துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், “எங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை ஒரு சிறந்த கட்டத்திற்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேலுடனான தங்களது உறவை மேம்படுத்த வேண்டும் என்று துருக்கி நம்புகிறது” என்று கூறினார்.
துருக்கி இஸ்ரேலுடனான உறவை முற்றிலுமாக துண்டிக்கவில்லை என்றும், உளவுத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி இடம் பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறினார்.
“தற்போது நமக்குள்ள முக்கிய பிரச்சனை இஸ்ரேலின் மேல் மட்டத்திலுள்ள தனிநபர்களை பற்றியது. பாலஸ்தீனத்திற்கான கொள்கையே எங்கள் சிவப்பு கோடு. பாலஸ்தீனத்திற்கான தற்போதுள்ள இஸ்ரேலின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது. அவர்களின் இரக்கமற்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை… உயர் மட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்தால், எங்களுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம்” என்று எர்டோகன் கூறினார்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சரிசெய்ய முயற்சித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய வலைத்தளமான Walla!, அலியேவ் இந்த வார தொடக்கத்தில் எர்டோகனை அழைத்து இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பல பரிந்துரைகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அஜர்பைஜான் வெளியுறவு மந்திரி ஜெய்ஹுன் பேராமோவ் கடந்த வாரம் இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி காபி அஷ்கெனாசியை அழைத்து இதே பிரச்சினையை பற்றி கலந்துரையாடியதாகவும், அஜர்பைஜான் அதன் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கான இஸ்ரேலின் கொள்கைகள் குறித்து எர்டோகன் ஒர் நிலைப்பாட்டில் இருந்தாலும், இஸ்ரேலுடனான உறவை ஜோபைடனின் நிர்வாகத்தில் மேம்படுத்தும் நோக்கில் இந்த மாத தொடக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் அங்காரா 40 வயதுடைய உஃபுக் உலுதாஸ்ஸை புதிய தூதராக நியமித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.