‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஒரு போலி கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆட்சிக்கு வந்த ராஜபக்ச தரப்பு, தற்போது முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தை தனது பௌத்த தீவிரவாத கைக்கூலிகளிடம் கையளித்து இருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்களின் உடலங்களை வைத்து அரசியல் செய்கின்ற ராஜபக்ச அரசு, தற்போது முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளையும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்ற ஒரு சூட்சுமத்தை கையில் எடுத்திருக்கிறது.
அவதானம் தேவை
இந்த இடத்தில் முஸ்லிம்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. அதாவது காதி நீதிமன்றங்களிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டக்கோவையிலும் திருத்தங்களைக் கொண்டுவரத் தீவிரமாக ஈடுபட்ட பெண்ணியல் வாதிகளும், பெண்கள் செயற்பாட்டாளர்களும் இன்றுள்ள கள நிலவரத்தை உணராமல், தாம் சில காலத்துக்கு முன்னால் காட்டிய அதே தீவிரத்துடன் களம் இறங்குவார்களானால், அது முஸ்லிம்களிடம் சொற்பமாக மிஞ்சி இருக்கும் உரிமைகளுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் வேலையாக அமைந்துவிடும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகளை அவர்கள் அடையக்கூடாது என்ற கரிசனை நியாயமானது என்றாலும், ஒட்டுமொத்த காதி நீதிமற்ற ஏற்பாடுகளுக்கே எதிராக தீய சக்திகள் செயற்படுகின்ற தருணத்தில் நாம் இவ்விடயத்தை மிகக்கவனமாகக் கையாள வேண்டும்.
ஜனநாயகத்தின் பலகீனம்
சடவாத ஜனநாயக அரசியல் முறைமை நடைமுறையில் உள்ள நாடுகளில், எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற சனக் குழுக்கள், அவர்களின் மத மற்றும் பாரம்பரிய கலாச்சார நடைமுறைகளை பாதுகாக்கக்கூடிய தனியார் சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஜனநாயக வாழ்வியல் ஒழுங்கு இருக்கிறது. இதுவோர் ஜனநாயகத்தின் பாரிய பலவீனமாகும் என்பதை பலர் உணர்வதில்லை.
ஏனென்றால் ஜனநாயகம் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட சட்டமியற்றும் முறைமை என்றதால் ‘சிறுபான்மையினர்’ என்கின்ற, புறக்கணிப்புக்கும், ஒடுக்கு முறைக்கும் உள்ளாகக் கூடிய ஒரு தரப்பினரை அது இயல்பிலேயே ஏற்படுத்தி விடுகின்றது. மேலும் பெரும்பான்மை மக்கள் தமக்கு சார்பான விதிமுறைகளை நாட்டின் சட்டமாக இயற்றி விடும்பொழுது, ஏனைய மக்கள் அதற்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்தை அது ஏற்படுத்தி விடுகின்றது. அதனால்தான் அதனை மூடி மறைக்கின்ற ஒரு செயற்பாடாக அல்லது அந்த ஓட்டைகளை அடைக்க முற்படும் ஒரு செயற்பாடாக சிறுபான்மையினருக்கான பிரத்தியேகமான பாதுகாப்பு நடைமுறைகளை ஜனநாயகம் தொடர்ந்து பேண வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருக்கிறது. அந்த வகையில்தான் சிறுபான்மை மக்களுடைய குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான நம்பிக்கைகள், வழக்காறுகள் போன்றவற்றை பேணுவதற்கான சில சட்டப் பாதுகாப்புகளை பிரத்தியேகமாக நடைமுறைப்படுத்துவதற்கும், அது தொடர்பான நீதிமன்றங்களை இயங்குவதற்கும் அது முயல்கிறது.
