ஈரானும், அமெரிக்காவும், 2015 ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கான முயற்சிகளை “ஒத்திசைக்க“ அல்லது “ஒருங்கிணைக்க“ ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் பொரெலால் உதவ முடியும் என்றும், முதல் படியை எடுக்க தமது நாடு தயாராக உள்ளது என்றும், ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் கூறியுள்ளார்.
திங்களன்று சி.என்.என் உடனான ஒர் நேர்காணலில், முகமது ஜவாத் ஸரீஃப், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தமானது, விரிவான கூட்டு செயல்பாட்டிற்கான திட்டம் Joint Comprehensive Plan of Action (JCPOA) என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு ஆணையம் என்றும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெஹ்ரானுக்கு எதிரான தனது “அதிகபட்ச அழுத்த” மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, 2018 இல் ஒரு தலைப்பட்சமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். எனினும் தற்போது அந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு ஜோ பைய்டனின் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
2015 இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகளை நீக்குவதற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது.
வாஷிங்டன், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்பும் என்றும், தெஹ்ரான் தான் இணங்கிய விதிமுறைகளுக்கு மீண்டும் திரும்பலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
மேலும் பைடன் நிர்வாகம் “நீண்ட மற்றும் வலுவான” ஒப்பந்தம் ஒன்றிற்கான கலந்துரையாடலை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக பிளிங்கன் தெரிவித்தார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கு அமெரிக்காவிற்கு “வரம்பற்ற” கால எல்லை இல்லை என்று ஜரிஃப் எச்சரித்தார்.
ஈரானுடன் மீண்டும் இராஜதந்திர ரீதியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்தும் அரசியல் ஆய்வாளர்கள், இதுவே ஈரானிய அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒரே வழி என்று கூறியுள்ளனர்.
குறிப்பு:
இதற்கு முன்னரும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக கிழித்து எறிந்த அமெரிக்காவை ஈரான் திரும்பத் திரும்ப நம்புவது ஈரான், தன்னைப் உண்மையாகப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் கண்ணோட்டத்தை எவ்வளவு பலகீனமாக கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சிரியாவுக்குள் நுழைந்து பஷர் அல் அசாத் ஆட்சியைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு மிகவும் அவசியம் ஏற்பட்ட 2015 இல், அமெரிக்கா ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் நுழைந்தது. ஆனால் அதன் உள்நோக்கம் நிறைவேறியதுடன் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தது. ஏனெனில் அந்த பிராந்தியத்தை ஈரானுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை. அமெரிக்கா ஈரானை பிராந்தியத்தில் ஒரு சக்தியாக அங்கீகரிக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி ஏமாந்து போனதுதான் ஈரானின் வரலாறு. அமெரிக்கா ஈரானை பொருளாதாரத் தடைகள் மற்றும் தனிமைப்படுத்தலுடன் ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்தியது. பிராந்தியத்தில் சியோனிச அலகான இஸ்ரேலின் முக்கிய பாத்திரத்தில் ஒன்று, அமெரிக்க நலன்களுக்கு மாறாக ஈரான் செயற்பட எத்தணிக்கும் தருணங்களில் ஈரானை கட்டுப்படுத்துவதாகும். சிரியப் புரட்சி நெடுகிலும், அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்க ஈரான் தரைப்படைகள் மற்றும் போராளிகள் படைககளை வழங்கிப் பாடுபட்டடாலும், சிரியாவில் ஒரு நிரந்தரமான மற்றும் ஆழமான இருப்பை ஈரான் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த, சியோனிச அலகு ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது. அந்த சந்தர்ப்பங்களில் ஈரானுடன் ஒரே பக்கத்தில் அமெரிக்கா இருந்தபோதிலும், இந்தத் தாக்குதல்கள் குறித்து சியோனிச அலகுக்கு எதிராக அமெரிக்கா ஒருபோதும் பேசவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.