சில நாட்களுக்கு முன் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) ஆளும் மாநிலமான மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பல பகுதிகளில், இனவாத வன்முறைகள் வெடித்ததில் இருந்து நிலைமை பதட்டமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாண்ட்சூர் மற்றும் இந்தூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாரிகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு வன்முறை தொடர்பாக டஜன் கணக்கானவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாநில உத்தரப்பிரதேச அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி திரட்டுவதற்காக வலதுசாரி இந்து குழுக்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பேரணிகளாலேயே இந்த வன்முறைகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தூர் மாவட்டத்திலுள்ள, முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமத்தில் மோதல்கள் வெடித்தன, முஸ்லிம்கள் தொழுது கொண்டிருக்கும் ஒரு மசூதிக்கு முன்னால், இந்து குழுக்களின் உறுப்பினர்கள் பேரணியை நிறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுவே வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
காவிக் கொடிகளை ஏந்திக் கொண்டிருக்கும் ஒரு குழு போலீசார் முன்னிலையில் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷங்களை முழக்கமிட்டவாறு, மசூதியின் மேல் ஏறி, அதன் மினரத்தை சேதப்படுத்த முயன்ற ஒர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
“இந்த சம்பவம் வெட்கக்கேடானது, தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் யோகேஷ் தேஷ்முக் கூறினார்.
“கலகக்காரர்களுடன் ஒப்பிடுகையில், பொலிஸ் படை எண்ணிக்கையில் குறைவாக இருந்தமையே நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இந்த சம்பவத்தில் காவல்துறையினரின் ஈடுபாட்டைப் பொருத்தவரை, நாங்கள் அதை விசாரித்து வருகிறோம், கணிசமான ஆதாரம் அல்லது வீடியோ கிடைத்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இதுவரை வன்முறை தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்“ என்று தேஷ்முக் கூறினார்.
இச் சம்பவம் இடம் பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 25 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் பாஜகவின் இளைஞர் அணி உறுப்பினர்கள் ராமர் கோயிலுக்கு நிதி சேகரிக்க ஏற்பாடு செய்த மோட்டார் சைக்கிள் பேரணியால் முதல் மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், செவ்வாயன்று, மாண்ட்சூர் மாவட்டத்தின் டோரானா கிராமத்தில், ஒரு கும்பல் மசூதியின் மினரத்தை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.