காஷ்மீர் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காக வியாழக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ இயக்க ஜெனரால்–இயக்குநர்கள் The directors-general of military operations (DGMO) இடையே நடைபெற்ற இணைய வாயிலான கலந்துரையாடலில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்தத்தை கடைபிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
2003 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரைப் பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. ஆனால் இது இரு தரப்பினராலும் அடிக்கடி மீறப்படுவதால் பொதுமக்கள் மற்றும் இராணுவ உயிரிழப்புகள் தவிர்க முடியாதுள்ளன.
“வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ஒப்பந்தங்களும், புரிந்துணர்வுகளும் கண்காணிக்கப்படும் வகையில் எல்லைக் கோட்டு பகுதிகள் உட்பட பிற அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடாத்துவதை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்” என்று கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல்களால் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 257 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்தியப் படைகள் போர்நிறுத்தத்தை குறைந்தது 175 தடவைகள் மீறியுள்ளதாகவும், இதனால் எட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் பாக்கிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் குறைந்தது 5,133 தடவைகள் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும், இதன் விளைவாக 22 பொதுமக்கள் மற்றும் 24 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 197 பேர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிராந்தியத்தின் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி, போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். “காஷ்மீரில் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் அரசியல் உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை தொடங்க வேண்டும். யுத்த நிறுத்த மீறல்கள் நிறைய அழிவை உருவாக்குகின்றன. பொலிஸ், ராணுவ வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் அல்லது பொதுமக்கள் என மக்கள் தினமும் கொல்லப்படுவதை நாங்கள் காண்கிறோம். இந்த இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது” என்று கூறினார்.
குறிப்பு:
ஒரு தலைப்பட்சமாக மோடி அரசு ஜம்மு காஷ்மீரை நடுப்பகலில் வெட்டி எடுத்த போது உணர்வுள்ள பாகிஸ்தானிய துருப்புக்களை காப்பரண்களில் கட்டி வைத்து, வாய்ச்சாடல்களால் மாத்திரம் வடைசுட்டுக்கொண்டிருந்த இம்ரான் கனானின் அரசாங்கம் தற்போது நிரந்தர அமைதி என்ற பெயரில் போலி நாடகம் நடத்துகிறது. கட்டுப்பாட்டு எல்லைகளில் பல தியாகங்களை செய்து மரணித்தவர்களை பலிக்கடாவாக்கி விட்டு தற்போது சீனாவை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவை பிராந்திய வல்லரசாக மாற்றும் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு முட்டுக் கொடுக்கவே இது இடம்பெறுகிறது என்பதே விசனத்துக்குரியது.