நபி ﷺ : “தஜ்ஜால் (ஆண்டிகிறிஸ்ட்) சொல்வதைக் கேட்பவர் அவரிடமிருந்து வெகுதூரம் செல்லட்டும்; ஏனென்றால் அவன் ஒரு விசுவாசி என்று நினைத்து அவனிடம் வருகின்ற ஒரு மனிதன் அவனது குழப்பமான கருத்துக்களால் தூண்டப்பட்டு அவனைப் பின்தொடர்வார் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன்.” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அபு தாவூத்)
அல்லாஹ்வை நம்புகிற எவரும் தஜ்ஜாலைப் பின்பற்றுவது எப்படி என்று நாம் ஆச்சரியப்படலாம். பதில் இந்த ஹதீஸில் உள்ளது; அவனைப் பின்பற்றுபவர்களில் பலர் தங்களை விசுவாசிகளாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள்; அவர்கள் ‘சுபுஹாத்’ – (குழப்பமான கருத்துக்கள், சந்தேகங்கள்,) ஆதாரமற்ற அனுமானங்களால் ஏமாற்றப்படுவார்கள். இது அவர்களை நேரான பாதையிலிருந்து வழி தவரச்செய்து நரகத்தின் ஆழத்திற்கு கொண்டு செல்லும். ஆண்டிகிறிஸ்டைப் பின்பற்றுவது நீதியின் மற்றும் நம்பிக்கையின் பாதை என்று அவர்கள் நினைப்பார்கள்; உண்மையில் அது நேர்மாறாக இருக்கும்.
மேலும், நபி (ஸல்) தஜ்ஜாலில் இருந்து சுபுஹாத் வரும் என்று கூறுகிறார். இந்த (சந்தேகமான) யோசனைகளை தஜ்ஜால் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவான். சில கருத்துக்கள் மற்றும் வாதங்களால் நாமும் குழப்பமடையக் கூடியவர்களே. அதன் சதிவலைகள் எம்மையும் சரித்து விடலாம் என்பது குறித்த பொறுப்புணர்ச்சி எமக்குத் தேவை என்பதை இந்த ஹதீஸ் நமக்குச் சொல்கிறது. யோசனைகள் எப்போதும் நடுநிலையானவை அல்ல; யோசனைகள் சில இஸ்லாமிய கலாசாலைகளுக்குள்ளும், மேற்குலக பல்கலைக்கழக அரங்குகளுக்குள்ளும் மட்டுமே பொருந்தக்கூடிய கல்வி மழுப்பல்கள் மாத்திரம் அல்ல. பல யோசனைகள் விஷத்தன்மை வாய்ந்தவை; மேலும் விழிப்புடன் இல்லாவிட்டால் மிகவும் நல்ல எண்ணமுள்ள விசுவாசிகளில் கூட பேரழிவு தரக்கூடிய குழப்பத்தை அவை ஏற்படுத்தலாம்.
சரி, இந்த குழப்பங்களிலிருந்து ஒருவர் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்?
இந்த ஹதீஸ் குறிப்பிடுவதுபோல ஆழமான விழிப்புணர்வே அதற்குரிய முதல் படியாகும். அதே போல் தஜ்ஜாலிலிருந்து தப்பி ஓடுவதும் அதற்குரிய முக்கிய தீர்வாகும். மேலும் சூரத் அல் கஹ்ஃப்பை மனப்பாடம் செய்து பாராயணம் செய்பவருக்கு அது பாதுகாப்பாக இருக்கும் என்றும் நபி(ஸல்) சொன்னார்கள். மேலும் சில வழிகாட்டல்களையும் உலமாக்கள் சொல்லித் தருகிறார்கள்.
ஷுபுஹாத்தைப் பொறுத்தவரை, அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நாங்கள் அதிகளவில் முயற்சிக்க வேண்டும். அதற்கு ஜமாஅத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வதே அடிப்படைத் தீர்வாகும். ‘ஜமாஅ’ என்பது இன்றுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களைக் குறிக்காது. மாறாக அதன் பொருள் காலங்காலமாக மார்க்கத்தை பாதுகாத்து வந்த பெரும்பான்மையான உலமாக்களைக் குறிக்கும்.
நவீன கால முஸ்லீம் பேச்சாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இன்று “இந்த விடயத்தில் நான்கு இமாம்களின் பார்வையும் கருத்தும் இவ்வாறு இருக்கின்றன; மற்றும் முன்னை நாள் அறிஞர்களின் ஒருமித்த கருத்துக்கள் இதுவாக அமைகின்றன; ஆனால் அவர்கள் இதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் இது எங்கள் காலத்துக்குரிய சரியான பார்வை அல்ல. எங்கள் காலத்துக்குரிய சரியான பார்வை ‘இதுவாகும்’.” என்று கூறத்தளைப்பட்டுள்ளனர்.
