இந்தியாவின் முதல் 100 பில்லியனர்களின் சொத்துக்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிட்–19 தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கியதில் இருந்து ரூ. 12.97 ட்ரில்யனாக அதிகரித்துள்ளது. இந்த தொகை 138 மில்லியன் ஏழை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 94, 045 ஐ பகிர்ந்தளிப்பதற்கு போதுமானது.
உலக பொருளாதார மன்றத்தின் The World Economic Forum த்தின் ‘டாவோஸ் நிகழ்ச்சி நிரலின்‘ தொடக்க நாளில் வெளியிடப்பட்ட ‘சமத்துவமின்மை வைரஸ்‘ – ‘The Inequality Virus’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகின் 1,000 பணக்காரர்கள் கோவிட்–19 தொற்றுநோயால் ஏற்பட்ட தங்கள் இழப்புகளை வெறும் ஒன்பது மாதங்களுக்குள் மீட்டெடுத்துள்னர்; ஆனால் உலகின் ஏழ்மையானவர்கள் தொற்றுநோயின் பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீள ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் தொற்றுநோய் காலத்தின் போது முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் சம்பாதித்ததை ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளும், அவர் ஒரு நொடியில் சம்பாதித்ததை ஒரு தொழிலாளி சம்பாதிக்க மூன்று ஆண்டுகள் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
உண்மையில், தொற்றுநோய் காலத்தில் இந்தியாவின் முதல் 11 பில்லியனர்களின் செல்வத்தின் அதிகரிப்பு கிராமப்புற வேலைத் திட்டமான NREGS இன் 10 ஆண்டுகள் செலவிற்கு போதுமானது அல்லது சுகாதார அமைச்சகத்தின் 10 ஆண்டுகள் செலவிற்கு போதுமானது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
“நாங்கள் மிகப் பெரிய சமத்துவமின்மைக்கு சாட்சியாளர்களாக நிற்கிறோம். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஆழமான பிளவு வைரஸைப் போலவே கொடியது என்பதை நிரூபிக்கிறது“ என்று ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் கேப்ரியல் புச்சர் கூறினார்.
“தீவிர சமத்துவமின்மை தவிர்க்க முடியாதது அல்ல; மாறாக இது ஒர் கொள்கை தேர்வு. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வறுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், உலகை பாதுகாக்கவும் சமத்துவமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்களை உருவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்“ என்று புச்சர் கூறினார்.
இந்தியாவின் பணக்காரர்களில் 1 சதவிகிதத்திடம் நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவிகிதத்தினரைக் கொண்ட 953 மில்லியன் அடிமட்ட மக்கள் வைத்திருக்கும் செல்வத்தை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
இந்தியா கடந்த சில தசாப்தங்களாக பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது. ஆனால் அதன் துரித வளர்ச்சியை சற்று ஆழமாக ஆராய்கையில் அது ஒர் நிரந்தரமான வளரச்சியாகவோ அல்லது முறையான முன்னேற்றமாகவோ பார்க்க முடியாதுள்ளது. தொடர்ந்தேர்சியாக மாறி மாறி ஆட்சி செய்யும் பா.ஜ.க அல்லது காங்கிரஸ் ஐ சேர்ந்த ஆளும் வர்கங்கள், பொது மக்களின் பெயரில் நாட்டின் வளங்களை தமக்கும் தம் சார்ந்த செல்வந்த வர்கத்தினருக்கும் பயன் பெரும் வகையில் தொடர்ந்தும் கொள்கைகளை அமைத்து வருகின்றனர். முதலாளித்துவ கொள்கையின் அடிப்படையில் செய்யப்படும் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட ஒரு சிறு குழுவினருக்கு மட்டுமே அடிப்படையில் நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளன. இது முதலாளித்துவ தாராண்மை வாத கொள்கையை அமல்படுத்தும் நாடுகளில் காணப்படும் அடிப்படை குறைபாடாகும்.