இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய பிரேரணை ஒன்றை, வருகின்ற மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தின் போது அமெரிக்கா முன்மொழிய உள்ளதாக சண்டே டைம்ஸ் அறிவுத்துள்ளது.
இந்த பிரேரணைக்கான ஆரம்பகட்ட பணிகள் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னேற்பாடுகளிள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக சண்டே டைம்ஸ் கூறுகிறது.
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பிலான முன்னெடுப்புக்களின் ஒரு கட்டமாக ஐ.நா.வின் அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான கீழ் நிலை செயலாளர் நாயகம் ரோஸ்மேரி ஏ. டிகார்லோ அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு உயர்மட்ட விஜய மொன்றை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது இராஜதந்திர மட்டங்களில் இடம்பெற்று வருகின்றன.
2015 ஆம் ஆண்டில் முந்தைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்ட ஐ.நாவின் தீர்மானமான 30/1 இல் இருந்து இலங்கை அரசு விலகுவதாக அறிவித்ததை அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு புதிய பிரேரணையை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை வந்துள்ளது.
இலங்கையில் போருக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் ஆகியவற்றைக் கையாளும் தீர்மானங்கள் வெவ்வேறு கட்டங்களில் இரண்டு முறை திருத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.