புதிய அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு நாளில், புகழ்பெற்ற இஸ்லாமியத் தலைவர் ஒருவரது பதவியேற்பு உரையின் அழகிய சொற்களைப் பிரதிபலிப்பது பொருத்தமானது என நினைக்கிறேன்.
நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் இரண்டாவது கலீஃபா உமர் பின் அல் கத்தாப்(ரழி) என்கின்ற மாபெரும் தலைவர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பின்வருபவை அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் உதிர்த்த வார்த்தைகளில் சில பகுதிகள். அவை வெறும் வார்த்தைகள் அல்ல; அவரது ஒரு தசாப்த கால ஆட்சி முழுதும் வாழ்ந்த வார்த்தைகள்.
கலீஃபாவாக பதவியேற்ற பின்னர் உமர்(ரழி) அவர்கள் மஸ்ஜித் அந்நபவியிலே நபி (ஸல்) அவர்களின் மசூதியிலே கூடியிருந்த முஸ்லிம்களை நோக்கி பின்வருமாறு உரையாற்றினார்:
“அல்லாஹ்(சுபு)வின் விசுவாசிகளே! அபூபக்கர் எங்களிடையே இல்லை. சுமார் இரண்டு வருடங்கள் எங்களை வழிநடத்திய பின்னர், அவர் தனது படைப்பாளனிடம் திரும்பி விட்டார்.
இஸ்லாமிய அரசு எனும் கப்பலை புயல்கள் சூழ்ந்த கடலின் வழியே வழி நடாத்தி வெற்றிகரமாக கரை சேர்த்த திருப்த்தியுடன் அவர் சென்று இருக்கிறார். அவர் முர்த்தத்களுக்கு எதிரான யுத்தத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து அவரால், அல்ஹம்துலில்லாஹ் அரேபியாவில் இஸ்லாம் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இஸ்லாம் தற்போது வீறுநடை போடுகிறது. நாங்கள் அல்லாஹ்(சுபு)வின் பாதையில் ஜிஹாதை முன்னெடுத்து தற்போது வலிமைமிக்க பைசாந்திய மற்றும் பாரசீக சாம்ராஜ்ஜியங்களுக்கு எதிராக அதனை முன்னெடுத்து வருகின்றோம்.
அபூபக்கருக்குப் பிறகு, கிலாபத்தின் கேடயம் என் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்(சுபு)வின் மீது ஆணையாக நான் இந்தப் பொறுப்பை விரும்பி இருக்கவில்லை. இது என்னை விட தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் இப்போது நாட்டின் நலனுக்காக, முஸ்லிம்களை வழிநடத்தும் பொறுப்பு என் முன்னால் உள்ளது என்ற அடிப்படையில் நான் எனது பதவியில் இருந்து ஓடிவிட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் இஸ்லாத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்தப் பதவிக்குரிய கடுமையான கடமைகளை என்னால் முடிந்த அளவு மேற்கொள்ளுவேன்.
எனது கடமைகளை சரிவர செய்வதற்கு அல்குர்ஆனின் வழிகாட்டலைத் தேடுவேன்; மேலும் நபி(ஸல்) அவர்களும், அபு பக்ர்(ரழி) அவர்களும் விட்டுச் சென்ற முன்மாதிரிகளைப் பின்பற்றுவேன். இந்த பணியில் நான் உங்கள் உதவியை நாடுகிறேன். நான் சரியான பாதையை பின்பற்றினால் என்னைப் பின்பற்றுங்கள். நான் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்றால், நாங்கள் வழிதவறாமல் இருக்க என்னைத் திருத்துங்கள்.
“என் இரண்டு தோழர்களுக்குப் பின், அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களைச் சோதிக்கிறான்; உங்களைக் கொண்டு என்னைச் சோதிக்கிறான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நேரடியாகக் கையாளக்கூடிய உங்களுடைய விவகாரங்கள் எதையும் வேறெவரிடமும் ஒப்படைக்கமாட்டேன். நான் நேரடியாகக் கையாள முடியாத விவகாரம் ஏதாவது இருப்பின், அதைத் திறம்பட கையாளக்கூடிய, நம்பிக்கைக்குரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் (ஆளுநர்கள்) திறம்பட செயல் புரிந்தால், அவர்களுக்கு வெகுமதி வழங்குவேன். தவறு புரிந்தால் தண்டிப்பேன்.”