இலங்கையில் ஜனநாயகம்
இலங்கையில் ஜனநாயகம் அல்லது இந்தியாவில் ஜனநாயகம் என்று பார்க்கும்பொழுது கூட அது இயல்பாக சமூகத்திலிருந்து தோன்றியதல்ல. மாறாக காலனித்துவத்தின் வருகையுடன் குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ வருகையுடன் இந்த நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு முறைமை தான் ஜனநாயகம். இலங்கையில் 70 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்களாக இருக்கின்ற நிலையில், தீர்மானம் மேற்கொள்வதற்கு 51 வீதமானவர்கள் மாத்திரம் போதுமானதாக இருக்கின்ற ஒரு ஜனநாயக அரசியல் சூழலில், சிங்கள மக்களுக்கு சார்பான அல்லது பெரும்பான்மையினருக்கு சார்பான சட்ட ஏற்பாடுகள் தான் யதார்த்தமாக பொதுவாழ்வில் இருக்கும். எனவே சிறுபான்மையினர் நிலை என்ன என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? அதற்கான ஒரு சலுகையாகத்தான் தனியார் சட்டங்களை பிரித்தானியா ஏற்பாடு செய்தது. அரசியல் மற்றும் பொது வாழ்வு விடயங்களில் நாட்டின் பொதுச் சட்டம் நடைமுறையில் இருக்கின்ற அதேநேரம், தனிப்பட்ட வாழ்க்கைக்குரிய திருமணம், விவாகரத்து, பிள்ளைப் பராமரிப்பு, சொத்து பங்கீடு போன்ற விடயங்களில் அவரவர் மத நம்பிக்கை சார்ந்த தீர்வுகளையும், தீர்மானங்களையும் எடுப்பதற்காக சட்டக்கோவைகளையும், நீதிமன்றங்களையும் அமைப்பதற்கு அது தீர்மானித்தது. அவை அதனுடைய தடங்கலற்ற நிர்வாக தேவைக்கும், ஆட்சிக்கும் தேவையாக இருந்தது.
இலங்கை ஒரு குடியரசாகவும், பல்லினத்தன்மை கொண்ட, பல மக்கள் பிரிவுகளைக் கொண்ட ஒரு சமூகமாக இருக்கின்ற வரையில், அங்கே ஜனநாயகமும், ஜனநாயகம் தழுவிய அரசியலமைப்பும் நடைமுறையில் இருக்கின்ற நிலையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற வீம்பு வாதத்துடன் நாட்டில் செயற்படுவது யதார்த்தத்திற்கு புறம்பானது. எனினும் பெரும்பான்மை மக்களை தீவிர ஜனரஞ்சக சிந்தனைக்கு பின்னால் அணி திரட்டுவதற்காக, சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக இந்த குறுகிய நிலைப்பாடுகளை அரசும், அரசு சார்ந்த தீவிரவாத குழுக்களும் கையிலெடுத்து இருக்கின்றன.
பல்வேறு சமூகங்களை இஸ்லாம் எவ்வாறு ஒன்றாக ஆள்கின்றது?
ஜனநாயகத்தை கைவிடாத நிலையில், ஜனநாயகத்துக்கு உரிய பலஹீனமான அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த முடியாது. இந்த இடத்தில் தான் மனிதன் தனது இயலாமையை ஒப்புக் கொள்கின்றான். சட்டமியற்றும் அதிகாரத்தை இதனால்தான் மனிதனின் கையில் இறைவன் வழங்கவில்லை. மனிதன் சட்டம் இயற்றும் போது அது முரண்பாடுகள் நிறைந்ததாகவும், பக்கச்சார்பானதாகவும், நிலையற்றதாகவும், அவரவர் சூழலாலும், வாழ்க்கை அனுபங்களாலும் பாதிப்படையக் கூடியதாக அமைந்து விடுவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால் அல்லாஹ்வினுடைய சட்டத்தைப் பொருத்த மட்டில் அவன் மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலோ, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அடிப்படையிலோ, பக்கச்சார்பாகவோ அவற்றை மனிதனுக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. அல்லாஹ்வின் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு தேசத்தில் அதன் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களின் இனமோ, மதமோ, எண்ணிக்கையோ கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அந் நாட்டின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர்களை இன, மத ரீதியான பிளவு படுத்துவதன் அடிப்படைக்கு மாற்றமாக, மனிதனைப் படைத்த இறைவன் என்ற அடிப்படையில் மனிதனின் பலம், பலவீனங்களை புரிந்தவன் என்ற அடிப்படையில், அவனது நலன்கள் எவை என்பதை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் அவன் எல்லா காலங்களுக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டக் கோவையை தயாரிப்பதற்கான வழிகாட்டியை மனிதனின் கையில் இறைவேதமாக வழங்கியிருக்கிறான்.
இஸ்லாமிய அரசுக்குள் வாழ்கின்ற ‘திம்மிகள்’ என அழைக்கப்படும் முஸ்லிம் அல்லாத சமூகங்கள் – அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழ்ந்தாலும் சரி, பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் சரி, அவரவருக்குரிய தனியார் சட்டங்களை எவ்வித பாகுபாடுமின்றி பின்பற்றும் சுதந்திரமான வாய்ப்பை இஸ்லாம் வழங்குகின்றது. இது ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கோ, அல்லது பெரும்பான்மை வாக்கெடுப்புக்கோ உரித்தான ஓர் விடயமல்ல. மாற்றமாக என்றும் நிலையாக நீடித்து நிலைக்கும், இஸ்லாமிய ஷரீஆவினால் பாதுகாக்கப்பட்ட திம்மிகளுக்கான உரிமையாகும். எனவே அவற்றில் யாரும் கை வைத்து விட முடியாது.
