தெற்காசியாவில் உள்ள இரண்டு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் தங்களுக்கிடையில் நிகழும் நீண்டகால முறுகளை தணிக்கும் வகையில் பங்களாதேஷிகளுக்கான அனைத்து விசா கட்டுப்பாடுகளையும் பாகிஸ்தான் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பங்களாதேஷுக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் இம்ரான் அகமது சித்திகிக்கும், பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.டி. ஷாஹ்ரியார் ஆலமிற்கும் இடையில் நடை பெற்ற சந்திப்பின் பின்னர், பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கையில் “பங்களாதேஷ் குடிமக்கள் மீது பாகிஸ்தான் விதித்த அனைத்து விசா கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே நீக்கிவிட்டதாக“ கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் “இரு தரப்பினரும் அனைத்து மட்டங்களிலும், இருதரப்பு தொடர்புகளை தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக“ கூறப்பட்டுள்ளது.
இக் கூட்டத்திற்குப் பிறகு அனடோலு ஏஜென்சியிடம் பேசிய சித்திக், “பாகிஸ்தான் பங்களாதேஷ் தரப்பிலிருந்து இதே பதிலுக்காக காத்திருக்கிறது. பாக்கிஸ்தானியர்களுக்கான பங்களாதேஷின் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன, அதனால்தான் நாங்கள் ஏற்கனவே அனைத்துப் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விட்டோம் என்று வெளியுறவு அமைச்சருக்கு அறிவித்தேன்“ என்று கூறினார்.
மேற்கு பாகிஸ்தானில் அனைத்து அதிகாரங்களையும் குவிப்பதற்கு எதிராக 1971 இல் நடந்த யுத்தத்தின் பின்னர், முன்னாள் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆக சுதந்திரம் பெற்றது.
1971 முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாகவே இருந்தன. 2009 இல் பங்களாதேஷ் 1971 இல் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர ஒரு தீர்ப்பாயத்தை நிறுவியபோது இப் பதட்டம் அதன் உச்சத்தை எட்டியது.
விடுதலைப் போரின்போது, பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியக் கட்சி, நாடு பிளவுபடுவதை தடுக்கும் முயற்சியாக பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பிராந்திய போட்டியாளரான இந்தியா, பங்களாதேஷ் போராளிகளை சுதந்திரத்திற்காக தூண்டியது.
தற்போதைய உறவின் நிலைபற்றி ஆய்வாளர்கள் கூறுகையில்; இந்தியாவும் பங்களாதேஷும் பகிர்ந்து கொள்ளும் ஆறுகள் மீதான இந்தியாவின் ஏகபோக கட்டுப்பாடு, எல்லைகளில் நிராயுதபாணியான பங்களாதேஷ் குடிமக்கள் கொல்லப்படுவது மற்றும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற்றப்பட்டது போன்ற இந்தியாவின் “அணுகுமுறையில் திருப்தியற்ற” பங்களாதேஷ் சமீபத்தில் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளைத் தேடத் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்களாதேஷ் பிரதிநிதி ஷேக் ஹசீனாவுக்கு ஒரு அரிய தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டதற்கு பதிலளித்த டாக்கா, “அனைவரிடமும் நட்பு யாருடனும் பகை இல்லை“ என்ற வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதாக அறிவித்தது.
வியாழக்கிழமை, பாகிஸ்தான் தூதர் டாக்காவில் உள்ள ஹசீனா மற்றும் வெளியுறவு மந்திரி ஏ.கே. அப்துல் மோமனை அழைத்து பல்வேறுபட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகத்தின் தனி அறிக்கை ஒன்றில் “நாங்கள் பாகிஸ்தானுடன் தொடர்புகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்று அமைச்சர் ஆலம் கூறினார்.
மேலும் தற்போதுள்ள தெற்காசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை South Asia Free Trade Agreement (SAFTA) விதிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், எதிர்மறையான பட்டியலைத் தளர்த்துவதன் மூலமும், வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலமும் அதிகமான பங்களாதேஷ் தயாரிப்புகளுக்கு அணுகலை வழங்க வேண்டும் என்று பாக்கிஸ்தானை வலியுறுத்திய ஆலம் “தற்போதைய வர்த்தக இருப்பு அதிகமாக பாகிஸ்தானுக்கு சார்பாக உள்ளது” என்று கூறினார்.
“1971 இல் பங்களாதேஷ் விடுதலைப் போரில் நடந்த இனப்படுகொலைக்கு” பாகிஸ்தான் உத்தியோகபூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆலம் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் தூதர், “இரு நாடுகளுக்கும் இடையிலான நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க“ 1974 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் கையொப்பமிடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் நகலை பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தார்.
விசாக் கட்டுப்பாடுகளை நீக்கியதைப் போல முஸ்லிம் தேசத்தின் மீது காலத்துவ சக்திகள் வரைந்த செயற்கையான எல்லைகளையும் இவ்விரு தேசங்களும் நீக்கி விட்டுமானால் அது நிலையான வெற்றிக்கு அடித்தளமாக அமையும். அவ்வாறே இன்றைய இந்தியாவும் ஓர் முஸ்லிம் தேசமான இருந்த நிலம் என்ற அடிப்படையில் அதனையும் மீட்க வேண்டிய பொறுப்பும் மீதமிருக்கிறது.