யெமனில் போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 400,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று ஐ.நா. முகவர் நிறுவனங்கள் எச்சரித்துள்ளது.
மேலும் 2.3 மில்லியன் சிறு குழந்தைகள், இந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
“இந்த எண்ணிக்கைகள் யெமன் மற்றுமொரு உதவிக்காக கையேந்தி நிற்கும் அழுகுரலாகும். ஒவ்வொரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை என்பது ஒரு குடும்பம் உயிர்வாழ போராடி கொண்டிருக்கிறது என்பதை குறிக்கிறது“ என்று உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தார்.
உணவு பற்றாக்குறையால் இறக்கும் ஆபத்தில் உள்ள யெமன் குழந்தைகளின் எண்ணிக்கை 400,000 ஆக உயர்ந்துள்ளது, இது 2020 ஐ விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
“தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அதிகமான குழந்தைகள் இறந்து விடுவார்கள்“ என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப்பின் தலைவர் ஹென்றிட்டா ஃபோர் கூறினார்.
ஏறக்குறைய யெமனின் 12 மில்லியன் குழந்தைகளுக்கு ஏதோ வகையில் ஒருவித உதவி தேவைபடுகிறது என்று யுனிசெஃப் மதிப்பிடுகிறது. உணவு, சுகாதார சேவைகள், சுத்தமான நீர், பள்ளிப்படிப்பு மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பண உதவிகள் என இதில் அடங்குகிறது.
2021 ஆம் ஆண்டில் சுமார் 1.2 மில்லியன் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
“யெமனில் உள்ள நெருக்கடி என்பது ஒரு நச்சு கலவையான மோதல்கள், பொருளாதார சரிவு மற்றும் உயிர் காக்கும் உதவிக்கு தேவையான கடுமையான நிதி பற்றாக்குறை. ஆனால் பசிக்கு ஒரு தீர்வு இருக்கிறது, அதுதான் உணவு மற்றும் வன்முறைக்கான முடிவு” என்று டேவிட் பீஸ்லி கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 29 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினருக்கு உயிர்வாழ்வதற்கு ஏதேனும் ஒரு உதவி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் யெமனின் உதவித் திட்டங்களுக்கு தேவையான 3.2 பில்லியன் டாலர்களில் 1.43 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
யெமனியர்கள் ஆறு வருடங்களாக இரத்தக்களரி, அழிவு மற்றும் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில், ஈரானுடன் இணைந்த ஹுவ்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகரையும், நாட்டின் வடக்கின் பெரும்பகுதியையும் கைப்பற்றிக் கொண்டனர்.
ட்ரம்ப் நிர்வாகம் ஹுவ்திகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிட்டதை பைடன் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் ஓட்டத்தை இந்த பட்டியலிடல் சீர்குலைக்கும் என்று அஞ்சிய யெமனில் பணிபுரியும் உதவிக்குழுக்கள் பைடனின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளது.
“ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு தீய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான சுழற்சியாகும், ஆனால் ஒப்பீட்டளவில் மலிவான மற்றும் எளிமையான தலையீடுகளால், பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்“ என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.