காஷ்மீரில் கொல்லப்பட்ட மூன்று தொழிலாளர்களை ஆயுததாரிகளாகச் சித்தரிப்பதற்காக, ஒரு இந்திய இராணுவ அதிகாரியும், இரண்டு பொது நபர்களும் இணைந்து, அவர்களின் இறந்த உடல்களில், ஆயுதங்களை நட்டதாக இந்திய பொலிசார் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினர்.
ஜூலை மாதம் இடம் பெற்ற இத் தொழிலாளர்களின் கொலைகள் இந்திய நிர்வாக காஷ்மீரில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது தொடர்பாக தற்போது கேப்டன் பூபேந்திர சிங் மீது கொலை, சதி மற்றும் பிற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் இப்போது இராணுவ தடுப்புக் காவலில் இருப்பதாகவும் அந்த நேரத்தில் அவருடன் இருந்த இரண்டு பொது நபர்களும் போலீஸ் தடுப்புக் காவலில் இருப்பதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு பொலிஸ் அறிக்கையில், அந்த அதிகாரியும் அவருடன் இருந்த இருவரும் “இத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்தற்கு அவர்களின் அடையாளங்களை சிதறடித்து சட்டவிரோதமாக வாங்கிய ஆயுதங்களையும் பொருட்களையும் அவர்களின் சடலங்களில் நட்டிருப்பதாக” குறிப்பிடுகிறது.
செப்டம்பர் மாதம், இந்திய இராணுவம், ‘‘பொதுமக்கள் கொல்லப்பட்டால் படையினருக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை என்ற சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்’’ (AFSPA) கீழ் தனது வீரர்கள் அதிகாரங்களை மீறியதாக ஒப்புக் கொண்டது.
தெற்கு காஷ்மீரில் உள்ள அம்ஷிபோரா கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்த மூன்று பேரும் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து மூன்று ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இராணுவம் ஆரம்பத்தில் கூறியிருந்தது. இச் சடலங்கள் அவசர அவசரமாக எல்லைப் பகுதியில் புதைக்கப்பட்டன.
ராஜோரியின் தொலை தூர மலைப் பகுதியில் உள்ள இத் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களிலிருந்தே அவர்களை அடையாளம் கண்டு கொண்டதாகவும், இம் மூவரும் காஷ்மீரில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்களில் வேலை தேடுவதற்கு சென்றதாகவும் இக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சர்ச்சை இந்திய இராணுவம் மற்றும் காவல்துறையினரின் தனித்தனியான விசாரணைகளைத் தூண்டியது. வழக்கமான விதி முறைகளுக்கு மாற்றமாக கொலைகள் இடம் பெற்ற பின்னர் துப்பாக்கிச் சூடு குறித்து மட்டுமே தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இது விதி முறைகளை மீறுவதாகவும் போலீஸ் கூறுகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வது நிறைவடைந்துள்ளதாகவும், அதற்குறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவம் கடந்த வாரம் கூறியது.
ராஜோரி நகரைச் சேர்ந்த உரிமை ஆர்வலர் குஃப்தார் அஹ்மத் சவுத்ரி, இந்த மூன்று பேருக்குமான நீதி என்பது ஒரு “நீண்ட யுத்தம். விசாரணை எப்போது தொடங்கும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். குடும்பங்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டம் தற்போதே ஆரம்பித்துள்ளது” என்று கூறினார்.
காஷ்மீரில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த காலங்களில் இராணுவம் பண பலன்கள் மற்றும் பதக்கங்களை கோருவதற்காக பல பொதுமக்களை அரங்கேற்றப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் “கிளர்ச்சியாளர்களாக” சித்தரித்து கொன்றதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.