இந்தியப் பெருங்கடலில் மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக அண்டை நாடான இந்தியா “போர்க்குணமிக்க ஆக்கிரமிப்பு கொள்கைகளை“ பின்பற்றுவதாக பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார் என்று பாகிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கராச்சியில் திங்களன்று நடைபெற்ற ஒன்பதாவது சர்வதேச கடல்சார் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி இந்தியா மேற்கத்திய பங்காளிகளிடமிருந்து மேம்பட்ட கடற்படை ஆயுத தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்தும் அதன் உள்நாட்டு முன்னேற்றங்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பதாக கூறினார்.
“தற்போது தீவிரவாத இந்துத்துவ சித்தாந்தத்தால் இயக்கப்படுகின்ற இந்தியாவின் போர்க்குணமிக்க ஆக்கிரமிப்பு கொள்கைகள் சர்வதேச மற்றும் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் உடனடி மற்றும் பரவலான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது” என்று மெஹ்மூத் குரேஷி கூறினார்
மேலும் “பாகிஸ்தான் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நம்பகமான குறைந்தபட்ச தடுப்பை பராமரிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்“ என்று கூறினார்.
2016 ஆம் ஆண்டில் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹன்டை INS Arihant சேவைக்கு உட்படுத்துவதாக இந்தியா முறையாக அறிவித்து பிராந்தியத்தில் கடற்படை சக்தியின் சமநிலையை மாற்றியது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களைத் தவிர்த்து வேறு ஒரு நாட்டால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் அரிஹந்த் ஆகும்.
2012 ஆம் ஆண்டில் 10 ஆண்டு குத்தகைக்கு வாங்கப்பட்டுள்ள இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் சக்ரா ஒரு ரஷ்ய அகுலா–வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலாகும். மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட் தற்போது கட்டுமானப்பணியில் உள்ளது.
ஆய்வாளர்கள் கூறுகையில், இந்திய ஆயுதங்களை உருவாக்குவது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்; ஆனால் பிராந்திய பாதுகாப்பில், அதிகரித்து வரும் இந்தியாவின் பங்கை இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் சீனாவால் அதிகரித்து வரும் இராணுவ சக்தியை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாற்கர பாதுகாப்பு குழுவின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
“பெரும்பாலும் சீனாவிற்கு எதிரானது என்று தோன்றுகிற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இந்த பகுதியில் இந்தியாவால் மட்டுமல்லாது அமெரிக்காவாலும் தொடர்ச்சியாக உருவாக்கப்படும் இவ்வகையான கட்டமைப்பு காரணமாக நிச்சயமாக பிராந்தியத்திலும் ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது” என்று இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர் ஜாஹித் உசேன் கூறினார்.