ரஷ்ய மற்றும் துருக்கியப் படைகள் லிபியாவிலிருந்து வெளியேறுவதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவை இரு படைகளும் புறக்கணித்திருப்பதனால், உடனடியாக இரு படைகளும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.நா. ஆதரவின் கீழ் கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வெளிநாட்டு துருப்புக்கள் மற்றும் கூலிப்படையினர் மூன்று மாதங்களுக்குள் லிபியாவிலிருந்து வெளியேற வேண்டும்.
மூன்று மாத காலக்கெடு கடந்த சனிக்கிழமையன்று முடிவடைந்துள்ள நிலையில், எந்தவொரு வெளிநாட்டு துருப்புக்களினதும் வெளியேற்றம் குறித்த அறிவிப்புகளோ அல்லது அதற்குரிய ஆயத்தங்களோ இது வரை அவதானிக்க முடியவில்லை.
“ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு துருப்புகளும், லிபியாவின் இறையாண்மையை மதித்து, லிபியாவில் மேற்கொண்டுள்ள அனைத்து இராணுவத் தலையீட்டையும் உடனடியாக நிறுத்த நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்“ என்று அமெரிக்க தூதர் ரிச்சர்ட் மில்ஸ் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற லிபியா மீதான ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் “அக்டோபர் மாத யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி, துருக்கியும் ரஷ்யாவும் தங்கள் படைகளை நாட்டிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறவும், லிபியாவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளித்த மற்றும் ஆதரவளித்த வெளிநாட்டு கூலிப்படையினர் மற்றும் இராணுவ பிரதிநிதிகளை அகற்றவும் உடனடியாக அழைப்பு விடுக்கிறோம்“ என்று மில்ஸ் கூறினார்.
லிபியாவில் போரிடும் முக்கிய பிரிவுகளின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்த பெர்லின் உச்சிமாநாட்டின் ஒரு வருட பூர்த்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் லிபியாவில் வெளிநாட்டு தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர யுத்த நிறுத்தத்தை நோக்கிப் பணியாற்றுவதற்கு உறுதியளித்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 50 F-35 போர் விமானங்களை விற்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக் கொண்ட ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை, வெள்ளை மாளிகை தற்காளிகமாக நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தான் நிகரற்ற வல்லரசு என்பதை நிறுவும் எண்ணத்தில் பைடனின் புதிய நிர்வாகம் தொழிற்படுவதாக தெரிகிறது. புதிய நிர்வாகம் அமெரிக்காவை பொறுப்பேற்றவுடன் லிபியா மீதான அதன் கொள்கையும் மாற்றமடைந்துள்ளது எனலாம். ஒருபுறம் ரஸ்யாவின் தலையீட்டை மட்டுப்படுத்தி, மறுபுறம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து மீது லிபியாவில் இராணுவ முன்னெடுப்புக்களை கைவிட்டு அரசியல் தீர்வு நோக்கிய பாதையை தேர்ந்தெடுப்பதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த பைடனின் நிர்வாகம் முயற்சிக்கலாம். இந்த பயணத்தில் துருக்கியை அமெரிக்க நிர்வாகம் ஓர் கூட்டணியாக கையாளலாம். அதற்கான முன்னறிப்பாகவே அனைவரது தலையீட்டையும் உடனடியாக நிறுத்தும்படியான அமெரிக்காவின் அறிவித்தல் வந்திருக்கிறது. அமெரிக்காவின் செய்மதிகளைப்போன்று இயங்கின்ற முஸ்லிம் அரசுகள் அமெரிக்காவின் எந்த நிர்வாகம் பொறுப்பை ஏற்றாலும் அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள்.