எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை “பஞ்சம், பசி, பட்டினியால் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருவதாகவும்“ மில்லியன் கணக்கான மக்களுக்கு சென்றடைய வேண்டிய உதவிப் பொருட்கள் தொடரும் யுத்தத்தால் தடைப்பற்று நிற்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில், இப் பிராந்தியத்தின் பெரும் பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள், உணவு, நீர் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான அணுகல் சீர்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் 950,000 பேர் தங்கள் வீடுகளை விட்டும் வெளியேறியுள்ளனர்.
டைக்ரேயின் ஆறு மில்லியன் மக்களில் பெரும்பாலானோரின் நிலைமை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இப் பிராந்தியத்திற்குள் ஊடகவியலாளர்கள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்தொடர்புகள் மிக மோசமாகவும், உதவியாளர்கள் உள்ளே நுழைவதற்கான அனுமதியை பெற மிகவும் போராடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம மந்திரி அபி அகமது நவம்பர் 4 ம் தேதி வடக்கு பிராந்தியத்திற்குள் செல்ல துருப்புக்களுக்கு கட்டளையிட்டார். இந்த நடவடிக்கை பிராந்தியத்தை ஆளும் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி Tigray People’s Liberation Front (TPLF) கூட்டாட்சி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்காக என்று கூறினார்.
பிராந்திய தலைநகர் மெக்கல்லே மற்றும் பிற பெரிய நகரங்களிலிருந்து TPLF விலகியிருந்தாலும், சிறிய அளவிலான சண்டை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஐ.நா. அறிக்கையில் டைக்ரே பிராந்தியத்தின் பெரும்பகுதி “மனிதாபிமான பணியாளர்களுக்கு அணுக முடியாதது“ என்று குறிக்கப்பட்ட வரைபடம் ஒன்றை காட்டுகிறது. அபி அகமதுவின் அரசாங்கம் வெற்றியை அறிவித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்பு நிலைமை “நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும்” இருப்பதாக இவ் அறிக்கை கூறுகிறது.
மேலும் டைக்ரேயில் உள்ள கிட்டத்தட்ட 920 ஊட்டச்சத்து சிகிச்சை வசதிகளில் 1 சதவீதம் மட்டுமே அணுகக் கூடியது என்றும் “அங்குள்ள உதவி பணியாளர்களின் அறிக்கைகள் பிராந்தியத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதைக் குறிக்கிறது“ என்றும் குறிப்பிட்டுள்ளது.