துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகனும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான உறவுகளை சரி செய்வதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முகமாக கடிதங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை துருக்கிய வெளியுறவு மந்திரி மெவ்லட் கவுசோக்லு உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ரெசெப் தயிப் எர்டோகன், இம்மானுவேல் மக்ரோனுக்கு எழுதிய புத்தாண்டு செய்தியில், கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த பல தாக்குதல்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதாக கூறினார்.
அந்த கடிதத்திற்கு இந்த வாரம் பதிலளித்த மக்ரோன் “அன்புள்ள தயிப்” என்று ஆரம்பித்து ஒரு சந்திப்பிற்கு காத்திருப்பதாக “மிகவும் நேர்மறையான” கடிதமொன்றை அனுப்பியுள்ளார் என்று கவுசோக்லு கூறினார்.
மேலும் “ஐரோப்பாவிற்கு துருக்கியின் முக்கியத்துவத்தையும், துருக்கியுடன் நேர்மறையான உறவுகளை வளர்ப்பதற்கும், வரவிருக்கும் காலகட்டத்தில் நமது ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான அவரது விருப்பத்தையும் ஜனாதிபதி மக்ரோன் வெளிப்படுத்தி இருக்கிறார்“ என்று கவுசோக்லு கூறினார்.
மக்ரோனின் பதிலில் “இரு தரப்பினருக்கம் இடையிலான ஆலோசனைகள், பயங்கரவாதம், சிரியா மற்றும் லிபியா போன்ற பிராந்திய பிரச்சினைகள் மற்றும் கல்வியில் ஒரே கூட்டாக இயங்குதல்” என்பனவற்றில் அவரது ஒத்துழைப்பை முன்மொழிந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் மேலதிக விவரங்களை வழங்காமல் கடிதங்களின் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அங்காராவிடமிருந்து “எங்களுக்கு இப்போது உறுதியான சைகைகள் தேவை“ என்று கூறுகிறது.
அங்காராவின் சைப்ரஸுக்கு அருகிலுள்ள கிழக்கு மத்தியதரைக் கடல் நீரில் இயற்கை எரிவாயுவை அகழ்வதற்கான முடிவை எதிர்க்கும் முகமாக, ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியின் தனிநபர்கள் மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கு விரிவாக்கப்பட்ட தனிநபர்கள் பட்டியலை உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டு, சிரியா, லிபியா மற்றும் நாகோர்னோ–கராபாக் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் உட்பட, பல சர்வதேச பிரச்சினைகள் குறித்து அங்காராவும் பாரிஸும் முறண்பட்டுக் கொண்டன. இரு தனி நபர்களின் கடுமையான வார்த்தை மோதல்களினால் இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர பதட்டங்கள் வலுப்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான ஒர் சந்திப்பில், எர்டோகனின் கொள்கைகளை விடவும் துருக்கியர்கள் “வேறு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள்“ என்று மக்ரோன் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபரில், மக்ரோன் உலகளவில் இஸ்லாம் ஒரு “நெருக்கடியில்” உள்ள ஒரு மதம் என்று கூறினார். இது முஸ்லீம் உலகில் கடுமையான எதிர்ப்பலைகளை தூண்டியது, இதன் விளைவாக பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பு உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் மத்தியில் மேலோங்கியது.
இந்த அழைப்புடன் கைகோர்த்த எர்டோகன், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், மக்ரோனுக்கு மனநல பரிசோதனை தேவை என்று கூறினார்.
மேலும் மக்ரோனை “இஸ்லாமிய விரோத போக்குடையவர்” என்று குற்றம் சாட்டி பிரெஞ்சு வாக்காளர்கள் “விரைவில் மக்ரோனை அகற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.