சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்வது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுஜன வாக்கெடுப்பில் 51.2 வீதமான மக்கள் தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இத்தடைக்கான பிரச்சாரத்தை வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி – Swiss People’s Party (SVP) “தீவிரவாதத்தை நிறுத்து“ போன்ற முழக்கங்களுடன் ஆரம்பித்தது.
இன்றைய முடிவு முஸ்லிம்களுக்கு “ஒரு இருண்ட நாள், இது பழைய காயங்களைத் திறக்கிறது; சட்ட சமத்துவமின்மையின் கொள்கையை மேலும் விரிவுபடுத்துகிறது; மேலும் முஸ்லிம் சிறுபான்மையினரை விலக்குவதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது“ என்றும், இத்தீர்ப்பை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த போவதாகவும், முஸ்லிம்களின் மத்திய சபை (The Central Council of Muslims) ஒரு அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளது.
பெண்கள் எவ்வகையான ஆடைகளை அணிய வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் இத்தடைக்கு எதிராக தமது பிரதி வாதத்தை முன்வைத்துள்ளது.
லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, சுவிட்சர்லாந்தில் சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணிகிறார்கள். 8.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் சுமார் 5 சதவீதமானவர்கள் முஸ்லிம்கள். இதில் பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து வந்து குடியேறியவர்கள்.
சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையின் கீழ் சுவிஸ் மக்கள் தங்கள் சொந்த விவகாரங்களில் நேரடியாக தங்களது விருப்பத்தை சொல்ல முடியும். பல்வேறு பிரச்சினைகள் குறித்து தேசிய அல்லது பிராந்திய வாக்கெடுப்புகளில் வாக்களிக்க மக்கள் தொடர்ந்து அழைக்கப்படுகிறார்கள்.
சுவிஸ் பொதுஜன வாக்கெடுப்பில் இஸ்லாத்தை குறிவைத்து இதற்கு முன்னரும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ஆலோசனையை எதிர்த்து, மினாரெட்டுகளை கட்டுவதற்கு தடை விதிக்க மக்கள் வாக்களித்தனர். சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த இத்திட்டமும் மினாரெட்டுகள் இஸ்லாமியமயமாக்கலின் அடையாளம் என்றே பிரச்சாரங்களை மேற்கொண்டது.
குறிப்பு:
மதச்சார்பற்ற தாராண்மைவாத ஜனநாயக கொள்கையின் அடிப்படையில் ஒரு பெண் எவ்வளவு ஆபாசமாகவும் ஆடைகளை அணியலாம். ஏனென்றால் அது அவளின் விருப்பம் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. இதற்கு தடைகளை விதிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் ஒர் இஸ்லாமிய பெண், தன்னை படைத்தவனுக்கு அஞ்சி தனது உடம்பை முழுமையாக மறைத்து ஆடைகளை அணியும் போது, இது தீவிரவாதமாகவும் பெண்களை அடிமைபடுத்துவதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது இவர்களின் ‘சுதந்திரம்’ என்ற அடிப்படை கொள்கைக்கு இவர்களே முரண்படுவதை காட்டுகிறது. ஜனநாயகத்தில் சரி, பிழை அல்லது நியாயம் அநியாயம் என்பதை அடிப்படையாக வைத்து சட்டங்கள் இயற்றப்படுவதில்லை. மாறாக பெரும்பான்மையின் மனோ இச்சையின் அடிப்படையிலேயே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உண்மையில் இவர்களது பிரச்சினை ஆடை அல்ல. மாறாக இந்த ஆடை எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் அணியப்படுகிறது என்பதிலேயே இவர்களுக்குரிய பிரச்சினை.