலாக இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட, நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து அவரது தோழர்கள் அயராது உழைத்தார்கள். சஹாபாக்கள் நிறைவேற்றிய அந்த வரலாற்றுப்ணியை, நாங்களும் நிறைவேற்றுவதற்கான உன்னதமான ஓர் சந்தர்ப்பத்தை அல்லாஹ் (சுபு) எமக்கு ஏற்படுத்தி தந்திருகிறான்.
எனினும் அதற்கான தேர்வை நாம் தான் மேற்கொள்ள வேண்டும். ஒருவர் தன்னை இப்பணியில் ஒரு பங்காளியாக ஆக்கிக் கொள்ளவும் முடியும் அல்லது தன்னை அதிலிருந்து விலகிக்கொள்ளவும் முடியும். கிலாஃபத்தை நிலைநாட்ட நாங்கள் முயற்சி செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி கிலாஃபத்தின் மீள் வருகையை யாராலும் நடுத்து நிறுத்த முடியாது. அது சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். எனவே இந்த உயரிய பணிக்கான அல்லாஹ்(சுபு) விடமிருந்து எமக்கு கிடைக்கவுள்ள விலைமதிப்பில்லாத வெகுமதியை சீர்தூக்கிப்ப பார்த்து எமது நிலைப்பாட்டை தீர்மானிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ் (சுபு) அனைத்து சந்தர்பங்களிலும் ஷரியாவை, அதாவது அவனது கட்டளைகளை கடைப்பிடிக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறான். அவை தனிநபர் கட்டளைகளிலிருந்து, பொது வாழ்வு தொடர்பான கட்டளைகள் வரைக்கும் விரிந்து கிடக்கின்றன. உதாரணமாக, கீழ்வரும் குற்றவியல் தொடர்பான கட்டளைகளை யார் மேற்கொள்வது? இவை குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க மாட்டோமா?
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُواْ أَيْدِيَهُمَا
திருடனும், திருடியும் அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (5:38)
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِئَةَ جَلْدَةٍ
(திருமணமாகாமல்) விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடியுங்கள். (24:2)
இவ்வாறு அல்லாஹ் (சுபு) நமக்கு நிறைய கட்டளைகளை இட்டிருந்தாலும், தனிமனித கட்டளைகளையும், ஒரு சில கூட்டாக செய்யக்கூடிய கட்டளைகளையும் மாத்திரமே எம்மால் நிறைவேற்ற முடிகிறது. ஆனால் அல்லாஹ்(சுபு)வின் பெரும்பாலான கட்டளைகளை நம்முடைய வாழ்க்கையில் அமுல்படுத்தப்படாதது பற்றியும், அவை கைவிடப்பட்டதற்கான காரணம் பற்றியும் அல்லாஹ்(சுபு) எம்மிடம் கேள்வி கேட்க மாட்டான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்(சுபு) நாளை மறுமை நாளில் அவை பற்றியும் எம்மிடம் நிச்சயம் கேள்வி கேட்பான். அல்லாஹ் (சுபு) எங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளை (செல்வம், பலம், அறிவுத்திறன் மற்றும் இதர ஆற்றல்கள், திறமைகள்) கொண்டு அவனது கட்டளைகளை நிறைவேற்ற எவ்வளவு தூரத்திற்கு முயற்சிகளை மேற்கொண்டோம் என்பது பற்றிய அவனது கேள்வி மிகக் கடுமையானதாக அமைய இருக்கின்றது. அது பற்றி நாம் என்றாவது இறையச்சத்துடன் சிந்தித்துள்ளோமா?
அல்லாஹ்வின் சட்டத்தையும், ஆட்சியையும் இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக, எம்மை ஊக்குவிக்கவும், மகிழ்விக்கவும் அல்லாஹ் (சுபு) அருளியிருக்கும் குர்ஆனிய வசனங்கள் எமக்கு போதுமானவை இல்லையா?
நன்மையை ஏவி, தீமையை தடுப்பது முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய அடிப்படையான பண்பு. எம்மைச் சூழ இடம்பெறும் அநியாயங்களை கண்டும் நாம் பராமுகமாக இருப்பதால் அல்லாஹ் மன்னித்து விடுவான் அல்லது அவனது கோபம் எம்மீது வந்து விட மாட்டாது என்று யாரும் நினைத்து விடக்கூடாது. இவ்வாழ்க்கையே ஒரு சோதனைக்களம் என்பதால் நாம் வாழும் சூழ்நிலைக்கு நாம் தான் பொறுப்பு கூற வேண்டும். நாங்கள் குற்றம் இழைப்பவர்களை தடுக்கவில்லை என்றால், அதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், அதை தடுப்பதற்கு பொறுப்பானவர்களை நாம் பொறுப்புச் சாட்டவில்லை என்றால் அதற்கு நாங்களே பொறுப்பு கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நுமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
«مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِى أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ فَقَالُوا لَوْ أَنَّا خَرَقْنَا فِى نَصِيبِنَا خَرْقًا، وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا. فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا»
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“விலக்கப்பட்டவைகளிலிருந்து மக்களைத் தடுப்பவர்களுக்கும், விலக்கியவைகளைச் செய்பவர்களுக்கும் உதாரணம் கப்பலில் சீட்டுப் போட்டுக் கொண்டவர்களைப் போன்றாகும். சிலர் கப்பலின் மேல் தளத்திற்கும், சிலர் கப்பலின் கீழ்த் தளத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டால் மேல் தளத்தில் உள்ளவர்களைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ‘நாம் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் எங்கள் பகுதியிலேயே ஒரு துவாரத்தை இட்டுக் கொண்டால் என்ன?’ என்று பேசிக் கொண்டனர். மேல் தளத்தில் உள்ளவர்கள் அவர்கள் நாடியபடி செய்ய விட்டு விட்டால் அனைவரும் அழிந்து விடுவர். மாறாக மேலுள்ளவர்கள் தடுத்து நிறுத்தினால் அவர்களும் தப்புவார்கள் மற்றவர்களும் தப்பிப்பார்கள்” (புஹாரி)
இஸ்லாமிய சொந்தங்களே! சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்(சுபு)வின் ஆட்சியை இவ்வுலகில் நிலைநாட்டும் மாபெரும் இப்பணிக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்! ஏற்கனவே இந்தப்பாதையில் பயணிக்காதவர்கள் ஓர் உயரிய பயணத்தைத் தொடர ஆயத்தமாகிக் கொள்ளுங்கள். அதற்காக முன்னணியில் நின்று உழைக்கும் வரலாற்று புருஷர்களுடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.
وَلاَ تَهِنُوا وَلاَ تَحْزَنُوا وَأَنتُمُ الأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (3:139)