அதனால்தான் மதீனாவில் ஒரு திம்மி பாதிக்கப்பட்டால் அது தன்னையே தாக்குவதற்கு சமமானது என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி அலைஹிவஸல்லம் கூறினார்கள். ஒரு ஹதீஸ் இது தொடர்பாக சொல்லும்பொழுது “ஒரு திம்மிக்கு இம்சை செய்பவன் எனக்கு இம்சை செய்கிறான்” என்று ரஸூல் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னதாகப் பதியப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியா ஆட்சிக்கு உட்படுத்தப்படாத எந்த ஒரு இடத்திலும் மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த முடியாது. குறிப்பாக பலகீனமான சிறுபான்மை சமூகங்கள் ஒடுக்கப்படாமல் வாழக்கூடிய சூழல் அங்கு மாத்திரம்தான் உறுதிப்படுத்தப்படும் என்பதுதான் உண்மை என்பதை புகழ்பெற்ற எந்த வரலாற்று ஆசிரியர்களும் மறுக்க மாட்டார்கள்.
எம்மால் என்ன செய்ய முடியும்?
சரி தற்போது எமது உள்நாட்டு நிலவரத்திற்கு வந்தால் முஸ்லிம்கள் தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. அதற்கு முதலிலேயே ஒரு அடிப்படையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- முஸ்லிம்கள் இஸ்லாம் அல்லாத ஒரு சூழலில் வாழ்கின்ற பொழுது அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை என்பது இயல்பாகவே ஏற்படும் என்பதை நாம் வெறுத்தாலும் ஏற்றுக்கொண்டு எமது மனதைத் தயார்படுத்திக் கொள்வது அதில் முதல் கட்டமாகும். இந்நிலை இலங்கைக்கு மாத்திரமல்ல, இன்று உலகம் பூராகவும் இஸ்லாமிய அரசுக்குள் வாழாத முஸ்லிம்கள், ஏதோவொரு வகையில் உணரக்கூடிய ஒரு யதார்த்தமாகும்.
- ஆகவே முஸ்லிம் சமூகத்துக்கு ஒவ்வாத இந்த சூழல்களில், முஸ்லிம்கள் தங்களுடைய ஈமானையும், அடையாளத்தையும், விழுமியங்களையும் பாதுகாக்க தம்மால் இயன்றவரை முயற்சி செய்து கொண்டு பொறுமையுடன் தங்களுடைய வாழ்க்கையை நீடிக்கவேண்டும் என்பதே முக்கியமாகும்.
- அதே சந்தர்ப்பத்தில் இஸ்லாத்துக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுத்து, இஸ்லாத்தை இந்த உலகத்தில் நிலைநாட்டுவதற்கான பணியிலேயே முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதுதான் முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வும், இத்தகைய நடைமுறை பிரச்சனைகளை அடிக்கடி முகம்கொடுப்பதை தவிர்ப்பதற்குமான வழிமுறையாகவும் அமையும்.
- அதற்கிடையில் எமது அன்றாட வாழ்வை இலங்கையிலே தொடர்வதற்கு எமது குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஷரீஆவின் நடைமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு தேவையான சட்டப்பாதுகாப்புகளை எப்பாடு பட்டாவது நாம் உறுதிப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அதற்கு இத்தகைய தீவிரமான காலப்பகுதிகளை நிதானமான முறையில் நாம் கடந்து செல்ல வேண்டும்.
- இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற அரசியலமைப்பின்படி இலங்கையிலே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு தனித்துவமான தனியார் சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கு உரிய சட்டரீதியான நிலைப்பாடுகளை முஸ்லிம்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
- அதற்கு முஸ்லிம்கள் மத்தியில் சிற்சிறு சட்டச் சர்ச்சைகளை தூக்கிப்பிடிக்கும் நிலைப்பாடு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எம்மை ஒருவரோடு மோதவிட்டு எம் விரல்களைக் கொண்டே எமது கண்களுக்குள் குத்துகின்ற வாய்ப்பை நாம் எதிரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடக்கூடாது. தீவிர இனவாதக்கும்மல் தனியார் நீதிமன்றங்களோ, தனியார் சட்டங்களோ ஒட்டுமொத்தமாகத் தேவை இல்லை என்ற வாதத்தை முன்வைத்து இயங்குவதால் தற்போது எமது முன்னுரிமையாக இருக்க வேண்டியது, ஏற்கனவே இருக்கின்ற குறைபாடுகள் சகிதம் அவற்றைப் பாதுகாப்பதாகும். தீவிர போக்கற்ற ஓர் ஆட்சிச் சூழல் வருகின்ற போது நாம் விரும்புகின்ற சில மாற்றங்களை அவற்றுள் ஏற்படுத்துவதற்கு திரும்பவும் முயற்சிக்கலாம்.
