கடந்த வியாழக்கிழமை மத்திய பாக்தாத்திலுள்ள நெரிசலான சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ. எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) குழு பொறுப்பேற்றுள்ளது. இத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதோடு 110 பேர் காயமடைந்துள்ளனர்.
முதல் தாக்குதலை நடத்தியவர் தலைநகரின் தயரன் சதுக்கத்தில் உள்ள நெரிசலான சந்தையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி ஒரு கூட்டத்தை தன் வசம் ஈர்த்து, பின்னர் அவரது குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அதிகமான மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டாவது தற்கொலை குண்டுதாரி அவரது குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
2018 ஜனவரியில் இருந்து பாக்தாத்தில் இடம் பெற்ற முதல் இரட்டை குண்டுவெடிப்பு இதுவாகும், வியாழக்கிழமை தாக்கப்பட்ட அதே சதுக்கத்தில் 2018 ஜனவரியில் 35 பேர் கொல்லப்பட்டதுடன் 90 பேர் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருந்த COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், பாவித்த ஆடைகள் விற்கப்படுகின்ற திறந்தவெளி சந்தையில் இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
நள்ளிரவுக்குப் பிறகு, ஐ.எஸ்.ஐ.எல் தனது இணைய பிரச்சார சேனலில் தாக்குதலுக்கான பொறுப்பை கோரியுள்ளது.
ஈராக்கின் வெளியுறவு மந்திரி ஃபுவாட் ஹுசைன் ஐ.எஸ்.ஐ.எல் இன்னும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தீவிரவாதத்தை எதிர் கொள்ள பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு நமக்கு தேவை என்றும் கூறினார்.
“டாயிஷின் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் எங்கள் மக்கள் தங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளனர். பாப் அல்–ஷர்கியில் நடந்த கொடூர குற்றச் செயலானது பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நம் மக்களிடையே வாழ்வதற்கான இணையற்ற தைரியத்தை கொடுத்துள்ளது” என்று ஈராக்கின் பிரதமர் முஸ்தபா அல் காதிமி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு ஈராக்கியர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதம மந்திரி அல்–காதிமி பொதுத் தேர்தலை கிட்டத்தட்ட ஒரு வருடம் முற்படுத்தி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடை பெறுவதற்கு நிர்ணயித்துள்ளார்.
ஆனால் வாக்காளர்களையும் புதிய கட்சிகளையும் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அதிக அவகாசம் அளிக்க, தேர்தலை அக்டோபருக்கு மாற்றியமைப்பது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு:
ட்ரம்ப் வெளிநாட்டு யுத்தங்களில் ஒப்பீட்டளவில் பெரிய மொகம் கொண்டவராக இருக்கவில்லை. நீண்ட காலமாக இழுபட்டு வந்த ஆப்கானிய மற்றும் ஈராக் யுத்தங்களில் தமது பொருளாதாரம் விரயமாவதற்கு எதிரான நிலைப்பாட்டை ட்ரம்ப் அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ட்ரம்ப் ஈராக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் 5200 இருந்த அமெரிக்க துருப்புகளை 2500 ஆக குறைத்தார். டொனால்ட் ட்ரம்பின் வெளிவிவகார கொள்கையும் ஜோ பைய்டனின் வெளிவிவகார கொள்கையும் மாறுபட்டவை. ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்று ஓரிரு நாட்கள் கடப்பதற்கு முன்னரே இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதல் அவரின் வெளி விவகார கொள்கை மீண்டும் பராக் ஒபாமா காலத்து நிலைப்பாட்டுக்கு மீண்டு வந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. ஒரே நேரத்தில் 7 வெளிநாட்டு யுத்தங்களை நடாத்தி வந்த ஒபாமா-பைடன் ஆட்சிக்காலம் உங்களுக்கு ஞாபத்தில் நிலைத்து இருக்கலாம். இனிமேல் என்ன, புதியதொரு யுத்தத்தையோ, அல்லது நிலவுகின்ற போர்முனைகளை பலப்படுத்துவதிலோ இனிவரும் ஜோ பைடனின் காலப்பகுதி மையம் கொள்ளலாம் என்பதை இந்தத் தாக்குதல் எமக்கு புலப்படுத்துகிறது. தீயதில் குறைந்தது என்று ட்ரம்பை விரட்டி பைடனை வரவேற்று, ஜனநாயகச் சாக்கடைக்குள் சாத்திரம் பார்க்கும் இஸ்லாமிய புத்திஜீவத்துவ நிபுணர்களுக்கு இதிலும் படிப்பினைகள் உண்டு.