இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலுக்கான தூதரை வாபஸ் பெற்ற துருக்கி தற்போது புதிய தூதரை நியமித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முடிவை எதிர்த்து, முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் போராட்டங்களை மேற்கொண்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட கொடிய தாக்குதல்கள் தொடர்பாக மே 2018 இல் அங்காரா தனது தூதரை வாபஸ் பெற்றது.
துருக்கி முதன்முதலில் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை, 2010 இல் துருக்கிக்கு சொந்தமான கப்பலில் பாலஸ்தீயர்களுக்காக உதவிப் பெருட்களை கொண்டு சென்ற 10 துருக்கிய ஆர்வலர்களை இஸ்ரேலிய இராணுவம் கொலை செய்த காரணத்திற்காக முறித்துக் கொண்டது.
2016 இல் உறவுகளை புதுப்பித்து கொண்ட துருக்கி மீண்டும் 2018 இல் முறித்து கொண்டது. இஸ்ரேலுக்கான புதிய தூதராக 40 வயதுடைய உஃபுக் உலுதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கு ஒப்பந்தங்களை மேற் கொண்டதை தொடர்ந்து வந்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் அரபு நாடுகள் தங்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம் என்று பாலஸ்தீனிய தலைமைத்துவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது சுயநிர்ணயத்தை அடைவதற்கான பாலஸ்தீன முயற்சிகளை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்குக்கான திட்டம் என்று ஒன்றை டிரம்ப் முன்மொழிந்தார், இது இஸ்ரேலுக்கு மிகுந்த ஆதரவளித்ததோடு பாலஸ்தீனியர்களால் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டது.
முஸ்லீம் உலகில் தன்னை பாலஸ்தீனியர்களின் முயற்சிக்கு தீவிர ஆதரவாளராக நிலைநிறுத்திக் கொள்ளும் ரெசெப் தயிப் எர்டோகன் ட்ரம்ப் முன்மொழிந்த மத்திய கிழக்குக்கான திட்டம் மற்றும் சமீபத்திய இயல்பாக்குதல் ஒப்பந்தங்கள் ஆகிய இரண்டையும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.