கடந்த நவம்பர் தேர்தலில் பாரிய வெற்றியை அடைந்த நேஷனல் லீக் ஃபார் டெமாகிரசியின் National League for Democracy (NLD) தலைவர் ஆங் சான் சூகி, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளை மியன்மார் இராணுவம் கைது செய்து நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் இடம் பெற்ற தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையில் ஒரு விதமான பதட்டம் நிலவி வந்தது.
மியான்மரின் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ஒரு வீடியோவில், ஆயுதப்படைகளின் தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஓராண்டிற்கு அவசரநிலை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதுக்கு முன் ஆங் சான் சூகி எழுதிய கடிதம் ஒன்றில், “ராணுவத்தின் நடவடிக்கை நாட்டை மீண்டும் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது“ என்றும், “ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்; தனது ஆதரவாளர்கள் இதை ஏற்றுக் கொள்ள கூடாது“ என்று எழுதியிருப்பதாக என்.எல்.டி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மியோ நியுண்ட் கூறினார்.
மேலும் “மியான்மர் மக்கள் எந்த வித மோசமான வழியிலும் எதிர்வினையாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின் வழியில் நடக்க வேண்டும்; நானும் கைது செய்யப்படலாம்” என்று கூறினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி, ஈமொபைல் அழைப்பு சேவை மற்றும் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது; அரச ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன.
ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் இந்த நடவடிக்கை “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு விழுந்த கடுமையான அடியாகும்“ என்றும் அனைத்து தலைவர்களும் வன்முறையிலிருந்து விலகி மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“மியான்மரின் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மியான்மர் மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், அமைதி, மேம்பாடு தொடர்பான விருப்பங்களுடன் அமெரிக்கா நிற்கிறது. அந்த நாட்டின் ராணுவம் தங்கள் நடவடிக்கையை திருப்பிக் கொள்ள வேண்டும்.“ என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிலிங்கென் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
என்.எல்.டி நவம்பர் தேர்தலில் பாரிய வெற்றியை அடைந்தது. ஆனால் இராணுவம் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது மோசடியால் பெறப்பட்ட வெற்றி என்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
‘திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பார்கள், ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் சொல்வார்கள்…’ ஆங் சான் சூகியின் கதையும் அதுதான். மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலையும், இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளான நேரத்தில் குறிப்பாக அவற்றை மியன்மார் இராணுவம் மேற்கொண்ட பொழுதுகளில் நீண்ட மௌனம் காத்த அவர் அதனூடாக சர்வதேச விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஜனநாயகப் போராளி என அறியப்பட்ட அவருக்கு கொடுங்கோன்மைக்கு துணைபோனவர் என்ற இழிப்பெயர் வந்து சேர்ந்தது. கண்ணெதிரே நடப்பது அனைத்தும் அநியாயம் எனத் தெரிந்துகொண்டே ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் இராணுவத்தினதும், பெரும்பான்மை தீவிர தேசியவாதிகளினதும் ஆதரவைப் பெரும் ஒரே நோக்குடன் அவர்களுக்கு ஆதரவாக தனது ஆட்சியைப் புரிந்து வந்தார். இன்று அந்த கொடுங்கோல் சர்வாதிகாரமே அவர் மீது திரும்பிப் பாய்ந்திருக்கிறது. இன்று, சந்தர்ப்பவாத அரசியலில் அவரால் மட்டுமா ஈடுபட முடியும்? எம்மாலும் முடியும் என்று மியன்மார் இராணுவம் அவருக்கும் பாடம் எடுத்துள்ளது.