இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராந்திய சக்திகளான துருக்கிக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகள், இஸ்தான்புல்லில் இடம்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையைத் தொடர்ந்து வரலாற்றில் காணாதவாறான முறுகல் நிலையை அடைந்திருந்தது.
எவ்வாறாயினும், இன்று அங்காராவுக்கும், ரியாத்துக்கும் இடையிலான உறவுகள் நல்லுறவுக்கு திரும்புவதற்கான விளிம்பில் நிற்கின்றன.
இந்த மாத தொடக்கத்தில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் Gulf Cooperation Council (GCC) கூட்டத்தில் சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் துருக்கியின் நட்பு நாடான கத்தாருடன் உறவை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டன.
இந்த நடவடிக்கையை துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் “மிகவும் நன்மை பயக்கும் விடயம்” என்று வரவேற்றார்.
மேலும் “வளைகுடா ஒத்துழைப்பில் எங்கள் நிலைப்பாடு மீண்டும் நிறுவப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இது வளைகுடா ஒத்துழைப்பை பலப்படுத்தும்” என்றும் கூறியிருந்தார்.
அங்காராவுக்கும், ரியாத்துக்கும் இடையில் சமரசம் செய்ய கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது.
“இந்த இரு நாடுகளும், இந்த சமரசத்தில் கத்தாரிற்கு ஒரு பங்கு இருப்பதாக கருதினால் சமரசம் செய்து வைக்க முடியும். இவ் இரு நாடுகளுக்கு இடையே நட்பு உறவு இருப்பது அனைவரதும் விரும்பமாகும்” என்று கட்டாரின் சிறப்பு தூதர் முத்லக் அல் கஹ்தானி கூறினார்.
GCC கூட்டத்திற்கு முன்பு துருக்கிக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகள் சுமுகமாவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நவம்பரில் ஜி–20 உச்சிமாநாட்டின் தொடக்கத்தில், எர்டோகனும் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்ஸீஸும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டனர்.
இரு தலைவர்களும் “இருதரப்பு உறவுகள் மேம்படுத்தப்படுவதற்கும், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கும் பேச்சுவார்த்தைக்கான சந்தர்பங்களை திறந்து வைப்பதற்கு ஒப்புக் கொண்டனர்” என்று துருக்கிய ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நைஜரில் நடந்த ஒர் இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் சந்தித்து கொண்டனர். அதன் பின்னர் துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லட் கவ்ஸொக்லு இக் கூட்டாண்மை “எங்கள் நாடுகளுக்கு மட்டுமல்ல, நமது முழு பிராந்தியத்திற்கும் பயனளிக்கும்” என்று ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார்.
குறிப்பு:
மேற்கத்திய எஜமானர்கள் வகுத்து கொடுக்கும் அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக, சகோதர முஸ்லிம் நாடுகளுடனான உறவை முறித்துக் கொண்டு இஸ்ரேலுடன் தங்களது உறவை இயல்பாக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் மனமுவந்து செயல்பட்டன. தற்போதுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதியின் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தனது முன்னோர்களின் நிலைப்பாடுகளை விடவும் மிகக் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க போவாதாக அறிவித்திருந்தார். தற்போதுள்ள புதிய அமெரிக்க நிர்வாகம் சந்தோஷப்படும் வகையில் முஸ்லிம் நாடுகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.