நாட்டிற்கு செழிப்பைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த நமது கதாநாயகன் கோட்டபாய ராஜபக்ஷவின் ஒரு வருட ஆட்சியின் நிறைவில், வரலாற்றில் முதன் முறையாக, இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒரு ‘திவாலான நாடு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட வணிக இறக்குமதி கடன் பத்திரங்களை Import credit letters அல்லது கடன் பத்திரங்களை LCs (Letter of Credit) வெளிநாட்டு வங்கிகள் ஏற்க மறுத்துள்ளமை இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இலங்கையின் ஒரு முன்னணி தொழிலதிபர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது, இலங்கை வங்கியால் Bank of Ceylon தனக்கு வழங்கப்பட்ட மூன்று LC கள் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மூன்று பெரிய வங்கிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது வணிக வாழ்க்கையில் இவ்வகையான ஒர் சம்பவம் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார். இலங்கை, தான் பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாத ஒரு நாடு என்று 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச தரவரிசையில் இலங்கையை தரமிறக்கியிருப்பதனால் இவ் LC களை நிராகரிப்பதாக சர்வதேச வங்கிகளால் காரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் வங்கிகளால் வழங்கப்பட்ட LC களை நம்ப முடியாது, எனவே நேரடி பண பரிவர்த்தனை அல்லது வேறொரு வெளிநாட்டு வங்கியால் வழங்கப்பட்ட உத்தரவாதம் ஆகியவற்றை மாத்திரமே ஏற்றுக் கொள்ள முடியும் என்று சர்வதேச வங்கிகள் கூறியுள்ளன.
இப் பிரச்சினையைப் பற்றி பிரதமரிடம் கூறிய போது அவர் வெளிநாட்டு வங்கி ஒன்றிடமிருந்து உத்தரவாதத்தை பெறுமாறு கூறுகிறார். வெளிநாட்டு வங்கியிடமிருந்து உத்தரவாதத்தைப் பெறும்போது, அவர்கள் அந்த LC களின் மதிப்புக்கு நிகரான பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கும் நேரடி பண பரிவர்தனைக்கும் எந்த வித்தியாசம் கிடையாது. ஜனாதிபதி செயலாளரிடம் கூறிய போது, அவர் ஜனவரி 16ஆம் திகதி வரை காத்திருக்குமாறு கூறுகிறார்; ஜனவரி 16 என்ன நடக்கும் என்று வினவியதற்கு இது வரை அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அத் தொழிலதிபர் கூறியுள்ளார்.
11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஃபிட்ச் சர்வதேச தரவரிசையில் Fitch International Rankings, இலங்கையை சர்வதேச பரிவர்த்தனைகளில் B- முதல் C.C.C வரை தரமிறக்கியது. முன்னதாக மூடியின் தரவரிசை Moody’s ranking இலங்கையை B3 இலிருந்து Caa1 ஆக தரமிறக்கியது. இந்த இரண்டும் தரவரிசையில் ஒரே மட்டத்தில் உள்ளவை. (அதாவது, பரிவர்தனைகளின் போது இலங்கையை ‘கணிசமான ஆபத்தான’ நாடு என்று பெயரிடுள்ளது). இத்தகைய ஆபத்தான நாடுகளுடன் பரிவர்தனைகளை மேற்கொள்ள அஞ்சும் சர்வதேச வங்கிகள், மேலே குறிப்பிட்டபடி இலங்கை வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் பத்திரங்களை ஏற்க மறுத்துவிட்டன.
ஃபிட்சின் தரவரிசையில் இலங்கை தரமிறக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், சமீபத்தில் ராஜபக்ஷ அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைத்த தவறான புள்ளிவிபரங்களையும் இலங்கை ஒரு செல்வமிக்க நாடு என்ற பொய்யான விம்பத்தையும் ஏற்க ஃபிட்ச் மறுத்துவிட்டது என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநரும் பிரபல பொருளாதார நிபுணருமான டபிள்யூ.ஏ. விஜேவர்தன டிசம்பர் 14 அன்று Daily FT க்கு அளித்த விரிவான அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத அளவு -16.3 சதவீதமாகக் குறைந்தது; இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இது முதல் காலாண்டில் -1.6 சதவீதமாகக் குறைந்திருந்தது. தற்போது இது -5.3 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.