திங்களன்று சிரியாவின் இராணுவம், தலைநகர் டமாஸ்கஸ் மீதான “இஸ்ரேலிய அத்துமீறல்களை“ நாட்டின் வான் பாதுகாப்பை கொண்டு தடுத்து நிறுத்தியதாக கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேல் சிரியாவிற்குள் ஈரானிய இலக்குகள் மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலிய விமானப்படையால் தாக்கப்பட்ட விவரங்களை அரசு ஊடகங்கள் இன்னும் வெளியிடவில்லை.
ஒர் இராணுவ அறிக்கையில் உயிரிழப்புகளையும், சேதங்களையும் பற்றி குறிப்பிடாமல் தலைநகருக்கு அண்மையில் உள்ள இலக்குகளை தாக்க இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கோலன் ஹைட்ஸ்ஸிற்கு மேலால் பறந்ததாகவும், இஸ்ரேலிய விமானப்படையால் ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் “தலைநகரின் வான்பகுதியில் ஏவிய இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல்களை எங்கள் வான் பாதுகாப்பு தொடர்ந்து தடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஈரானிய ஆதரவுடைய போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் பரந்த பகுதியில், தலைநகருக்கு தெற்கே கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஸ்வா நகரில் இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் கணிசமான இராணுவப் பிரிவுகளை தாக்கியிருப்பதாக சிரிய இராணுவத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலின் ஆயுதப்படைகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை; ஆனால் சிரியாவிற்குள் அதிகரித்து வரும் தாக்குதல், சிரியாவில் தெஹ்ரானின் இராணுவ இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக, இஸ்ரேலின் மூத்த இராணுவ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைத் தலைவர் அவிவ் கொச்சாவி கடந்த ஆண்டின் இறுதியில் தனது நாட்டின் ஏவுகணைத் தாக்குதல்கள் “சிரியாவில் ஈரானின் ஈடுபாட்டைக் குறைத்துவிட்டது” என்றும், 2020 ஆம் ஆண்டில் 500 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியிருப்பதாகவும் கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில் சிரியாவில் ஈரானின் இராணுவ செல்வாக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதுவே இஸ்ரேல் அதன் பரம எதிரியான ஈரான் தனது எல்லையில் ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ அடிவருடியை நிறுவுவதைத் தடுக்கும் பிரச்சாரத்தை அதிகரிக்க தூண்டியிருக்கிறது என்றும் மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான ஈரானிய ஆதரவு போராளிகள், தற்போது லெபனான்–சிரிய எல்லைப் பகுதிகள் உட்பட பரந்த அளவில் சிரியாவின் கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளையும், டமாஸ்கஸைச் சுற்றியுள்ள பல புறநகர்ப் பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் சிரியாவிற்குள் அதன் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், பிரதான பாக்தாத்–டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் எல்லை சோதனைச் சாவடியைக் கட்டுப்படுத்தும் சிரிய நகரமான அல் புகாமலில் கவனம் செலுத்தியுள்ளது.
இஸ்ரேலிய தளபதிகள் மற்றும் பிராந்திய உளவுத்துறை ஆதாரங்களின்படி இஸ்ரேலிய நடவடிக்கைகளை அமெரிக்கா மறைமுகமாக அங்கீகரித்துள்ளது.
பிராந்தியத்தில் விரோதப் போக்குகளில் பெரும் அதிகரிப்பு ஏற்படாமலும், தெஹ்ரான் சிரியாவின் அதிகார சமநிலையை தனக்கு சாதகமாக மாற்றுவதை தடுக்கும் நோக்கில் ஈரானின் விரிவான இராணுவ சக்தியை படிப்படியாக குறைப்பதுவே இச் செயல்பாட்டு நடவடிக்கைகளின் நோக்கம் என்று பிராந்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
குறிப்பு:
அமெரிக்கா ஈரானையும், இஸ்ரேலையும் பிராந்தியத்தின் தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக என்றென்றும் பயன்படுத்தி வந்திருக்கிறது. ஒருவரை கொண்டு மற்றவரை தனது வீயூகத்துக்கு தொடர்ந்து இணங்கச் செய்பதற்காக கட்டுப்படுத்துவது அவர்களின் நீண்கால மூலோபாயம். பைடன் நிர்வாகம் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாணியிலிருந்து சற்று வேறுபட்டு இயங்குவதை எம்மால் காணக்கூடியதாக இருந்தாலும் இலக்கு என்னவோ ஒன்றுதான். எனவே இந்த களநிலை மாற்றங்கள் பிராந்தியத்தில் வாழும் மக்களின் நலன்களை பழிக்காடாவாக்கும் சந்தர்ப்பங்களே ஒழிய இதிலே நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இருப்பதில்லை.