- மேலும் மேற்குலக பெண்ணியல் சிந்தனையின் ஆதிக்கத்தில் இந்தப்பிரச்சினையை கையாளுகின்ற ஒரு சூழல் இலங்கையில் தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்நிலை எவ்வகையிலும் பெண்கள் சமூகத்துக்கும், குடும்பங்களுக்கும், எமது தூய இஸ்லாமிய நிலைப்பாடுகளுக்கும் சாதகமானது அல்ல. பக்கச்சார்பற்ற நடைமுறை உலக அனுபங்களும், கற்கைகளும் இந்த உண்மையை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தும். எனவே எமது தனியார் சட்ட விவகாரம் நூற்றுக்கு நூறு வீதம் தூய இஸ்லாமிய ஷரிஆவின் ஒளியில் எத்தகைய திரிபுபடுத்தல்களும், நிர்பந்தங்களும் இன்றி திருத்தி அமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்வதற்குரிய பொருத்தமான ஒரு காலச்சூழல் தற்போது இருப்பதாக நாம் கருதவில்லை.
- தனியார் சட்ட ஏற்பாடுகளைப் பொருத்தமட்டில் நாட்டில் கணிசமான மக்களும், சமூகக்குழுக்களும் அந்த ஏற்பாடுகளை காலங் காலமாக அனுபவித்து வருபவர்கள் என்ற அடிப்படையிலும், அதன் தேவையை உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலும் அவ்வாறான தனியார் சட்ட ஒழுங்குகள் நாட்டில் தொடர்ந்தும் அனுமதிக்கப்படுவதை விரும்புவார்கள். எனவே தனியார் நீதிமன்ற ஒழுங்குகளுக்கு எதிரான செயற்பாடுகளும், பிரச்சாரங்களும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசின் மற்றும்மொரு நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும், பொதுவான மக்களின் நிலைப்பாடுகள் வேறு ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே அவற்றை சரியாக புரிந்து கொண்டு முஸ்லிம்களுடைய இந்த உரிமை போராட்டத்தில் ஏனைய மக்களையும், குறிப்பாக சிங்கள மக்களில் இருக்கின்ற முற்போக்கு சக்திகளையும் இணைத்துக் கொண்டு செயல்படுவதில் எத்தகைய தவறும் இல்லை. அது காலத்திற்கு தேவையானதும் கூட.
இறுதியாக,
சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நிச்சயமாக மூஃமின்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் ஆணித் தரமாக இருக்கவேண்டும். அந்த நிலைப்பாட்டில் நாம் ஓர் இம்மியளவு கூட விலகிவிடக் கூடாது. அதே நேரத்தில் அந்த நம்பிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு அதற்கு தேவையான வேலைத்திட்டத்தில் ஈடுபடாதவர்களாக நாங்கள் இருந்துவிடக்கூடாது.
எங்களுடைய சமூகத்தின் நிரந்தர தீர்வு இஸ்லாமிய ஷரிஆ நிலைகொண்டுள்ள பூமியில் நாங்கள் வாழ்வதில்தான் இருக்கிறது. குறைந்தபட்சம் அந்த இஸ்லாமிய அரசால் ஒப்பந்த அடிப்படையில் ஏனைய நாடுகளில் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்வதில்தான் இருக்கிறது. இந்த அடிப்படை உண்மையை இலங்கை முஸ்லிம் சமூகம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சடவாத ஜனநாயகத்தின் பலகீனத்தை இன்று உலகமே மிகத் தெளிவாக சான்று பகர்ந்து வருகின்ற நிலையில் ஜனநாயகத்தின் ஊடாக எமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் தொடர்ந்து வாழ்வது முஸ்லீம்கள் தமது மார்க்கத்தையும் , யதார்த்தத்தையும் புறக்கணிக்கின்ற அறியாமையில் தொடர்ந்து வாழ்வதையே குறிக்கும். எனவே இஸ்லாத்தை மாற்றீடாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ள நாங்கள், ஏனைய மக்களுக்கும் அதனை சிறந்த மாற்றீடாக முன்வைப்பதற்கான அறிவார்ந்த கருத்தாடல்களை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பங்களாக இச்சூழல்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொரு நெருக்கடிகளும் பல வாய்ப்புகளை வழங்குகின்றன. அவை இஸ்லாத்தை முன்வைப்பதற்கான வாய்ப்புக்களாக அமைந்தால் எமக்கு அதை விட வேறு என்ன வேண்டும்?