தென் சீனக் கடலுக்கு வழக்கமான பயிற்சிகளுக்கு சென்ற போர் கப்பல்கள் குழுவை கண்காணிக்க தைவான் தனது படைகளை அணிதிரட்டியதால், சீனாவின் புதிய விமானம் தாங்கி போர் கப்பல் ஷாண்டோங்கின் தலைமையில் தைவான் நீரிணை வழியாகப் தாம் பயணித்தாக சீனாவின் கடற்படை திங்களன்று தெரிவித்தது.
இது அமெரிக்க போர் கப்பல், தைவான் நீரிணை வழியாக பயணித்த மறு நாள் இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய இக் கடல் பிராந்தியத்தில் சீனா பிராந்திய உரிமைகோரலைச் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நடவடிக்கை தொடர்பாக கருத்துச் தெரிவித்த சீனக் கடற்படை, தென் சீனக் கடலில் பயிற்சிகளுக்குச் சென்ற ஷான்டோங் மற்றும் அதனுடன் சென்ற கப்பல்கள் முக்கியத்துவம் வாய்ந்த தைவான் நீரிணை வழியாக ஞாயிற்றுக்கிழமை “சுமூகமாக” பயணித்ததாகக் கூறியுள்ளது.
மேலும் அது கருத்துத் தெரிவிக்கையில் இந்த பயிற்சிகள் “வருடாந்த திட்டங்களின் அடிப்படையில் செய்யப்படும் சாதாரண ஏற்பாடுகளின்” ஒரு பகுதியாகும்; “எதிர்காலத்தில், பயிற்சி தேவைகளின் அடிப்படையில் இதேபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்வோம்” என்று கூறியது.
பெய்ஜிங் தைவானை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதால், இந்த நீரிணை வழியாக இப் போர் கப்பல்கள் பயணித்தது சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஜனநாயக ரீதியாக ஆட்சி செய்யும் இத் தீவை, சமீபத்திய மாதங்களில் சீன விமானப் படைகள் கிட்டத்தட்ட தினசரி வான்வெளி ஊடுருவல்கள் மூலமாக அத்துமீறி வருவதாக தைவான் கூறுகிறது.
தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம், ஷாண்டோங் நான்கு போர்க்கப்பல்களுடன் வந்ததாகவும், வியாழக்கிழமை வடக்கு சீன துறைமுகமான டாலியனில் இருந்து புறப்பட்டதாகவும் கூறுகிறது. அதன் இணையதளத்தின் ஒர் அறிக்கையில், இக் குழு தொடர்ந்து தெற்கு நோக்கி செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சீனக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆறு போர்க்கப்பல்களையும், எட்டு இராணுவ விமானங்களையும் அனுப்பியதாக தைவான் தெரிவித்துள்ளது.
மேலும் “தைவான் இராணுவம் தனது தாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்குமான நம்பிக்கையையும் திறனையும் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.