இவ்வாறு யாராவது சொல்ல ஆரம்பித்தால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களிடமிருந்து ஓட்டம் பிடித்து விடுங்கள். ஏனெனில் தனியான ஆட்டைத்தான் ஓநாய் வேட்டையாடுகிறது. இதுதான் சுபுஹாத்தின் தனிச்சிறப்பு. ஆண்டிகிறிஸ்டின் அழைப்பிலிருந்து உங்கள் உள்ளம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், முழு உம்மத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்களின் ஒருமித்த(இஜ்மா), நிறுவப்பட்ட நிலைப்பாடுகளை பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அவற்றைப் பற்றிப் பிடிப்பது நெருப்பை உள்ளங்கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாக இருந்தாலும் கூட.
அந்த மார்க்க நிலைப்பாடுகளை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் அல்லது அவை உங்களுக்கு சிரமமானதாகவோ அல்லது பார்வைக்கு அசௌகரிகமானதாகவே தென்பட்டாலும் சரியே. உங்களில் ஏற்படுகின்ற அத்தகைய மனச்சஞ்சலங்களே நீங்கள் இன்னும் அவற்றை இறுக்கமாக பற்றிக்கொள்ள வேண்டியதற்கான அறிகுறிகளாகும். மாற்று வழிகளைத் தேடி பாதாளத்துக்குள் இடறி விடாதீர்கள். “நவீனம்” என்ற உணர்வுகளுக்கு பின்னால் இழுபட்டு உங்களுக்கு சுவாரஸ்யமான தீர்வொன்றைத் தேடி அலையாதீர்கள். இக்கால மக்களில் பெரும்பான்மையானவர்கள் மரியாதைக்குரியதாகக் கருதுகின்ற ஒரு நிலைப்பாட்டை சரியாகத்தான் இருக்கும் என்று அளவிட்டு அதன் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு அலையாதீர்கள். அதுதான் சுபுஹாத் உடைய காலங்களில் நாம் அழிக்கப்படுவதற்கான தெளிவான பாதை அமைந்து விடும்.
அதிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக…
குறிப்பு: இந்த அறிவுரை நாம் “நம் சிந்தனையை மூடி மூட்டைகட்டி வைத்துவிட்டு” (உண்மையான) பகுத்தறிவு சிந்தனையிலிருந்து விலகுவதாக அர்த்தமல்ல. ஆனால் நாம் ஒரு பாதுகாப்பு வலையை நம்மைச் சூழ வைத்திருக்க வேண்டும். பகுத்தறிவு சிந்தனை என்று நாம் கருதுவது பெரும்பான்மையான அறிஞர்கள் பராமரித்தவற்றிலிருந்து மாறுபடும் கருத்துக்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்றால், அது பகுத்தறிவு சிந்தனை அல்ல.
ஏனென்றால், நம் இஸ்லாமியப் பாரம்பரியத்தில் தோன்றிய மாபெரும் உலமாக்களை விட நாம் பகுத்தறிவுடையவர்கள் அல்ல. நடைமுறை வார்த்தையில் சாதாரணமாகச் சொல்வதானால் அவர்களின் புரிதல், நுண்ணறிவு மற்றும் “சிந்தனை சக்தி” ஆகியவற்றுக்கு அருகில் கூட நாங்கள் நெருங்கவில்லை (மிகச் சொற்பமான ஒரு சில விதிவிலக்குகள் தவிர). இந்த யதார்த்தத்துக்கு மாற்றமாக நீங்கள் சிந்தித்தால் அது வெறும் மாயையே தவிர வேறில்லை.
ஆகவே, நம்முடைய முன்னோர்களால் தெளிவுபடுத்தப்பட்டபடி ஷரீஆவை இன்னும் உறுதியாகப் கடைப்பிடிக்க உதவும் சில சிந்தனை அல்லது சொற்பொழிவுகள் இருந்தால், அது மிகச் சிறந்தது; எங்களுக்கு அவை இன்னும் தேவை. ஆனால் அவர்களிடமிருந்தும் அவர்களின் கருத்துக்களிலிருந்தும் நம்மைத் தூர விலக்கும் சிந்தனை மற்றும் தவறான பகுத்தறிவுப் பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானதாகும். அவற்றிலிருந்து விலகி இருப்பதே எமக்கு உரித்தானதாகும்.