சுவிஸ் வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் பொது இடங்களில் புர்காக்கள் மற்றும் நிகாப் போன்ற முழு முகத்திரைகளை அணிவதற்கு எதிராக நாடு தழுவிய தடையை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள் என்று வெள்ளிக்கிழமை வெளியான ஒர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
Tamedia கருத்துக் கணிப்பின்படி இத்தடைக்கு தகுதிவாய்ந்த 15,000 வாக்காளர்களில், 63 சதவீதமானோர் ‘ஆம்’ என்று வாக்களிப்பதாகக் கூறினர். அதாவது “புர்கா தடை” என்று அழைக்கப்படுவது குறித்த வரவிருக்கும் பொதுஜன வாக்கெடுப்பில் ‘ஆம்’ என்று வாக்களிக்கப்போவதாக டேஜஸ் அன்ஸிகர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
நாட்டின் நேரடி ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 7 ம் தேதி சுவிஸ் மக்கள் பொதுவில் முகத்தை முழுவதுமாக மறைப்பதை தடை செய்ய விரும்புகிறார்களா என்பது குறித்து வாக்களிக்க உள்ளனர்.
முன்மொழியப்பட்ட தடை, முஸ்லீம் முக்காடுகளை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை, “பொதுவில் யாரும் தங்கள் முகத்தை மறைக்க கூடாது, அல்லது பொதுமக்கள் அணுகக்கூடிய பகுதிகளில் அல்லது அனைவருக்கும் பொதுவான சேவைகளை அணுகக்கூடிய பகுதிகளில்“ என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சுவிஸ் அரசாங்கத்தால் எதிர்க்கப்பட்ட இந்த திட்டம், சில முஸ்லீம் பெண்கள் அணியும் நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் பிற முக்காடுகளை குறிவைப்பதாக அப்பட்டமாக தெரிகிறது.
இத் தடை “வழிபாட்டுத் தளங்கள்” மற்றும் “சுகாதார காரணங்கள்” உட்பட சில விதிவிலக்குகளை முன்மொழிகிறது.
இந்த திட்டத்தின் பின்னால் உள்ள ‘Egerkinger Komitee’ குழுவில் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் Swiss People’s Party (SVP) உறுப்பினர்களையும் இணைத்து கொண்டுள்ளது. சில இடது சாரி அரசியல்வாதிகளும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் இப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர்.
ஆனால் இந்த வாரம் சுவிஸ் அரசாங்கம் நாடு தழுவிய அரசியலமைப்பு தடைக்கு எதிராக எச்சரித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை மோசமான யோசனை என்று கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் முழு முகத்திரைகளை அணியும் பெண்கள் அரிதாகவே காணப்படுவதாகவும், அத்தகைய முகத்திரைகளை அணிவது சுற்றுலா பயணிகளே என்று சுவிஸ் நீதி அமைச்சர் கரின் கெல்லர்–சுட்டர் வலியுறுத்தி கூறினார்.
2009 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மசூதிகளில் புதிய மினரத்களை நிர்மாணிப்பதை தடை செய்வதற்கான நடவடிக்கையின் பின்னணியில் “எகெர்கிங்கர் கோமிட்டி” இருந்தது. இது கிட்டத்தட்ட 60 சதவீத வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
2009 முன்மொழிவின் ஆதரவாளர்கள் மினரத்கள் சுவிஸ் மரபுகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானது என்றே தங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.