இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் தீர்க்கப்படும் வரை இஸ்லாமாபாத்தால் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது என்பதை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி “பாலஸ்தீன பிரச்சினைக்கு உறுதியான நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை நாங்கள் இஸ்ரேலுடன் ஒரு உறவை ஏற்படுத்த மாட்டோம்; அது முடியாது” என்று இஸ்ரேல் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மந்திரிக்கு திட்டவட்டமாக முன்வைத்துள்ளதாக செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறினார்.
குரேஷி ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கான விஜயத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, இஸ்லாமாபாத் இஸ்ரேலுக்கு ஒரு தூதரை ரகசியமாக அனுப்பியதாக வந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் முகமாக அவரது அறிக்கை வந்துள்ளது.
முக்கியமாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகளை இஸ்லாமாபாத் மறுக்கிறது.
இஸ்ரேலை அங்கீகரிப்பதற்காக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் அழுத்தம் குறித்த அறிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த குரேஷி, “பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் பற்றி பாகிஸ்தானியர்கள் கொண்டுள்ள உணர்வுகள் மற்றும் உணர்வுகளின் ஆழம்” குறித்து தனது ஐக்கிய அரபு அமீரக பிரதிநிதியிடம் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளதாக கூறினார்.
இஸ்ரேலை அங்கீகரிக்க இஸ்லாமாபாத்தின் மீதான அழுத்தம் குறித்த அறிக்கைகளை மறுத்த குரேஷி “முதலில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை அப்படி எந்த அழுத்தமும் இருக்காது. இரண்டாவது நாங்கள் பாக்கிஸ்தானின் நலன்களைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும், எந்தவொரு அழுத்தத்தினாலும் அல்ல. எங்களுக்கென்று ஒரு கொள்கை உள்ளது, அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்” அத்துடன் “ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மந்திரி, இவ் இரண்டு விஷயங்களிலும் எங்கள் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டுள்ளார்” என்று கூறினார்.
மேலும் பிரதமர் இம்ரான் கான் “இது தொடர்பாக எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
ஆனால் கடந்த மாதம் இம்ரான் கான், இஸ்லாமாபாத் இஸ்ரேலை அங்கீகரிக்க சில “நட்பு நாடுகளின்” அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறியது சிறிது காலம் பாகிஸ்தானில் தலைப்பு செய்தியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.