யேமனில் சவுதியின் தலைமையில் இடம் பெறக்கூடிய இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியுறவுத்துறையில் ஆற்றிய உரையில் கூறினார்.
இது அமெரிக்காவின் புதிய நிர்வாகம், யேமனின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்களது பங்கு அதிகப்படியாக இருக்க வேண்டும் என்று திட்டமிடுவதை குறிக்கிறது.
“இந்த போர் முடிவுக்கு வர வேண்டும். எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, யேமனில் நடக்கும் போருக்கு சம்பந்தப்பட்ட ஆயுத விற்பனை உட்பட தாக்குதல் நடவடிக்கைகளுக்கான அனைத்து அமெரிக்க ஆதரவையும், நாங்கள் முடிவுக்கு கொண்டுவருகிறோம்” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
அதே நேரத்தில், “சவூதி அரேபியா ஏவுகணை தாக்குதல்கள், யுஏவி (ட்ரோன்) தாக்குதல்கள் மற்றும் இதர தாக்குதல் அச்சுறத்தல்களை பல நாடுகளில் இருக்கும் ஈரானிய ஆதரவு கொண்ட படைகளிடமிருந்து எதிர்கொள்கிறது. சவூதி அரேபியாவின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து உதவப் போகிறோம்” என்றும் கூறினார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பிரச்சினைகளைத் தீர்பதற்கான பைடன் நிர்வாகத்தின் ஒத்துழைப்பை சவூதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் ஃபர்ஹான் அல்–சவூத் வரவேற்றுள்ளார். ஆனால் யேமனில் நடை பெறும் சவூதி அரேபியாவின் போர் முயற்சிகளுக்கு, அமெரிக்கா தங்களது ஆதரவை முடிவுக்கு கொண்டுவரப் போவதாக கூறிய தீர்மானத்தைப் பற்றி எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
“சவூதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இராச்சியத்துடன் ஒத்துழைக்க ஜனாதிபதி பைடனின் உரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் உறுதிப்பாட்டை சவூதி அரேபியா வரவேற்கிறது“ என்று வெளியுறவு அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
சவூதி அரேபியாவின் துணை பாதுகாப்பு மந்திரி இளவரசர் காலித் பின் சல்மான் வியாழக்கிழமை பிற்பகுதியில் பதிவிட்ட தொடர்ச்சியான ட்வீட்டர் பதிவுகளில் இதே உணர்வை மீண்டும் வலியுறுத்தும் விதமாக “ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் உள்ள எங்கள் நண்பர்களுடன் பணியாற்றியது போல் இந்த சவால்களையும் எதிர்கொள்ள சேர்ந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.
அரேபிய தீபகற்பத்தில் யேமனை தளமாகக் கொண்ட அல்–கொய்தா அல்லது AQAP குழுவிற்கு எதிரான எந்தவொரு அமெரிக்க நடவடிக்கைகளையும், அமெரிக்க ஆதரவின் முடிவு பாதிக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.
“அமெரிக்க தங்களது ஆதரவை முடிவுக்கு கொண்டுவருவதால் போர் தானாகவே முடிவடைந்து விடும் என்று அர்த்தமல்ல. ஆயுத குழுக்கள், அரசியல் பிரிவுகள், உள்ளூர் குழுக்கள் மற்றும் சிவில் சமூகம் அனைவரும் உள்வாங்கக்கூடிய வகையில் சிறந்த சமநிலை ஒன்றை உருவாக்குவதன் மூலமே போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இது எளிதான காரியம் அல்ல” என்று நெருக்கடி குழுமத்தின் மூத்த யேமன் ஆய்வாளர் பீட்டர் சாலிஸ்பரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.