முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில் முன் வரிசையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களுக்காக அனுப்பப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி(Sputnik-V) கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவர்களுக்கு வழங்காமல் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கை “ஒரு உண்மையான குற்றம்; இது அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் மனிதாபிமான தரங்களை மீறுவதாகும்” என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹசீம் காசெம் கூறினார்.
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் மை அல்கைலா திங்களன்று ஒரு அறிக்கையில், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு சொந்தமான தடுப்பூசிகளை கையகப்படுத்தியதற்கு இஸ்ரேலே “முழுப் பொறுப்பையும்” ஏற்க வேண்டும் என்று கூறினார்.
பாலஸ்தீனிய ஆணையத்துடனான அதிகாரப் போராட்டத்தில், 2007 இல் இருந்து ஹமாஸ் ஆட்சி செய்யும் காசாவுடன் தனது தடுப்பூசி விநியோகத்தைப் பகிர்ந்து கொள்வதாக பாலஸ்தீனிய ஆணையம் கூறுகிறது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த பகுதி இன்னும் எந்தவொரு தடுப்பூசிகளையும் பெறவில்லை. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 53,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் குறைந்தது 537 இறப்புகள் நேர்ந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாலஸ்தீனிய ஆணையம் சுமார் 2,000 ஸ்பட்னிக்-வி தடுப்பூசிகளை வாங்கியிறுக்கிறது.
பாலஸ்தீனிய ஆணையம் காசாவிற்கு 1,000 தடுப்பூசி மருந்துகளை மாற்றுமாறு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் பொதுமக்கள் விவகாரங்களை மேற்கொள்ளும் இஸ்ரேலிய இராணுவ அமைப்பான கோகாட்டிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அவர்கள் “ஒரு அரசியல் தீர்மானத்திற்காக காத்திருப்பதாக“ பதில் கூறியுள்ளனர்.
காசா ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளால் முற்றுகையிடப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் கடலோர உறைவிடங்கள் உட்பட சுகாதார உள்கட்டமைப்பை வசதிகள் மிகவும் சேதத்திற்கு உள்ளாகும் வகையில் இஸ்ரேல் மூன்று முறை காசா மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியிறுக்கிறது.
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலியர்களையும், 2014 தாக்குதலின் போது கொல்லப்பட்ட இரண்டு வீரர்களின் எச்சங்களையும் விடுவிக்க இஸ்ரேல் கோரியுள்ளது. இதற்கு ஈடாக, இஸ்ரேல் தடுத்து வைத்திருக்கும் ஏராளமான பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரக்கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “தடுப்பூசிகளை அனுப்ப அனுமதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தடுக்கப்படவில்லை; அவர்கள் இன்னும் அதைப் பற்றி சிந்திக்கிறார்கள்“ என்று கூறினார்.
உலகில் மிக விரைவாக தடுப்பூசி பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் தான் ஆக்கிரமிப்பு சக்தியாக இருப்பதனால் மேற்குக் கரையிலும் காசாவிலும் வாழும் பாலஸ்தீனியர்களுடன் தனது தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழைப்புகளை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கிடையில் நடந்த கலந்துரையாடலின் போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ரோய் பினியாமினி, “இஸ்ரேலின் சொந்த தடுப்பூசிகளை காசாவுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், ஆனால் பாலஸ்தீனிய ஆணையத்தின் சொந்த தடுப்பூசிகளை பிரதேசத்திற்கு வழங்க அனுமதிக்க மற்ற கட்சிகளிடமிருந்து வரும் கோரிக்கைகளை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருவதாகவும் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” கூறினார்.