பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 22 ஆம் தேதி கொழும்புக்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார் என்று இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி UNHRCயில் இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க, பாக்கிஸ்தான் தற்போது முஸ்லீம் நாடுகளை வலியுறுத்தி வருகிறது என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இவரது விஜயம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்புக்கு விஜயம் செய்து ஒரு மாதத்திற்குப் பிறகு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ் விஜயத்தின் போது இம்ரான் கான் தற்போது இலங்கையில் முஸ்லிம்களுடைய மத நம்பிக்கைகளுக்கு எதிராக நடைபெறும் கட்டாய ஜனாசா எரிப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து இதை நிறுத்தி விடுவார் என்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்கின்றனர்.
குறிப்பு:
துரதிஷ்டவசமாக முஸ்லிம் நாடுகளின் தலைமைகள் என்கின்ற மேற்குலகின் கையாட்கள் அல்லது சீனா போன்ற வட்டிக்கடன் முதலாளிகளின் அடிமைகள் முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாக வைத்து செயற்படுவதில்லை. இவர்களின் முழுமுதற் குறிக்கோளுமே தமது வல்லாதிக்க எஜமானர்களின் நலன்களைப் பூர்த்தி செய்வதின் ஊடாக தமது ஆட்சிக்கட்டிலை பாதுகாத்துக்கொள்வதும், எமது ஜனமானர்களால் வரைந்து கொடுக்கப்பட்ட தேசிய அரசுகளின் நலன்களை மாத்திரம் அடைந்து கொள்ள நினைப்பதும்தான்.
இம்ரான் கானின் இலங்கை விஜயமும் இந்த அடிப்படை புரிதலுடனே பார்க்கப்பட வேண்டும். சீனாவினால் தொடர்ந்து இடம்பெற்றுவரும் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை “தான் அறிந்திருக்கவில்லை” என்று சர்வ சாதாரணமாக கூறிய இம்ரான் கான், பாகிஸ்தானின் உருவாக்கத்திலிருந்து அதன் தார்மீகப்பொறுப்பாக இருந்து வந்த காஷ்மீரை இந்தியா ஒரு தலைப்பட்சமாக ஒரு அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, வெறும் வாய்ச்சாடல்களைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத இம்ரான்-பாஜ்வா நிர்வாகம் இலங்கை முஸ்லிம்களுக்கு தீர்வைப்பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது முழுமையான மடமைத்தனம்.
எனினும் தமிழ் சமூகம் தமக்கு எதிரான இடம்பெற்றதாகக் கருதுகின்ற அநீதிகளுக்கு ஐ.நாவின் ஊடாக ஓர் நியாயம் கிடைக்கும் என்று ஓர் நப்பாசையிலாவது போராடி வருகின்ற தருணத்தில் அதற்கு பாகிஸ்தானினதும், அதன் தற்போதைய எஜமானர்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி துரோகம் செய்ய இம்ரான்-பாஜ்வா நிர்வாகம் முனையுமாக இருந்தால் அது இன்னுமொரு அநீதிக்கு துணைபோகின்ற செயலே தவிர வேறில்லை. ஓர் முஸ்லிம் அரசு நன்மையின் பாலும், நீதியின் பாலும் நிற்க வேண்டுமேயொழிய குறுகிய தேசிய நலன்களுக்காக ஒடுக்குமுறையாளர்களுடன் துணை நிற்கக்கூடாது.