பங்களாதேஷ் உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி, வங்காள விரிகுடாவில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய சர்ச்சைக்குரிய தீவுக்கு இரண்டாவது ரோஹிங்கியா அகதிகள் குழுவை நகர்த்த தொடங்கியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் 1,600 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பாஷன் சார் தீவுக்கு (Bhashan Char Island) அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியுறவு மந்திரி ஏ.கே. அப்துல் மோமன், சமீபத்திய குழுவில் 1,000 க்கு சற்று குறைவானவர்கள் “அழகான ரிசார்ட்” என்று அழைக்கப்படும் ரிசார்டிற்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறினார்.
“அவர்கள் தானாக முன்வந்து செல்கிறார்கள். அவர்கள் பாஷன் சார் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளனர், ஏனென்றால் அவர்கள் பாஷன் சார் சென்ற உறவினர்களிடமிருந்து, இது ஒரு சிறந்த இடம் என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள்” என்றும் முகாம்களை விட தீவு “100 மடங்கு சிறந்தது” அகதிகள் அங்கு அழைத்துச் செல்லுமாறு “வேண்டுகோள் விடுக்கின்றனர்” என்றும் மோமன் திங்களன்று AFP இடம் கூறினார்.
“பாஷன் சார் ஒரு அழகான ரிசார்ட், ஒரு சிறந்த ரிசார்ட். யாராவது அங்கு சென்றால் அவ்விடத்தை மிகவும் விரும்புவார்கள்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மாபெரும் குத்துபாலாங் அகதி முகாமில் இருந்து நூர் கமல், “எனது உறவினர்கள் இல்லாமல் நான் மாத்திரம் இங்கே (முகாம்களில்) தங்கியிருப்பதன் பயன் என்ன?” எனவே பாஷன் சாரிலுள்ள தனது உறவினர்களுடன் இணையப் போவதாகக் கூறினார்.
செராஜுல் இஸ்லாம் தனது ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் தானாக முன்வந்து தீவுக்கு செல்வதாகவும் “சர்வதேச சமூகம் எங்கள் பிரச்சினையை கையாளும் விதத்தை பார்க்கும் போது, இந்த முகாம்களில் எந்த விதமான எதிர்காலத்தையும் நான் காணவில்லை” என்றும் கூறினார்.
இதற்கிடையில், டிசம்பர் 4 ஆம் தேதி மேற்கொண்ட முதல் இடமாற்றத்திற்குப் பிறகு, பல ரோஹிங்கியாக்கள் தாங்கள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகக் AFP இடம் கூறி வருகின்றனர்.
13,000 ஏக்கர் (56 சதுர கி.மீ) கொண்ட பாஷன் சார் தீவு தனிமைப்படுத்தப்பட்ட தீவு என்று உரிமைக் குழுக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும் 100,000 ரோஹிங்கியாக்களை இடமாற்ற பங்களாதேஷ் அரசாங்கம் விரும்புகிறது.
ஐ.நா. இந்த செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்று கூறுகிறது.
“ரோஹிங்கியா குடும்பங்களுக்கு பாஷன் சாரிற்கு இடம்பெயர பண ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும், மிரட்டல் தந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சமூகத்தில் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் இடமாற்ற செயல்முறையை கேள்விக் குறியாக்குகின்றன” என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் தெற்காசியா பிரச்சாரகர் சாத் ஹம்மாடி கூறினார்.