முழு உலகும் அஞ்ஞானத்திலும், அநீதியிலும் மூழ்கிக்கொண்டிருக்கும் இத்தருவாயில் உமர்(ரழி) அவர்களின் ஆட்சியையொத்த ஆட்சியைக் கொண்டு மனிதகுலத்தை பாதுகாப்பாயாக. முழு முஸ்லிம் உம்மத்தையும் அந்த ஆட்சியை நோக்கிய பயணத்திற்காக தயார்படுத்துவாயாக! அநியாயக்கார ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இந்த உலகிலும், மறுமையிலும் தோல்வியையும், தண்டனையையும் வழங்குவாயாக!
மேலதிக குறிப்பு:
உமர் (ரலி) கலீஃபாவாகப் பொறுப்பேற்ற இரண்டு நாளில், அவரது கடுமையான இயல்பை தாம் எதிர்கொள்ள நேரிடுமோ என்று மக்களில் சிலர் பயந்ததை அவரால் உணர முடிந்தது. இவ்விஷயத்தைத் தாமே தெளிவுபடுத்திவிட வேண்டும் என்று விரும்பிய உமர் (ரலி) மிம்பரின் மீதேறி மக்களிடம் உரையாற்றினார். முஹம்மத் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் எவ்விதம் ஆட்சி புரிந்தார்கள், மக்களை எவ்விதம் நடத்தினார்கள், அவர்களிருவரும் மரணமடையும்முன் தம்மிடம் எப்படி திருப்தியுற்றிருந்தார்கள் என்பதை விளக்கிய உமர் (ரலி) பிறகு பின்வருமாறு தொடர்ந்தார்கள்.
“மக்களே! நான் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் பெற்றுள்ளேன். ஆகவே எனது கடுமை குறைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். குற்றம் புரிபவர்கள், ஒடுக்குபவர்கள் ஆகியோரிடம் மட்டுமே எனது கடுமை பிரயோகிக்கப்படும். யாரும் யாரையும் ஒடுக்கவோ பிறருடைய உரிமையில் எல்லை மீறவோ, நான் அனுமதிக்கவே மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்படும்வரை அவர்களது ஒரு கன்னத்தைத் தரையில் பதித்து மறு கன்னத்தில் எனது காலைப் பதிப்பேன். யார் பணிவுடனும், எளிமையுடனும் இருக்கிறார்களோ அவர்களிடம், என்னுடைய முந்தைய கடுமைக்கு நேர்மாறாக, எனது கன்னத்தைத் தரையில் பதிப்பேன்.
“மக்களே! நான் உங்களுக்குச் சில வாக்குறுதிகள் அளிக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றிப்பிடிக்க ஏதுவாய் அதைக் குறிப்பிடுகிறேன். உங்களது வரியிலிருந்தோ, அல்லாஹ் உங்களுக்கு அளிக்கும் போர் செல்வத்திலிருந்தோ அரசுக்கு உரியதையன்றி வேறெதையும் எடுக்க மாட்டேன்.
உங்களிடமிருந்து பெறப்படுவதை உரிய முறையிலன்றி நான் செலவு செய்யவே மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
அல்லாஹ் நாடினால் – நான் உங்களுடைய உதவித் தொகையை அதிகரிப்பேன்; உங்களுடைய எல்லைகளைப் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
எல்லைகளைக் காப்பதற்காக, உங்களை ஆபத்தான பகுதிகளுக்கு அனுப்ப மாட்டேன்; உங்களுடைய குடும்பங்களைவிட்டு நீண்ட காலம் நீங்கள் பிரிந்திருக்கச் செய்யமாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
நீங்கள் போருக்குச் சென்றால் நீங்கள் திரும்பி வரும்வரை உங்களுடைய பிள்ளைகளுக்கு நான் பொறுப்பு ஆவேன்.
அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களுடைய தீமைகளை விட்டு நான் விலகியிருக்கவும், நான் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கவும் எனக்கு உதவுங்கள். உங்களுடைய விவகாரங்களைச் சீரிய முறையில் நிர்வகிக்க எனக்கு நேர்மையான ஆலோசனை அளியுங்கள். அல்லாஹ் என்னையும் உங்களையும் மன்னிப்பானாக.”