துருக்கிக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று துருக்கிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
“துருக்கி அடுத்த நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இந்த செயல்பாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதை செய்து முடிக்க நாங்கள் ஒரு உண்மையான முயற்சியை மேற்கொள்வோம்“ என்று தலைநகர் அங்காராவில் உள்ள தனது கட்சியின் நாடாளுமன்றக் குழுவிடம் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
மேலும் “இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்த எங்கள் திட்டங்களைத் தயாரித்து விவாதங்களைத் தொடங்குவோம். நம் தேசத்திலுள்ள யாரையும் எந்தப் பகுதியினரையும் விட்டுவிடாமல், தொலைநோக்கு, முன்னோக்கு, நல்லெண்ணம் மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் இவற்றை பகிர்ந்து செயலாற்றுவோம்“ என்று கூறினார்.
புதிய அரசியலமைப்பின் பொதுவான அம்சங்களில் ஒருமித்த கருத்து இருப்பதாக கூறிய எர்டோகன் “நாங்கள் வெவ்வேறு கருத்துக்களை கொண்ட அம்சங்களை மீண்டும் மீண்டும் பேசுவோம், விவாதிப்போம். எங்கள் குடியரசின் 100 வது ஆண்டு நிறைவுக்குள் ஆட்சிக் கவிழ்ப்பு அரசியலமைப்போடு நுழையாமல் நமது நாட்டிற்கும், தேசத்திற்கும் பொருந்தக்கூடிய புதிய சிவில் அரசியலமைப்பை உருவாக்குவோம். நிச்சயமாக இறுதி முடிவு நம் தேசத்திடமே வழங்கப்படும்“ என்று கூறினார்.
மக்கள் கூட்டணியில் எர்டோகானின் கூட்டாளியான தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவர் டெவ்லெட் பஹ்செலி (எம்.எச்.பி) Nationalist Movement Party புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக குரல் கொடுத்துள்ளார்.
குறிப்பு:
துரோகி முஸ்தபா கமால் பிரிட்டனுடன் இணைந்து உஸ்மானிய பேரரசை வீழ்த்தி நிலைநாட்டிய மதச்சார்பற்ற அரசலமைப்பை அடிப்படையாக கொண்டே இது வரை துருக்கி தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தது. தனது அரசியல் பிரச்சாரங்களில் இஸ்லாத்தை நிலைநாட்டுவோம் என்று கூறி ஆட்சி பீடம் ஏறிய எர்டோகன் தற்போது உருவாக்க நினைக்கும் புதிய அரசியலமைப்பையும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட சிவில் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். ஹாகியா சோபியாவை மீண்டும் மஸ்ஜித் ஆக பிரகடனப்படுத்தியதோ, இஸ்லாத்தின் ஒரு சில அம்சங்களை நிலைநாட்டுவதோ இஸ்லாத்தை நிலைநாட்டுவது என்று பொருள்படாது. மாறாக ஆட்சி அதிகாரம் (அரசியலமைப்பு) குர்ஆனையும், சுன்னாவையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் நீதிக் கொள்கை முதல் ஆட்சிக் கொள்கை (சமூக, பொருளாதார, கல்வி, வெளியுறவு மற்றும் ஆளுகை) வரை எதிர் கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு இஜ்திகாதின் மூலமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இறையாண்மை (சட்டம் இயற்றும் அதிகாரம்) என்பது அல்லாஹ் (சுபு) ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானது. இவ் இறையாண்மையை மக்கள் தங்களது கைகளில் எடுப்பது குப்ர் ஆகும்.