துனிசியாவின் தலைநகர் துனிஸ்ஸில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு தொடர்ந்த கலவரங்களில் காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் பாதுகாப்புப் படையினர் டஜன் கணக்கான இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
நாடு முன்னோடியில்லாத வகையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் இச் சந்தர்பத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமுல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.
உள்நாட்டு பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வாலித் ஹ்கிமா கூறுகையில், 242 பேரை கலகப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெரும்பாலும் “இளைஞர்களும் வயது குறைந்தவரகளுமே சொத்துக்களை அழித்ததோடு , கடைகளையும், வங்கிகளையும் இரவோடு இரவாகவும் பல நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பகலிலும் கொள்ளையடிக்க” முயன்றதாக கூறினார்.
ஒரு தசாப்த காலமாக வறுமை, ஊழல் மற்றும் அநீதிக்கு எதிரான புரட்சியில், துனிசியா ஜனநாயகத்தை நோக்கி முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன் பொருளாதார பிரச்சினைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. நாடு திவால் நிலையையும், பொது சேவைகளில் ஒரு மோசமான நிலையையும் அடைந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த ஆண்டு 9 சதவீதத்தால் சுருங்கியதோடு, பொருட்களுக்கான விலைகள் உச்சத்தை அடைந்துள்ளன. மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படுகின்றனர்.
நாட்டின் வருமானத்தில் முக்கியமாகத் திகழ்ந்த சுற்றுலாத் துறை, 2015 இல் ஆயுதமேந்திய குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு பாரிய சரிவை சந்தித்தது. இந்நிலை கொரோனா தொற்றுநோயால் பாதாளத்தை அடைந்துள்ளது.
துனிசியாவில் 177,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 5,600 க்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் குறைந்தது 10 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெளிவான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. இதன் விளைவாக அதிகாரிகள் இவ் ஆர்பாட்டங்களை கலவரம் என்று விவரித்துள்ளனர்.
அரபுலகில் ஏற்பட்ட புரட்சிக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்த துனிசியாவில் அந்த புரட்சியினால் பென் அலி என்ற சர்வாதிகாரி தூக்கி எறியப்பட்டு, ஜனநாயக சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் இன்னுமொரு கொடுங்கோன்மையை அந்த நாடு சந்தித்து வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் செய்வது மட்டும் ஒரு சமூகத்தை மாற்றுவதற்கு போதாது; மாறாக அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னால் இருக்கின்ற சிந்தனை மாற்றம் அடிப்படையானது; அந்த சிந்தனைக்கு அடிப்படையான சித்தாந்தம் அவசியமானது. அந்த வகையில் இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையிலான ஒரு புரட்சியை அரபுலகு சந்திக்கும் வரையில் மக்களின் எதிர்காலத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது